சகஜ வாழ்க்கையில் நாம் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் நம் சந்தர்ப்பம் அதுவாக
அமைந்தாலும் அந்தத் தீமைகளை நமக்குள் வளர்ப்பது நம் நிகழ்காலமாக இருக்ககூடாது.
எனென்றால் அந்தத் தீமைகள் நமக்குள் உட்புகுந்து அது நமது எதிர் காலத்தை நிர்ணயித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.
எது வந்தாலும் அதை இடை மறித்து அந்த மகரிஷிகள் உணர்வுகளைப்
பெறுவேன். அது தான் எனக்கு வேண்டும் அதை வளர்ப்பதை நம் நிகழ்காலமாக நிஜமாக மாற்ற வேண்டும்.
நிகழ்காலத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலம்
நாம் ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.
இதைக் காட்டி உணர்த்துவதற்குத்தான் யானையின் சிரசை மனித உடலில் பொருதி விநாயகரைக்
காட்டினார்கள் ஞானிகள்.
மிருக நிலையில் சேர்த்துக் கொண்ட நிலைகளில் அதனுடைய நிகழ்காலத்தில் ஒவ்வொரு சரீரத்திலும்
காத்துக் கொண்ட உணர்வுகளை வளர்த்து வளர்த்து அதனின் எதிர்காலமாக - இன்று நம்மை மனிதனாக
உருவாக்கியது.
மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ
நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின்
உணர்வுகளை நாம் கவர வேண்டும்.
அப்படிக் கவர்ந்து கொண்டே வந்தால் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.
நேற்றைய செயல் இன்றைய மனித சரீரம்.
இன்றைய நம்முடைய செயல்கள் மகரிஷிகள் உணர்வைப் பெறுவதாக
அமைந்தால் நாளை மகரிஷியாக நாம் ஆவோம்.
ஒவ்வொரு நாளும் நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் நம்மை
மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வதாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறந்த காலத்தைப் பேசிக் காலத்தை விரயம் செய்வதையும் எதிர்காலத்தைப்
பற்றிக் கனவு காண்பதையும் விட்டுவிட்டு நிகழ் காலத்தில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள்
வளர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக நாம் வைக்க வேண்டும்.
இது முக்கியம்.