ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2017

“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்

ஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்ளம் தெரிந்தது, எமக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.

அவ்வொளி வெள்ளத்தின் நடுவே “காளி உருவம் தெரிந்தது.

அது மறைந்து விலை உயர்ந்த கற்கள் ஆபரணங்கள் குவியலாகத் தெரிந்தது. அவைகள் வைரங்கள் வைடூரியங்கள் நகைகள் போன்றவைகளாக இருந்தன.

குருதேவர் எம்மிடம் வந்து அவைகளைச் சுட்டிக் காட்டி “இவைகள் பொய்யல்ல, நிஜமானவைகள்தான், எடுத்துக் கொள் என்றார்.

எம்மால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னால் இவ்வளவு நகைகளை யாம் கண்டதில்லை.

மேலும் குருதேவர் “தொட்டுப் பார் என்று கூறினார். “நீ காண்பது கனவல்ல, நிஜம்தான் என்று சொல்லி அதை நிரூபிக்க எம்மை நறுக்கென்று கிள்ளினார்.

எமக்கு வலி தெரிந்தது. நகைகளைத் தொட்டுப் பார்த்தோம், நிஜமானவைகள்தான் என்று நம்பினோம்.

இவைகளெல்லாம் உனக்குச் சொந்தமாக்கினால் என்ன செய்வாய்?” என்று குருதேவர் கேட்டார்.

அவர் கேட்ட வேகத்தில் யாம் சொன்ன பதில் “ஏழைகளுக்குத் தர்மம் செய்வேன் என்றோம்.

பதில் சொன்ன வேகம்தான் எனக்குப்படார்…ர்ர்..” என்று ஓர் அடி விழுந்தது. அடித்தவர் குருதேவர். யாம் கதி கலங்கி விட்டோம்.

அந்த நிமிடமே எல்லாப் பொருள்களும் மறைந்து போனது. அதைத் தொடர்ந்து குருதேவர் கூறினார்.

நீ ஒரு பொருளை தர்மம் செய்கிறாய் என்று கூறினால் அதைத் தொடர்ந்து உன்னைத் தேடி வருபவர்கள்
1.தங்களுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி
2.“நான் சாகப் போகின்றேன் என்னுடைய கஷ்டங்களிலிருந்து மீளவே வழி தெரியவில்லை
3.நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சுவார்கள்.

நீயும் இரக்கப்பட்டுத் தானம் செய்கிறாய் என்றால் அவர்களுக்குப் பொருளைப் பற்றித்தான் ஞாபகம் வருமே ஒழிய
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம்
2.அவர்களுக்கு உண்டாகாது.

ஆகையால் நீ எதைத் தானம் செய்ய வேண்டும்? 

நீ, பிறருக்கு பொருள் அடிப்படையில் உதவ வேண்டும் என்று முற்பட்டால், பிறகு உன்னைத் தேடி வருபவர்கள், “எனக்கு ஏராளமான துன்பங்கள் இருக்கின்றது என்று, 
1.இல்லாத துன்பங்களை இருப்பது போல் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.நீயும் இரக்க உணர்வு கொண்டு அவர்களுக்குத் தானங்கள் செய்துகொண்டிருந்தால், 
3.அவர்களுக்கு ஆசைகள் தான் பெருகும்.

மனிதர்களுடைய தேவைகளைப் பொருள்களை அள்ளிக் கொடுத்துத் தீர்த்து வைக்க முடியாது. 

ஒரு தேவையை நிறைவேற்ற மனிதருக்கு மற்றொரு தேவையும் உருவாகும். ஆகவே அவர்கள் அறிய வேண்டியது பெறவேண்டியது ஒன்றே ஒன்று.

அது…, அகப்பொருளின் உணர்வின் தன்மையுடன் மெய்ஞான உணர்வின் தன்மையைக் கலந்து வளர்த்து இருளைப் போக்கிப் பொருளைக் காணும் நிலையைப் பெறச் செய்யவேண்டும்.

1.புறப்பொருளைத் தேடாது அகப் பொருளைத் தேடும் பொழுது
2.புறப் பொருள் தானே வரும்
3.புறப் பொருளைத் தேட வேண்டிய அவசியமே இல்லை என்று குருநாதர் தெளிவாக்கினார்.