ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2017

ஆதியிலே கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனார்கள் – அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்

இன்று சாதாரணமாகப் பார்க்கலாம். ஒரு பச்சிலையை நசுக்கி அதை நாம் நுகர்ந்தால் அந்த மணத்தை நுகரும் யானையோ, புலியோ, பாம்போ, தேளோ இவையெல்லாம் அதன் வீரியத் தன்மை குறைந்து மனிதர்களைத் தாக்குவதில்லை.

இதைப் போன்றுதான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பல விஷ ஜந்துக்களிடம் இருந்தும் விஷப் பிராணிகளிடம் இருந்தும் கொடூர மிருகங்களிடம் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

1.பலவிதமான பச்சிலைகளை அரைத்து உடலில் முலாமாகப் பூசிக்கொண்டார்கள்.
2.பச்சிலைகளை அவர்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் பாதுகாப்பிற்காகப் போட்டு வைத்துக் கொள்கின்றார்கள்.

இத்தகைய முலாம்களைப் பூசிக்கொண்டு படுத்துக் கொள்வதால் அவர்களும் அந்தப் பச்சிலை மணங்களை நுகரும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது.

உடலில் முலாமாகப் பூசி இந்த மணங்கள் வெளிப்படும் பொழுது மற்ற மிருகங்கள் அதை நுகர்ந்து இவர்கள் இருக்கும் பக்கம் வருவதில்லை.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றிடும் ஆற்றல் பெற்றவர்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றி விட்டு ஆறாவது அறிவாக அனைத்தையும் அறிந்திடும் அறிவாக நமது உடலிலிருந்து மணங்கள் வெளிவருகின்றது – “கார்த்திகேயா”.

தீமை என்று தெரிந்தாலே அதை அடக்கிடும் சக்தி பெற்ற நிலையைச் சேனாதிபதி என்று ஆறாவது அறிவினைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இதைப் போன்று தான் தீமையான நிலைகள் வரும் பொழுது தன் எண்ணத்தால் அந்தத் தீமைகள் வராது தடுத்து வாழ்க்கையை நடத்தினர் அகஸ்தியருடைய தாய் தந்தையர்கள்.

இதன் வழி வாழ்ந்து வந்த நிலையில் கருவுறும் பொழுது உடலில் பூசிய பச்சிலைகளை அந்தத் தாய்  நுகரும் சக்தி கிடைக்கின்றது. கருவிலே வரும் குழந்தைக்கும் இந்த விஷத்தை வென்றிடும் சக்தி கிடைக்கின்றது.

கருவுறும்போது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய மணங்களத் தாய் நுகர்வதால் அது அந்தக் கருவுடன் இணைந்து விடுகின்றது.

இப்படிப் பத்து மாதங்களும் பெற்ற பின் அந்தக் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது.

பிறந்த பின் அந்தக் குழந்தை இருக்கும் பக்கம் யானையோ, தேளோ, புலியோ, பாம்போ, போன்ற எந்தக் கொடூரமான மிருகங்களும் அருகில் வருவதில்லை. ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள்.

அப்பொழுது அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் தன் குழந்தையைக் “கடவுளின் பிள்ளை…!” என்று போற்றும் நிலை வந்தது.

அந்தக் குழந்தை விண்ணுலகைப் பார்க்கும் பொழுது சூரியனைப் பார்க்கின்றது. விஷத்தை ஒடுக்கும் நிலைகளைக் கண் கூசாது அங்கு சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றது.

பல நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வின் ஒளி அலைகள் சூரியனுக்குள் வருவதையும் அந்தக் குழந்தை பார்க்கின்றது.

குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் அந்த விஷத்தின் தன்மை ஆனபின் அதன் உணர்வின் துணை கொண்டு புழு குளவியாகின்றது.

புழு குளவியானதும் தாய்க் குளவியின் உணர்வின் நிலை கொண்டு அது என்ன செய்ததோ அதே போல இதுவும் புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. அதையும் குளவியாக மாற்றுகின்றது. அதைப் போல
1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளின் ஆற்றலை
2.கருவிலேயே அந்தக் குழந்தை பெற்றதால் – தன் வளர்ச்சியில்
3.அந்த உணர்வின் இயக்கமாக “அறியும் ஆற்றல்” குழந்தைப் பருவத்திலேயே அவனுக்கு வருகின்றது.

நாளடைவில் ஐந்து வயது ஆகும் பொழுது பச்சிலையின் நிலைகளையும் அவை எவ்வாறு இயங்குகிறது? அதற்கு எவ்வாறு உணவு கிடைக்கின்றது என்ற நிலையும் அறிந்துணரும் சிந்தனைகளும் அவனுக்கு ஓடுகின்றது.

வானத்தை நோக்கி ஏகுகின்றான்…!

பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகளையும் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் எவ்வாறு பிற மண்டலங்களிலிருந்து சக்திகளை எடுத்து வருகின்றது என்ற நிலையும் இளமைப் பருவத்தில் பார்க்கின்றான் அகஸ்தியன்.

பூமியின் துருவப் பகுதியை உற்று நோக்கி ஐந்து வயதில் அந்த ஆற்றலை எடுக்கும் பொழுது “துருவன்” என்று காரணப் பெயர் (பின் வந்த ஞானிகள்) வைக்கின்றார்கள்.

வானஇயல் புவியியல் உயிரியல் தாவரவியல் எல்லாவற்றையும் கண்டுணர்ந்த அகஸ்தியனுக்குத் திருமணமாகும் பொழுது தான் பெற்ற உணர்வெல்லாம் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.

1.செவி வழி ஓதும் பொழுது அந்த உணர்வுகள் மனைவிக்கும் பதிவாகின்றது.
2.கணவன் சொன்னது போல மனைவியும் அதன் வழி நடக்கின்றது,
3.விண்ணின் ஆற்றலை மனைவியும் அறியத் தொடங்குகிறது.

கணவனும் மனைவியும் அவர்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து  இரு மனமும் ஒரு மனதாகி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி வாழ்கின்றனர்.

துருவத்திலிருந்து வரக்கூடிய தீமைகளின் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் இவர்கள் நுகரும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றும் தன்மையைப் பெறுகின்றார்கள்.

1.இன்று நாம் குழந்தைகளை ஈனுகின்றோம்.
2.அகஸ்தியரும் மனைவியும் வானுலக உணர்வை நுகர்ந்து அதை ஒளியாக உருவாக்கி
3.தன் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றினார்கள்.

மாற்றிய பின் இந்த உடலை விட்டு அகன்று ஒளியின் சரீரமாக இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றிய நிலை கொண்டு “துருவ நட்சத்ததிரமாக…” இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் பிறவியில்லா நிலைகளை அடைகின்றனர். தீமைகளை வென்று அவர்கள் வாழ்க்கையில் தன்னைத் தெளிந்து வாழும் சக்தியைப் பெறுகின்றனர்.

இரு மனமும் ஒன்றி வாழ்ந்த அவர்களைப் பின்பற்றி நாமும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி  நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைவோம்.