ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2017

நல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வந்தது… எல்லாமே “நஷ்டமாகிவிட்டது” என்கிறோம் – அந்தக் கெட்ட நேரம் எது? நல்ல நேரத்தை உண்டாக்குவது எப்படி?

தொழில் செய்பவர்களுடைய நிலைகளை எடுத்துக் கொண்டால் தொழில் சீராக லாபத்துடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம்.

தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கடன் கேட்டால் கொடுத்துவிடுவோம். இது போன்று இரண்டொரு பேருக்குக் கடன் கொடுத்து அவர்கள் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் சோர்வடைகின்றோம்.

சோர்வடைந்து வேதனை என்ற உணர்வுகள் வரும் பொழுது, வியாபாரம் என்னாகும்? வாடிக்கையாளர்கள் யாராவது சரக்கைப் பற்றிக் கேட்டால் தெளிவான பதிலைச் சொல்ல முடியாது.

வேதனையான நிலையிலிருக்கும் பொழுது நமது உணர்விற்குத் தக்க
1.நல்ல சரக்கை விட்டுவிட்டு வேதனைக்குரிய சரக்கைத்தான் எடுத்துக் காண்பிப்போம்.
2.இப்படி வியாபார நிமித்தங்களால் சோர்வடைகின்றோம்.
3.சோர்வடைந்தால் விஷத்தின் தன்மை நமக்குள் உள் செல்கின்றது.
4.நம்மிடம் தெளிந்த நிலை இல்லாமல் போகின்றது.
5.ஆக நம் ஆன்மாவில் தூசிபடும் பொழுது நாம் நல்ல பொருளைக் காணமுடிவதில்லை. சிந்திக்கும் தன்மை இல்லை.

மேலும் மேலும் சோர்வடையப்படும் பொழுது நம்மையறியாமலே சோர்வைச் சுமந்த வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாளடைவில் வேதனையின் அணுக்கள் உடலில் பெருக்கமாகின்றது. நமது வியாபாரமும் மந்தமாகின்றது. தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடிவதில்லை.

உடல் நோயைத் தீர்ப்பதற்குச் செலவழித்து நோயால் அவதிப்படும் போது தேடிய செல்வத்தை மீண்டும் நிலை நிறுத்த முடிவதில்லை.

இது சமயம் நாம் என்ன எண்ணுகின்றோம்?

1.அன்றைக்கு நல்ல நேரம் இருந்தது நன்றாகச் சம்பாதித்தோம்.
2.இன்றைக்குக் கெட்ட நேரம் வந்துவிட்டது
3.வியாபாரம் போனது நோயும் வந்தது என்று சொல்கின்றோம்.

ஆனால் நேரம் எதில் வருகின்றது? நாம் சந்திக்கும் நேரம் தான் கெட்ட நேரமாகின்றது.
1.நமது எண்ணம் நல்லதாக இருந்தால்
2.நமது நேரமும் நல்லதாக மாறிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் இணைத்து, நமது ஆன்மாவில் சேர்ந்துள்ள சிந்தனையை இழக்கச் செய்யும் உணர்வை நீக்கி நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

நம்முடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பொழுது நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது. மன வலிமை கிடைக்கின்றது. வியாபாரத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

வேதனை உணர்வுகள் நமக்குள் ஆனபின் நல்லதை யார் சொன்னாலும் காதில் கேட்கவிடாமல் தடுத்துவிடும். கண்ணாடியில் அழுக்குப் படிந்தால் நமது முகம் தெரியாது. கண்ணாடியில் உள்ள அழுக்கைத் துடைத்தால் நமது முகத்தை நாம் பார்க்கலாம்.

1.ஆகவே பிறருடைய உணர்வுகள் நம்மில் இணைந்து நமது சிந்தனையை மறைக்கும் பொழுது,
2.நாம் நம்முடைய ஆன்மாவைத் தூய்மையாக்கும் நிலை பெற்றால்
3.நம்முடைய எண்ணம் கொண்டு நமது செயலாக்கங்களை வலிமையாக்க முடியும்.

சாதாரண நிலையில் நமக்கு இடைஞ்சல் தருபவரை உதைத்து வாங்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இப்படித்தான் நமது எண்ணங்கள் பிறரை அடிக்கவும் உதைக்கவும் எண்ணங்கள் வருகின்றது.

எல்லை கடந்த கோபம் வருகின்றது. “அவரை வேதனைப்படுத்த வேண்டும்…” என்ற உணர்ச்சிகள்தான் வருகின்றது.

உணர்ச்சிகள் மாறப்படும் பொழுது நாம் தெளிவான செயல்களைச் செயல்படுத்த முடிவதில்லை. வேதனையான உணர்வுகள் நமது இரத்தத்தில் கலக்கின்றது. இதனால் நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் தங்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவிக்கின்றன.

பின் நஞ்சின் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது வேறு வழியில்லாது உடலில் நோயாகின்றது இதைப் போன்ற நிலைகளில் நமக்கு நாமே தண்டனை கொடுத்து விடுகின்றோம்.

1.நாம் எண்ணிய உணர்வுகள் உயிரில் (புருவ மத்தியில்) பட்டபின்
2.உயிர் நுகர்ந்த உணர்வு எதுவோ அதன் தன்மை கொண்டு உடலாக்குகின்றது.
3.இது சிவதனுசு.

நஞ்சான உணர்வுகள் நம்முள் வரும் பொழுது நஞ்சான உணர்வுகளை மாற்ற வேண்டுமானால் அடுத்த கணமே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.இதனின் உணர்வின் தன்மைகள் இங்கே வரப்படும் பொழுது இது “விஷ்ணு தனுசு”.

அதாவது அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது அருள் உணர்வுகள் தீய உணர்வுகளைத் தூண்டிவிடும் அணுக்களுக்குத் திரையாகிவிடுகின்றது.

தீய உணர்வைத் தூண்டும் அணுக்கள் தன் உணர்வை இழுக்கும் தன்மை குறைந்து அருள் உணர்வுகள் நமக்குள் பெருகி நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

நம்முடைய எண்ணம் வலிமை அடைகின்றது. தெளிவான சிந்தனை கிடைக்கின்றது.

ஆகவே இதற்காகத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் கால தாமதமாகிவிட்டது என்று கடைசி நேரத்தில் மணலைக் குவித்து சிவலிங்கத்தைப் பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

அதாவது நாம் ஒவ்வொரு நொடியிலும் அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் சேர்க்கும் நிலைதான் கடைசி நிலை இது “தனுசுகோடி”. அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நமக்குள் பிறவியில்லா நிலை பெறும் தகுதி உருவாகின்றது.

அருள் ஒளியின் உணர்வுகளை நமது உடலில் குவித்து இந்த உடலுக்குப்பின் உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும் என்பதைத்தான்  “நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன”.