ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2017

வாசற்படியில் அமர்ந்து மடி மீது வைத்து “இரண்யனைப் பிளந்தான்… நர நாராயணன்” – விளக்கம்

நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை மேற்கே பார்க்க வைத்துள்ளார்கள்.

நாம் மேலில் பட்ட அழுக்கை நீரில் மூழ்கிக் குளித்து விட்டு துணியில் பட்ட அந்த அழுக்கைத் தூய்மைப்படுத்தி விட்டு கறையேறி நாம் வந்தவுடன் விநாயகரைப் பார்க்கும்படி செய்துள்ளார்கள் ஞானிகள்.

தன் உணர்வில் பட்ட அழுக்கைப் போக்கி உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.
1.விநாயகரைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது
2.தீமையை நீக்கிய மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று
3.நமக்குள் ஆழப் பதியச் செய்கின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் முதலில் காவியமாகத் தீட்டியிருப்பார்கள்.
அந்தக் கருத்தினை நமக்குள் பதிவு செய்து கொண்டபின் விநாயகரை உற்று நோக்கிய நிலைகள் கொண்டு
1.நம் உணர்ச்சியைத் தூண்டச் செய்து விண்ணை நோக்கி ஏகி
2.இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்
4.அதைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று வேண்டும்படி செய்கின்றார்கள்.

யாரிடம்…?

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நாம் எண்ணியதை இயக்கிக் கொண்டிருக்கும் நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்…” வேண்டும்படி செய்தார்கள் ஞானிகள்.

வேதனைப்பட்டோரை உற்று நோக்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் “ஓ…” என்று ஜீவனாகி’ “ம்…” என்று உடலாகின்றது.

அது போல வேதனையை அகற்றிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உற்று நோக்கி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டினால் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று நம் உடலாகின்றது.

நம்மை அறியாமல் சேர்ந்த அழுக்கினைப் போக்கும் நிலையாக  அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து தனக்குள் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆற்றங்கரையில் வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

விநாயகரை உற்று நோக்கும் பொழுது இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி விண்ணுலகம் சென்ற துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதனுடன் இரண்டறக் கலந்த செம்பும் வெள்ளியும் ஆவியாக மாற்றுகின்றது.

இதே போல மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் செலுத்தி தீமைகளைக் கருக்கி  ஆவியாக மாற்றிடவேண்டும் என்று காட்டுகின்றனர்.

உயிரன ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து  உடலுக்குள் அந்த நினைவினை உட்செலுத்தும் பொழுது உடலில் உள்ள தீமைகளை அது அகற்றுகின்றது.

இதைத் தான் “நரசிம்ம அவதாரம்” என்பது. நாம் வாசற்படி மீது அமர்ந்து இரண்யனை மடி மீது வைத்துப் பிளந்தான்.

சுவாசம் மோதும் இடமான புருவ மத்தியில் வாசற்படி மீது அமர்ந்துள்ளான் உயிரான ஈசன் என்று காட்டி அதை நர நாராயணன் என்று அன்று தெளிவுபடுத்தினார்கள்.  (பிரபஞ்சத்திற்கு உயிர் சூரியன் – நாராயணன்; உடலுக்கு உயிர் ஈசன் – நர நாராயணன்)

ஆகவே நாம் கண்ணின் நினைவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து தனக்குள் அந்த நிலைகளை எண்ணத்தால் எண்ணும் பொழுது அந்த ஈசனிடம் வேண்டும்போது

தீமையான உணர்வுகளை நாம் நுகரும் பொழுது நம் ஆன்மாவாக இங்கே மலர்ந்திருக்கும். இதை நுகர்ந்த பின் தான் அறிகின்றோம். அதை மடி என்று சொல்கிறோம்.

பிறரிடம் நாம் கேட்டறிந்த தீமையான உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறுகின்றது. மடி மீது என்பதும் இவைதான்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றி அந்த உணர்வுடன் இழுக்கச் செய்து உடலுக்குள் அனுப்பும் பொழுது
1.இரண்டறக் கலந்த தீமைகளுக்குள் உட்சென்று அதை வீழ்த்துகின்றது
2.உடலுக்குள் சென்று தீமையைப் பிளந்து நீக்குகின்றது.

உடலுக்குள் உயிராக இருக்கும் நர நாராயணனிடம் வேண்டும் பொழுது
1.அந்த வேண்டுதலை ஏற்று அந்த உணர்வின் ஆக்கமாகத்
2.தீமையான நிலைகளை இங்கே மடி மீது வைத்துப் பிளக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

தீமையை வென்ற மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அதை உற்று நோக்கி உயிரான ஈசனிடம் வேண்டி அந்த ஒளியின் தன்மையைத் தனக்குள் இணைக்கச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அவனே தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் விளைய வைக்கின்றான் என்ற இந்த உண்மையைச் சாதாரண எளிய மக்களும் இதை அறிந்து உணர்ந்து கொள்ளும்படிக் காட்டியுள்ளார்கள். 

இதன் வழி கொண்டு அந்த ஞானியின் உணர்வை நமக்குள் பதிவு செய்து நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமைகளை எவ்வறு அகற்றிடவேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.