ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2017

“காசு ஆசை…!” என்ற உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நேரடியாக அனுபவம் கொடுத்து என்னைப் பக்குவப்படுத்தினார் குருநாதர்

சஞ்சீவி மலை மேல் ஒரு சாமியார் இருக்கின்றார். அவர் வேறு ஒன்றுமே சாப்பிடுவது இல்லை. அவரைப் போய்ப் பார்த்து விட்டு வரலாம் என்று என் மருமகனும் நானும் (ஞானகுரு) சென்றோம்.

ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) சித்தாகி இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது.

சஞ்சீவி மலைச் சாமியார் ஒரு இராமலிங்க அடிகள் பக்தர். அதனால் அவர் வெறும் கடலைப் பருப்பு தான் சாப்பிடுகின்றார். எந்த ஆசையும் இல்லை. ஏதோ வருகின்றவர்களுக்கு ஆசி கொடுக்கின்றார் என்று சொன்னார்கள்.

சரி என்று இரண்டு பேரும் போனோம்.

அங்கே போகும்போது வழியில் ரோட்டில் பார்த்தால் புது நோட்டு (பணம்) கீழே கிடந்தது. யாரும் போட்டார்களோ… இல்லையோ…! அல்லது குருநாதர் அந்த வேலையைச் செய்தாரோ…, தெரியாது…!

அது சில நேரங்களில் காசு இல்லை என்று நான் சென்றால் குருநாதர் இந்த வேலையைச் செய்வார். எங்கேயோ போய் நான் ஏதாவது செய்தாலும் அந்த இடத்தில் ஏதோ ஒரு வகையில் பணம் வரும்.

அந்த மாதிரி நடந்திருப்பதால் எனக்கு அந்தக் கலக்கம் வரவில்லை.

ஆனால் மருமகனும் வருகிறார் நானும் போகிறேன். பணத்தைப் பார்த்ததும் சரி… “யாராவது ஒரு ஆள்…! அட.., நம் மருமகன் தானே அவர் எடுக்கட்டும்..” என்று இல்லை.

அந்த ஆசை…! நானும் வேக வேகமாக ஓடிப் போய் எடுக்கின்றேன். அவரும் வேக வேகமாக ஓடிப் போய் எடுக்கின்றார்.

அப்போது அந்த இடத்தில் குருநாதர் காட்டுகின்றார்.

உன் மருமகன்தானே…! எடுத்து உன் கையில் கொடுப்பார் அல்லவா. நீ மருமகனுக்குச் செய்யலாம் இல்லை. அப்போது அவர் எடுக்கின்ற வரையிலும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் அல்லவா..!

இந்தக் “காசு  ஆசை…” என்ற நிலையில் அவருக்கு முந்திப் போய் நீ “நான் பணத்தை எடுக்க வேண்டும்… என்று வருகின்றது இல்லையா…!

இது நடந்த நிகழ்ச்சி. அனுபவத்தில் கொடுக்கின்றார்.

அந்த உணர்வுகள் தான் எடுக்க வேண்டும் தனக்கு வேண்டும் என்ற ஆசை தான் வருகின்றது என்பதை அனுபவபூர்வமாக அந்த இடத்தில் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அப்போது இந்த உணர்வு உறுத்தினவுடனே எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டேன்.

அவர் என்ன செய்கிறார்? நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுக்கின்றார்.

எனக்கு எதற்கப்பா..? நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

பிறகு சஞ்சீவி மலை மேல் போனவுடனே அந்தச் சாமியார் அவர் ஆசையின்றி எப்படி இருக்கின்றார்…? என்று அவருடைய நிலைகளை முழுவதும் பார்த்தேன்.

ஏதோதோ விபரங்களைச் சொல்கிறார். அவருடைய மனமும், அவருடைய ஆசையும் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் ஒரு வேஷதாரி என்று அறிய முடிந்தது.

இராமலிங்க அடிகள் எல்லோருக்கும் உதவி செய்யச் சொல்லி இருக்கின்றார். ஆனால் அவர் பேரை வைத்து இங்கே தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதுகளெல்லாம்
1.குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தது ஒன்றல்ல இரண்டல்ல.
2.என்னைப் பக்குவப்படுத்துவதற்காக வேண்டி
3.எத்தனையோ வகையில் எல்லாம் என்னை அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றார்.

அதனால் நம்  மனம் பக்குவப்பட வேண்டும்.