ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2017

தலைக்கு மேல் கைகூப்பி மேலே பார்த்து ஏன் வணங்க வேண்டும்...?

கோவிலுக்குச் சென்றால் கீழே விழுந்து வணங்குவதைத்தான் அறிந்திருக்கின்றோம். அதைத்தான் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.

ஆனால் புராதணக் கோவில்களில் எல்லாம் பெரிய கொடி மரம் வைத்துள்ளார்கள். மேலே அண்ணாந்து பார்க்கும் படியாகத்தான் அதை வைத்துள்ளார்கள்.

அதே போன்று கோபுரங்களும் மிகவும் உயரமாக வைத்துள்ளார்கள். உச்சியைப் பார்க்க வேண்டும் என்றால் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் ஏன் இப்படி வைத்திருக்கின்றார்கள் ஞானிகள்?

அவைகளைப் பார்த்து நாம் வணங்க வேண்டும் என்றால் இரண்டு கைகளையும் மேலே தலைக்கு மீது தூக்கி ஒன்று சேர்த்துத்தான் வணங்க முடியும்.

இப்படி மேல் நோக்கிப் பார்த்து விண்ணிலிருந்து வரும் விண் சென்ற அந்த மகரிஷிகள் ஆற்றல்களை எண்ணி ஏங்கிச் சுவாசிப்பதற்கே அதை வைத்துள்ளார்கள். உயர்ந்த எண்ணங்களை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மலை மீது (உச்சியிலேயும்) பல கோவில்களை நம் ஞானியர்கள் நிர்மாணித்துள்ளார்கள்.

சில கோவில்களில் அந்தக் கோபுரங்களில் அமைக்கப்பட்ட சந்துகள் வழியாக விண்ணின் ஆற்றல் நேரடியாக மூலஸ்தானத்தில் இருக்கும் தெய்வத்தின் புருவ மத்தியிலே விழும்படியாகவும் வைத்துள்ளார்கள்.

யாராக இருந்தாலும் அவர்களை அறியாமலே
1.கண்ணின் நினைவு தன்னிச்சையாக மேலே கூர்மையாகச் செல்லும்படியாகவும்
2.புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் ஒன்றும்படியாகவும்
3.முக்கண் என்று உயிர் வழி சுவாசிக்கும்படியும் இதையெல்லாம் வைத்துள்ளார்கள்.

ஆக பூமி சமைத்து வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சுவாசிப்பதை விடுத்துவிட்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றலை எடுக்கப் பழகுவதற்கே கோடி மரத்தையும் கோபுரத்தையும் உயரமாக வைத்துள்ளார்கள். மலையிலும் ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள்.

ஆலயத்தில் கைகளைக் குவித்துக் குனிந்து வணங்குகின்றோம். கீழே விழுந்து வணங்குகின்றோம்.

இவைகள் எல்லாம் அன்றைய அரசர்கள் மக்களைத் தனக்குக் கீழ் கொண்டு வருவதற்காகப் பாத பூஜை பாத நமஸ்காரம் என்ற நிலையில் சரணாகதி தத்துவமாக உருவாக்கி விட்டார்கள்.

அதன் வழியில் தான் நாம் இன்றும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

பாத பூஜை பாத நமஸ்காரம் செய்தால் அதற்காக வேண்டி மெச்சி நமக்கு எல்லாம் செய்வார்கள் என்று மனிதனுக்கு அடுத்த நிலை பெறுவதற்கு மாறாக மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் உடல் பெறும்  நிலைக்கு உருவாக்கிவிட்டார்கள்.

விண் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அவசியம் மேல் நோக்கிய சுவாசம் தேவை. மேல் நோக்கிப் பார்ப்பதற்கே ஆலயங்கள்.
உங்கள் சகஜ வாழ்க்கையில் எத்தகையை சிக்கல்கள் வந்தாலும் மிகப் பெரிய இக்கட்டான நிலை வந்தாலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே நினைவைச் செலுத்தி இதிலிருந்து விடுபடும் உபாயமும் சக்தியும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணினால் வழி கண்டிப்பாகக் கிடைக்கும்.

நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வந்த தீமைகளை நீக்கி மகிழ்ச்சியும் பெறுவீர்கள். மிகப் பெரிய அனுபவம் ஆகும்.

கோ புரம் = கோ – மிகப் பெரிய; புரம் – இடம்
கோ வில் = கோ – மிகப் பெரிய; வில் – உள்ளே

அண்டத்தின் ஆற்றலை நமக்குள் இருக்கும் ஈசனின் துணை கொண்டு பெற முடியும் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்கள்.

உள் நின்று (நமக்குள்) இயக்கும் கடவுளை மறக்காமல் இருப்பதற்காகத்தான் கோவில் உள்ளே பார் என்று மூலஸ்தானத்தில் சிறிதாகச் சாமி சிலையை வைத்துக் காட்டியுள்ளார்கள். 

நமக்குள் இருக்கும் கடவுளை ஈசனை நாம் வணங்குகின்றோமோ காணுகின்றோமா அறிய முற்படுகின்றோமா…! கோவிலுக்குச் சென்றால் அவைகளை நிர்மாணித்த ஞானிகளை எண்ணுகின்றோமா… …!