தவயோகிகள் அனைவரும் காட்டுக்குள் சென்று தான் தவம் செய்தார்கள்.
அதனால் காட்டிற்குள் போய்த் தவமிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காடு எங்கே இருக்கின்றது…? அதில் தவம்
என்பது என்ன…?
நம்மிடம் பல காடுகள் இருக்கின்றது ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை.
காட்டிற்குள்ளே என்றால் இந்த உடலான காட்டிற்குள் போய்த்தான் எல்லா எண்ணங்களையும்
எண்ணுகின்றோம்.
இந்த மனித உடல் எப்படி உருவானது?
காட்டில் இருக்கின்ற தாவர இனங்கள் எல்லாம் புழுக்களாகப் பூச்சிகளாக
ஆடாக மாடாக இருந்து எல்லாம் தின்று விட்டு அதில் விளைந்த அத்தனை குணங்களும்
உணர்வுகளும் நம் உடலில் காடாக இருக்கின்றது.
உடலான இந்தக் காட்டிற்குள்ளே புலி இருக்கின்றது பாம்பு இருக்கின்றது
தேளும் இருக்கிறது நரியும் இருக்கிறது நாயும் இருக்கிறது எல்லா நிலையும்
இருக்கின்றது.
அது மட்டுமா?
ஆக்ரோஷமான நிலைகளில் ஒருவனை அழித்து விடுவேன்… கொலை செய்து விடுவேன்…! இந்த உணர்வுகள் உடலில்
சேர்த்துப் பேயாகவும் இருக்கிறது பிசாசாகவும் இருக்கிறது பூதமாகவும் நமக்குள்
இருக்கின்றது.
பேய் என்றால் எப்படி வருகிறது? நாம் ரோட்டில்
போய்க் கொண்டே இருப்போம். ஒரு மனிதன் ரோட்டில் அடிபட்டுப் போனால் “ஆ… இப்படி ஆகிவிட்டதே…!” என்கின்றோம்.
அவன் ஆசையில் இறந்திருப்பான். அதே ஆசையில் “என்ன ஆனதோ..!” என்று நாம் நினைக்கும் போது
அந்த ஆத்மா நம்மிடம் வந்து விடுகின்றது.
இந்த உடலான காட்டில் பேய் குடி கொண்டு விடுகின்றது. நம்மை இல்லாதபடி
செய்து உடலுக்குள் ஆட்டிப் படைக்கின்றது.
காடு எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்றோம். காட்டில் இருக்கும்
சக்தி முழுவதும் நம்மிடம் (உடலுக்குள்) இங்கேயே இருக்கின்றது. நம் உடல் இது ஒரு
பெரிய காடு.
அதைக் காட்டுவதற்குத்தான் ஐயப்பன் கோயிலைக் காட்டியது. அந்தக்
காட்டிற்குள் போகும் போது புலியையும் சிங்கத்தையும் யானையும் யாரும் நினைக்கின்றது
இல்லை.
அங்கே மிருகங்களை எப்படி எண்ணுவதில்லையோ அதே மாதிரி உன் வாழ்க்கையில்
மற்றவர்கள் திட்டியது பேசினவர்களை எல்லாம் விட்டு விடு.
உன் உடலுக்குள் இந்த மிருகங்கள் எல்லாம் இருக்கின்றது. அந்த மிருகமான
உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதபடி ஞானிகளுடைய நிலைகள் நீ எண்ணு. நீ இப்படிப்
போ…! என்று காண்பிக்கின்றார்கள். இதை யாரும் சொல்வதற்கு
இல்லை.
ஆனால் தீமைகளை ஜீவன் பெற விட்டு விட்டோம் என்றால் நம் நல்ல குணங்கள்
எல்லாம் பம்மி ஒடுங்குகின்றது. அப்பொழுது நல்லதை செய்வதற்கே முடியவில்லை…. என்ன செய்வது…? என்று
1.வேதனையை அதிகமாகக் கூட்டிவிடுகின்றீர்கள்.
2.உடலான காட்டில் தேளும் பாம்பும் ஜீவன் பெறுகின்றது.
3.அதைக் கண்டு நாம் பயந்து நடுங்குகின்றோம்.
இவ்வாறு ஆன பின் இந்த உயிராத்மா அது தாங்காதபடி என்ன செய்கின்றது? இந்த மனித உடலை விட்டே ஓடிப் போய்விடுகின்றது.
