ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2017

உயிருக்குள் செய்ய வேண்டிய யாகத்தை வெளியில் செய்து கொண்டிருக்கின்றோம்

1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்
2.உயிருக்குள் – உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்
3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்

இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்?

காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று… பாலை ஊற்று… அந்தக் கட்டையைப் போடு… இதைப் போடு… என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்…” என்று செய்கின்றார்கள்.

நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் “எனக்கு எல்லாம் செய்வான்”.

ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்…” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

“உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டு “நெருப்பில் போட வேண்டும்…” என்பதை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.

அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.
2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.
3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.
4.இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.

புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது…! இப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.

“உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள். ஏனென்றால்
1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்
2.அதைக் “கரைத்து” (கருக்கி)
3.எல்லாம்… “மணமாகத்தான் கொடுக்கின்றது”.

அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.