ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2017

கல்யாணமான புது மணத் தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டியது...!

மணமக்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன்.

வீடு என்று இருந்தால் வாசல்படி என்று இருக்கும். எத்தகைய நிலைகள் இருந்தாலும் சில குறைகளைக் காணாது இருக்க முடியாது. ஆனால் நாம் இதை என்ன செய்ய வேண்டும்.

ஏதோ குறைகளை நுகர்ந்து விட்டால் கணவர் முகம் வாடி விடும். அவர் முகம் வாடியதை மனைவி கண்டால் என்ன செய்ய வேண்டும்? வேதனைப்படக் கூடாது.

 உடனே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ண வேண்டும். அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். (ஒரு நிமிடத்திற்குள்)

1.என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்கவேண்டும்
2.அவருக்குள் உயர்வான எண்ணங்கள் வரவேண்டும்
3.அவர் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று
4.இதை ஜெபித்து எண்ணிவிட்டு தண்ணீர் கொடுத்தால் போதும்.
வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.

நமக்கு நல்ல வலு கிடைக்கும். ஆண்டவன் நமக்கு உறு துணையாக இருக்கிறான் என்று அதைச் சொல்லி விட்டு நீங்கள் தண்ணீரைக் கொடுங்கள். அந்தச் சோர்வை மாற்றலாம்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதே போல மனைவி சோர்வடைந்திருந்தால் சில நேரம் உடல் கூறுகள் குறைவாக (காரணமாக) இருக்கலாம். அப்படிச் சோர்வடைந்த நேரத்தில் கணவர் வெளியிலிருந்து வந்தவுடன் என்ன ஆகும்?

மகிழ்ச்சி அங்கே இருக்காது. கொஞ்சம் தாமதமாகச் செயல்படுவார்கள்.

உடனே கணவர், “என்ன… நான் வந்திருக்கின்றேன்….! கொஞ்சம் கூட மரியாதை இல்லையா..?” என்பார்.

தொழில் செய்த இடத்தில் சில அவசர நிலைகள் இருக்கும். அதே அவசரத்தில் வந்து அதே நிலைகளை எடுத்துக் கொண்டதால் இப்படி ஆகின்றது?

அங்கே மனைவியிடம் சோர்வைக் கண்டவுடன்…, என்ன…? நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இதே போலச் செய்கிறாய்…! என்று திடீரென்று அதிர்வைக் கொடுத்தவுடன் அதைத் தாங்க முடியாதபடித் தன்னை அறியாமல் அழுக ஆரம்பித்துவிடுவார்கள்.

நான் இப்பொழுது என்ன கேட்டுவிட்டேன்….! ஏன் இப்படி அழுகிறாய்…! என்று உடனே வம்பு வந்துவிடும்.

இந்த உணர்வை இரண்டு பேரும் எடுத்து எடுத்துச் சுவாசித்தவுடன் நம் உயிர் என்ன செய்கிறது?

அதையே “ஓ…ம் நமச்சிவாய…” என்று இயக்குகிறது… உடலாக ஆக்குகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பகைமை ஊட்டும் உணர்வாக அந்தச் சந்தர்ப்பம் அமைந்து விடுகின்றது.

இப்படி நாம் வாழ்க்கையில் எதை எல்லாம் எண்ணுகிறோமோ காலையிலிருந்து இரவு வரையிலும் சதா சிவமாக்கிக் கொண்டே (உடலாக உருவாக்கி) இருக்கும் நமது உயிர்.

அதில் நாம் எதனைச் சிவமாக்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இதைக் கடவுள் வந்து மாற்றுவாரா…?

(திருமணமான பின்) சிறிது நாள்களிலேயே என் கணவர்/ என் மனைவி முன்னே மாதிரி இல்லை. வெடுக் வெடுக் என்று பேசுகிறார் என்று இரண்டு பேரும் சொல்லத் தொடங்குவார்கள்.

ஆகவே எத்தகைய குறைகள் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் வந்தாலும் உடனே என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று துடைத்து விட்டு
1.என் கணவனுக்கு/மனைவிக்கு அந்த அருள் சக்தி பெறவேண்டும்.
2.மகிழ்ந்திடும் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று
3.இருவரும் இதே போன்று எண்ண வேண்டும்.

இதை நாம் அடிக்கடி எடுத்தோமென்றால் வரும் தீமைகளை எல்லாம் வென்று அருள் ஒளி என்ற நிலைகள் வருகின்றது.
1.வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் பெறுகின்றது.
2.கணவன் மனைவிக்குள் அன்பும் பண்பும் அரவணைத்து வாழும் தன்மை வருகின்றது. 

இந்த வாழ்க்கையில் மனிதர்கள் நாம் மகிழ்ந்து வாழும் சக்திகளைப் பெறச் செய்வதற்குத்தான் ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு விநாயகரை வைத்து ஒவ்வொரு நிமிடமும் தீமைகளைத் துடைப்பதற்கு வைத்தார்கள்.