நான் சாகிறேன். என்ன விடுடா… நான் போகிறேன்…!
என்று உயிர் வெளியில் போய்விடுகின்றது.
ஏனென்றால் விஷத்தைக் கொஞ்சம் அதிகமாக நினைத்தாய் அல்லவா. அதை நீ
இதிலிருந்து பார் என்று அதற்குத்தக்க உடலைக் கொடுக்கின்றது.
1.பயந்து நடுங்கிய இந்த உணர்வுகளுக்குத் தக்க
2.இந்த விஷத்தின் தன்மை கொண்டு உயிர் அடுத்த உடலை உண்டாக்குகின்றது.
3.நாம் எங்கே தப்பிப் போக முடிகின்றது? எதிலே
தப்புகின்றோம்?
அம்மா அப்பா எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கின்றார்கள்.
அம்மா அப்பாவை நாம் மதிக்காமல் இருந்தோம் என்றால் அந்த கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை
நாம் என்ன செய்கின்றோம்?
நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது என்றால் அவை எல்லாம் அம்மா அப்பா
கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது என்ற நினைப்பே வருவது இல்லை.
அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தவுடனே என்ன சொல்வார்? அட.. உனக்கென்னப்பா சீமான் வீட்டுப்பிள்ளை…!” என்று
சொன்னால் நமக்கு மிகுந்த கௌரவம் வந்து விடுகிறது.
காசுக்காக வேண்டித்தான் நம்மை இப்படிப் புகழ் பாடுகின்றார்கள். புகழ்
பாடப் போகும் போது அதை ரசித்துக் கேட்டுக் கொள்கின்றோம்.
வீட்டில் அப்பாவோ அம்மாவோ…! ஏனப்பா… பணத்தைக் கொஞ்சம் பார்த்துச் செலவழித்துக் கொள்ளப்பா..! என்று
சொல்வார்கள்.
அதைக் கேட்ட பின் பையன் என்ன சொல்வான்?
உங்களுக்கு எப்போது பார்த்தாலும் நச்… நச்… என்று இப்படிச் சொல்லிக் கொண்டே
இருப்பீர்கள். இது தான் உங்கள் பிழைப்பு… “போங்கள்…!”
என்று இப்படிச் சொல்லச் சொல்கின்றது.
ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வு அவர்களுடைய ஆசை நம்மிடமிருந்து காசைப்
பறிக்க வேண்டும் என்று புகழ்ந்து பேசி எப்படியோ பையனிடமிருந்து வாங்கி விட்டு போய்
விடுகின்றார்கள்.
ஆனால் அவர்கள் விஷத் தன்மையை இங்கே (பையனுக்குள்) விட்டு
விடுகின்றார்கள். அதனால் பையன் குடும்பத்துடன் இணைந்து அம்மா அப்பா சொல்லும்
உண்மையை உணர விடாமல் போய்விடுகின்றது.
இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?
காட்டிற்குள்ளே மிருகத்திடம் சிக்க வைத்த மாதிரி நாம் இந்த உடலில்
அந்தக் காடான நிலையில் மிருகத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றோம்.
ஆகவே நமக்குள் காடும்
இருக்கின்றது வனமும் இருக்கின்றது நல்ல பூஞ்சோலையும் இருக்கின்றது,
தாவர இனத்திலிருந்து வந்த பூஞ்சோலையின் உணர்வுகள் நாம் நுகர்ந்தது
நல்ல எண்ணங்களாக வருவதும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்தக் காட்டிற்குள்ளே தான் அந்தத் தவத்தை எடுக்கச் சொல்கின்றோம்.
யாரை..? எதை…?
காட்டுக்குள் இருக்கக்கூடிய இந்த மிருகங்கள் தேள்கள் பாம்புகள் பேய்கள்
நம்மை ஒன்றும் செய்யாதபடி அந்த மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து
1.எங்கள் பார்வை நல்லதாக இருக்கவேண்டும்.
2.அருள் வழியில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.அப்பொழுது நம் உணர்வுகள் ஒளியாகின்றது.
இது வளர வளர நம்மிடம் இருக்கக்கூடிய பிறருடைய துன்பமான நிலைகள் அந்த
மிருக உணர்வு கொண்ட நிலைகளை இயக்காதபடி அதைச் செயலிழக்கச் செயதுவிடுகின்றோம்.