ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2017

யாம் கொடுக்கும் வாக்கு சாதாரணமானதல்ல...!

அழியா பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத்தான் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்ந்த உணர்வே நமக்குள் அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது.
1.இது தான் அரங்க நாதன் - நம் உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வு எதுவோ அது உயிரிலே பட்டு நாதங்களாக அந்த உணர்வாகின்றது.
3.ஆண்டாள்.. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகின்றது.

பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வு அரங்கநாதமாகித் தீமைகளை அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.

தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி நாம் பெறுகின்றோம் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். உங்கள் உடல் நோயாக இருந்தால் அடுத்து நீங்கள் எண்ண வேண்டியது
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் நலம் ஆக வேண்டும் என்ற இதை நீங்கள் மனதில் எண்ணினால் போதும்.

இப்படி எண்ணும் உணர்வுகள் அரங்கத்தில் நாதங்கள் ஆகின்றது. இதை ஏங்கிப்பெறும் போது நாம் அருள் உணர்வு பெறுகின்றோம். இதே உணர்வுகள் வந்தால் உங்கள் நோய்கள் நிச்சயம் குறையும்.

உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் சதா உணர்த்தி வருகின்றேன். வாக்காக வித்தாகப் பதியச் செய்கின்றேன்.

இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் அந்தச் சக்திகளைப் பெற்று உங்கள் நோயை நீக்க முடியும்.

மகரிஷிகள் உணர்வை வாக்கால பதிவு செய்யப்போகும் பொழுது அந்தப் பதிவை மீண்டும் எண்ணப்போகும் போது அது தான் உங்களுக்கு நல்லதாகின்றது.

மருந்து கொடுத்து அல்ல. (நான் கொடுப்பது மருந்து அல்ல) மருந்தைச் சாப்பிடுவதற்கு முன் யாம் கொடுக்கும் வாக்கு என்ன செய்யும்? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.

மகரிஷிகளின் உணர்வின் தன்மை பதிவாக்கப்படும்போது
1.நோய் நீக்கும் வலிமையான சக்தி பெறுகின்றீர்கள்
2.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

குடும்பத்திற்குள் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
1.என் பையனுக்கு அந்த நோயெல்லாம் நீங்க வேண்டும்.
2.அந்த அருள் கிடைக்க வேண்டும்.
3.அவன் நல்லவனாக வேண்டும் என்று நீங்கள் கேட்டால்
4.அதன்படியே நடக்கும் என்று இந்த வாக்கினைப் பதிவு செய்தால் உடனடியாக வேலை செய்யும்.

என்னிடம் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் என்று இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் அதை என் காதில் கேட்டால் அதை நுகர்ந்து என் அரங்கத்தில் என்ன நடக்கும்?

நீங்கள் ஆயிரம் பேர் சேர்ந்து சொல்லும் போது எனக்குள் அது தான் ஆட்சி புரியும். இந்த உணர்வு எனக்குள் ஆளுகின்றது ஆண்டாள். நானும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு வாழ வேண்டியது தான்.

உங்கள் கஷ்டத்தை நான் நிவர்த்தி செய்வது எங்கே?

பல தடவை ஞாபகப்படுத்துகின்றேன். அது நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் குடும்பம் நலமாக வேண்டும்.
2.என் குழந்தைக்கு நலமாக வேண்டும்.
3.என் உடல் வலி நீங்கி நலமாக வேண்டும்.
4.அதற்குண்டான அருள் சக்திகள் எனக்கு வேண்டும் என்று கேட்டால்
5.”அதன்படியே நடக்கும்... நீங்கள் எண்ணியது நடக்கும்...!என்று இந்த வாக்கினைப் பதிவு செய்தால் உடனடியாக வேலை செய்யும்.

இந்த உணர்வை நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் எண்ணம் இணைந்து வாழ்ந்து அந்த உணர்வினை இயக்கும் உங்களுக்கு நல்லதாகும் என்று நான் பல முறை சொல்கிறேன்.

ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியது எதுவோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்கள் உடலுக்குள்ளே படர்கின்றது.
3.அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை சொல்லுகின்றேன்.

இதை எடுத்துக் கொள்வது இல்லை. ஏனென்றால் யாரோ செய்கிறார் எவரோ செய்கிறார் என்று தான் எண்ணுகின்றீர்கள்.

சாதாரணமாக நாம் ரோட்டில் போய்க்கொண்டே இருக்கின்றோம். ஒரு மாடு அழகான நிலையில் இருக்கின்றது என்றால் பார்த்து ரசிக்கின்றோம்.

அது திடீரென இப்படித் திரும்பியது என்றால் "ஆ..." என்று அலறுகின்றோம். அந்த உணர்வின் தன்மை பயமான பிற்பாடு என்ன செய்கின்றது? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கின்றது.

பயமான உணர்வு கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பதட்டம் நிற்பது இல்லை. அப்போது எது இயக்குகிறது? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகின்றது.

ஆகவே இதைப்போல
1.மகரிஷிகளின் அருளைப் பெறவேண்டும்
2.இருளை அகற்றும் அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும்
என்ற இந்த உணர்வை ஏங்கினால்
3.இருளைப் போக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் இயக்கும்.
4.சிந்தித்துச் செயல்படும் திறன் உங்களுக்குள் வரும்.

நீங்கள் எளிதில் பெறச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கின்றேன். சாமி செய்து தருவார் சாமி செய்வார் என்று என்னைத் தான் நம்புகின்றீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதே இல்லை.

காற்றில் ஞானிகள் உணர்வு படர்ந்துள்ளது. அந்த ஞானிகள் எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். நீங்கள் இதை எடுக்க முடியும்.

திட்டியவனை எண்ணிப் பதிவாக்குகின்றீர்கள். பதிவான பின் என்னைத் திட்டினான்...! திட்டினான்....! என்று எண்ணுகின்றீர்கள்.

அதைப் போல ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்கினால் ஞானிகளின் உணர்வுகளும் எண்ணங்களும் பெருகும். இருளை அகற்ற முடியும்.

இது ஒன்றும் கஷ்டமில்லை.