ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2017

ஞானிகளின் உணர்வுகளைத் தெரிந்து நாம் எடுக்க முடியாது பதிய வைத்தால் தான் எடுக்க முடியும் – படிப்பதை விட பதிய வைக்க வேண்டியது மிக மிக முக்கியம்

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிய வைத்தால் தான் அதை நமக்குள் வளர்க்க முடியும். அறிய முடியும். உணர முடியும் பார்க்க முடியும்.

படித்து மனப்பாடம் செய்து ஞானிகளின் உணர்வை வளர்க்க முடியாது. தெரிந்து கொள்ள முடியாது.

படிப்பறிவு என்பது வேறு. பதிய வைத்த உணர்வுகள் இயங்குவது என்பது வேறு.

ஒரு மைக் எப்படி ஈர்க்கின்றதோ ஒரு ஒலி/ஒளி நாடா எப்படிப் பதிவாக்கிக் கொள்கின்றதோ பதிவானதைத் திரும்ப வெளிப்படுத்துகின்றதோ அதைப் போல் தான் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரோ செல் ஃபோனோ படித்துவிட்டு இயங்கவில்லை. அதற்குள் பதிவு செய்த உணர்வுகளால் தான் இயங்குகிறது காட்டுகின்றது மற்ற வேலைகளைச் செய்கிறது.

அதைப் போல் தான் மகரிஷிகளின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வர வேண்டும். தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதற்காக வேண்டித்தான் உங்கள் நினைவை மகரிஷிகளின் பால் திருப்பச் சொல்கிறோம்.

அப்பொழுது தீமைகள் நமக்குள் பதிவாகாமல் மகரிஷிகள் உணர்வு பதிவாகும். இது அதிகமாக அதிகமாக தீமைகள் நம் ஈர்ப்புக்கு வராது. மாறாக மகரிஷிகள் பெற்ற மெய் ஞானம் வரத் தொடங்கும்.

வித்து வளர்ந்த பின் தான் அதனின் உருவத்தையும் மணத்தையும் பலனையும்  நாம் பார்க்க முடியும், உணர முடியும். எல்லாவற்றையும் தெரிந்து அப்புறம் வருவதில்லை.

பள்ளிக்குப் போகிறோம் என்றால் அறிந்து கொள்வதற்காகத்தான் அங்கே செல்கிறோம். படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்குப் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை.

அதைப் போன்று தீமைகள் வரும் பொழுதெல்லாம் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகள் பால் நம் நினைவுகள் சென்றால் - அந்த உணர்வுகளைக கவர வேண்டும் அதை வளர்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் நாமும் மகரிஷியாக வளர முடியும். 

ஒரு வித்தை நிலத்தில் பதிய வைத்தால் தான் அது வளரும். அதைப் போன்று தான் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் மீண்டும் பதிய வைத்தால் தான் நமக்குள் அது வளரும்.