ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 6, 2017

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதையெல்லாம் சுவாசிக்கின்றோம் என்று கணக்குப் பார்க்கின்றோமா…! “சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவரைப் பார்த்தால் அந்த உணர்வுகளை  நாம் நுகர நேருகின்றது. தவறு செய்கின்றான்என்று அறிகின்றோம்.

நம் உயிர் அதை அணுவாக மாற்றிவிடும். அந்த அணுவின் தன்மை வரும் போது அது பிரம்மம் ஆகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. எக் குணத்தின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அந்த அணுவை இயக்கும்.

இதைப் போன்று இயற்கையில் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எதனை எவ்வாறு எவ்வழியில் பெற வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் நினைவுபடுத்துவது.

நமது காற்று மண்டலத்தில் TV Radio Computer போன்ற கெமிக்கல் கலந்த காந்தப் புலனறிவில் வீரியம் கொண்ட விஷத் தன்மை இணைத்து ஒரு நாடாவைப் பதிவு செய்து அதில் பதிவாக்குகின்றனர்.

இப்பொழுது நாம் பேசுவதையோ மனிதனையோ படமாக்குகின்றனர். படமாக்கி மீண்டும் இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றனர்.

அவ்வாறு பரப்பப்படும் போது அதையெல்லாம் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி விடுகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எந்த அலை வரிசையில் (FREQUENCY) வைத்தால் இது வரும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

டெல்லியில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். மெட்ராஸில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். உலகம் முழுவதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒலிபரப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

எதை எங்கிருந்து ஒலிபரப்பு செய்கின்றனரோ அது இன்ன அலை வரிசை (frequency) என்று வைக்கின்றார்கள். அலை வரிசை என்றால்
1.காந்தத்தின் ஈர்ப்பு அழுத்தம் அதிகம்
2.ஈர்ப்பு அழுத்தம் குறைவாக இருப்பது உணர்வுகளில் மாற்றம்.

காரம் ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. புளிப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. துவர்ப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது.

அதைப் போல காந்தப் புலனறிவில் எதன் உணர்வு கொண்டு  அலை வரிசையில் எடுத்து ஒலி அலைகளைப் பாய்ச்சுகின்றானோ அதன் அலைவரிசையில் காரம் என்ற அலை வரிசையில் வைத்தால் அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை பெற்ற அந்த ஸ்டேசனிலிருந்து ஒலிபரப்பு செய்தால் அதை மட்டும் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளும்.

இதே போல,
1.ஒருவன் கோபப்படும் உணர்வை நாம் கண்களால் உற்று நோக்கி
2.நம் உடலிலே பதிவாக்கி
3.மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால்
4.அந்தக் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வை மீண்டும் இப்படி அவன் கோபித்தான்என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

நுகர்ந்த உணர்வோ நம் இரத்த நாளங்களில் பெருகத் தொடங்கி விடுகின்றது.

(ஒரு நெல்லை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல் மணிகளை இணைத்தால் தான் சாதமாகிறது.)

அது போல கோப உணர்வை நுகர்ந்தாலும் அது
1.பல அணுக்களின் தன்மை அடையப்படும் போது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.
3.ஒரு அணு மற்ற உணர்வுகளோடு கலக்கப்படும் போது இரத்தக் கொதிப்பு வராது.
4.அது உணர்ச்சி ஊட்டும் உணர்வு என்று தான் பெயர் வரும்.
5.மற்ற குணங்களுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் குறைவாக இருக்கும்.

நாம் அடிக்கடி அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்து வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு நமக்குள் அதிகரித்து விடுகின்றது.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக்  கணக்குப் பிள்ளை என்று காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ (நந்தி)
2.அது நமக்குள் உள் சென்று
3.அந்தக் குணம் உடலுக்குள் உருவாகும் என்பதைக் காட்டுவதற்கு
4.நந்தீஸ்வரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

உருவான குணமோ அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஒரு அணுவின் தன்மையாக உருப் பெற்ற பின்
1.அந்த உணர்ச்சியைத் தூண்டி
2.நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி
3.அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து
4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
5.அந்த உணர்வின் தன்மையைத் தனக்கு உணவாக எடுத்து விளைகிறது.

ஒரு நெல்லை ஊன்றியபின் எப்படிப் பல நெல்லாக விளைந்து வருகின்றதோ அது போல ஒரு வித்தின் தன்மை அதற்குத் தக்கவாறு பல எண்ணங்கள் உணர்வுகள் வருகின்றது. அந்த வித்தின் தன்மையே விளைகின்றது.

சிவன் ஆலயத்தில் சிவனின் கணக்குப் பிள்ளை யார்…?

நாம் சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். அதாவது நாம் நுகரும் உணர்வுகளைத்தான் நந்தீஸ்வரன் என்று காட்டுகின்றார்கள்.

நம் உடலுக்குள் (சிவம்) எந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதனின் கணக்குகளுக்கொப்பத் தான் நம் எண்ணம் சொல் செயல் இயக்கம் இருக்கும்.

எதனின் கணக்கை உடலுக்குள் கூட்ட வேண்டும் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தக் கணக்கின் பிரகாரம் நாம் அருள் ஞானியாக ஆக வேண்டும் என்பதற்காக
1.ஆலயங்களில் தெய்வ குணமாகப் படைத்துக்
2.காவியங்களைத் தீட்டித் தான் கண்ட கருத்தினை
3.மக்களுக்குத் தெரியப்படுத்தினார்கள் ஞானிகள்.