மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் எல்லோருமே எந்த
நோக்கத்தில் எந்த ஆசையில் எதற்காக வாழ்கிறீர்கள் என்றால் உடனடியாகச் சொல்வது
நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பார்கள். சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்
என்பார்கள்.
மேலும் சாப்பிடவில்லை என்றால் உயிர் வாழ
முடியாது என்பார்கள்.
இதில் மறைந்திருக்கும் மெய் என்ன என்றால்
சாப்பிட்டால் உடலில் வாழலாம். இந்த உலகில் சிறிது காலம் வாழலாம் அவ்வளவு தான்.
“நான் யார்…?” என்ற கேள்வி கேட்டாலே உடலைத்தான்
நாம் நான் என்று சொல்வோம்.
நான் என்றால் இந்த உடல் இல்லை. நான் என்றால்
உயிர் தான்.
உயிரால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல்.
விண்ணிலிருந்து வந்த உயிர் பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி பூமியில் விளைந்த சத்தை
எடுத்து அதனால் உருவானது தான் இந்தச் சரீரம்.
மண்ணால் உருவாக்கப்பட்ட சரீரம் மீண்டும்
மண்ணுக்குள் தான் போகிறது என்பதையே இராமாயணம் கடைசியில் காட்டுகிறது.
உயிர் நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்தியால்
உருவான ஒளிக்கற்றைகளால் உருவானது. விண்ணிலே உருவானது தான் நம் உயிர்.
உயிருக்கு என்றுமே அழிவில்லை. மகரிஷிகளும்
ஞானிகளும் அந்த உயிரின் ஆற்றலை அறிந்து உயிர் எப்படித் தோன்றியது என்று அறிந்து
இயற்கையின் இரகசியங்களை அறிந்துணர்ந்தவர்கள்.
அவர்கள் அனைவருமே விண்ணிலே இன்றும் உயிர்
வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
எவ்வாறு…?
இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியைத்
தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். அது தான் விண்ணின் ஆற்றல் என்பது.
அந்தச் சக்திகளை மனிதனாக வாழும் பொழுது
தமக்குள் விளைய வைத்து உயிராத்மாவை பேராற்றல்மிக்கதாக வளர்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் இந்தப் பூமியில் விளைந்ததை உணவாக
எடுக்கவில்லை. விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்தார்கள்.
விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்ததால் வேகா நிலை
பெற்று உயிரைப் போன்றே அழிவில்லாத நிலையாக பேரொளியாக இன்றும் உயிர் வாழ்ந்து
கொண்டுள்ளார்கள்.
அகண்ட பேரண்டத்தில் வரும் அனைத்தையும் தனக்குச்
சாதகமாக்கி உணவாக உட்கொண்டு ஒளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தப் பூமிக்குள் விளையும் உணவை உட்கொண்டால்
மீண்டும் மீண்டும் உடல்கள் பெற்று மண்ணுலகில் புழுவாக பூச்சியாக பறவையாக மிருகமாக
மனிதனாக மாறி மாறி வேதனைப் பட்டு பட்டு “உடல் (வாழ்க்கை) வாழலாம்…”
– அல்லது –
மகரிஷிகளைப் போன்று விண்ணின் ஆற்றலைப் பெற்று
உயிருடன் ஒன்றி என்றுமே விண்ணிலே “உயிர் (வாழ்க்கை) வாழலாம்…”
1.நாம் உடல் வாழப் போகின்றோமா…? – அல்லது
2.உயிர் வாழப் போகின்றோமா…?
3.மண்ணுலகில் வாழ விருப்பமா…! – அல்லது
4.விண்ணுலகில் வாழ விருப்பமா…!
முடிவு செய்து கொள்ளுங்கள்.