ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2017

குற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசர்கள் வழி – உயர்ந்த கருத்தினைச் செலுத்தி அங்கிருக்கும் தீமையை அடக்கி அதனைத் தண்டித்து இணைந்த நிலையில் செயல்பட்டவர்கள் “மகரிஷிகள்”

இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து தன்னையும் உலகையும் உணர்வையும் அறிந்துணர்ந்த ஞானிகள் இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற நோக்குடன் பெற்ற அந்த உணர்வின் துணையால் உண்மையின் உணர்வை அறிந்து தன் நிலைகளில் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ரிஷிகள் பலர்.

1.இந்த உடலான சிறையில் இருந்து விடுபட்டு
2.இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து,
3.என்றும் சுதந்திரமாக,
4.தம்மை எந்த உணர்வும் அழித்திடாது
5.இன்றும் விண்ணில் மின்னிக் கொண்டிருக்கின்றனர் “சப்தரிஷிகள்”.

ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி.

ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ
1.ஒருவர் உடலில் அறியாது புகுந்த தீமை விளைவிக்கக்கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி
3.அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி
4.அதற்குத் தண்டனை அளித்து
5.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.
6.அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

ஆகவே “தெய்வச் செயல்” என்பது தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில் "மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்" என்று எண்ணி ஏங்கும்போழுது நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

மேலும் யார் நமக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர வேண்டும்" என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே “கடும் சொல்” வராது. 

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம்மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும். 

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லா பெரு நிலையை அடைந்து உயிருடன்  ஒன்றி ஒளிச் சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும்பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து
4.அங்கே சுழலும் சக்தியாகப் "பிறவா நிலை" என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்கு தீங்கு செய்பவரைப்  பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி என்ணிக்கொண்டிருந்தோமோ  அவரின் உடலுக்கு இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின்  உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்துவிடும்.

பின் பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தையே இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக நமது மெய்ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்ப்போம். 

இந்த வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து “நாமும் அந்த ஓளிச் சரீரமாக வாழ்வோம்”.