ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2017

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும்

நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர்கின்றோம் அறிகின்றோம்.

1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து
2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.
3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமல்லவா…!

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது. அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

1.ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே
2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு
3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்?
4.அது முடியாது.

அதைப் போன்று தான் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தியைச் சேர்த்தால் தானே ஆன்மா தூய்மையாகும்.

நமக்கு முன் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் அலைகளை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

1.தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அணுவாக மாறுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு செய்தால் நம் இரத்தங்கள் தூய்மை பெறும். உறுப்புகள் சீராக இயங்கும். மன பலம் கிடைக்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும். மகிழ்ந்து வாழ முடியும்.