ஆறறிவு கொண்ட மனிதரான நாம் பலவிதமான உடல் உறுப்புகளைக்
கொண்ட உயிரினங்களை உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்துகொண்டோம்.
இப்படி அறிந்து கொண்ட நிலைகளிலிருந்து நாம் என்ன செய்யவேண்டும்? நமக்குள் எப்படி நல்ல குணங்களைச் சமைத்தல் வேண்டும்?
ஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால்
அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.
அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால் “ஈஸ்வரா…”என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாம் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.
இவ்வாறு தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள்
உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் வீரியத்தைக் குறைக்கின்றது.
உதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால்,
மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது சுவையாக மாறுகின்றது.
ஒருவர் தவறு செய்கிறார் என்று நாம் அறியும் பொழுது நாம்
அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து,
1.அவருடைய அறியாமை நீங்கவேண்டும்,
2.அருள்ஞானம் அவரில் பெறவேண்டும்,
3.மகரிஷிகளின் அருள்சக்தி அவர் பெறவேண்டும்,
4.தெளிந்த மனம் அவர் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும் “அவரை இயக்கும்…
தீய உணர்வுகள்” நமக்குள் விளையாது.
அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத்துடிப்பாக
இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால் அவர் கேட்கமாட்டார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும்
பொழுது, நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மை என்று நாம் சொல்லும் பொழுது அவர்
ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.
அப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில்
உருவாகும் தன்மை வருகின்றது.
எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில்
போட்டால் என்னவாகும்?
வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும். பின் அது
சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும்.
ஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப்
போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.
சமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான்
பதார்த்தங்களை உருவாக்கவேண்டும்.
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு
செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல
வேண்டும்.
ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை
ஊட்டவேண்டும். ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே
விளையாது. நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.
1.ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி
2.நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும்.
3.வெறுப்பின் நிலை வளர்ந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே
வராது.
ஆகவே நாம் இதுபோன்ற நிலைகளை அறிந்து…, எதனை எவ்வாறு எதன்
வழியில் நாம் உருவாக்கவேண்டும்? என்ற நிலையில் “நாம் பக்குவப்படுத்தும் நிலையில்”சமப்படுத்துதல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால் பக்குவப்படுத்தும்
பண்பும் வருகின்றது.
அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில்
வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.
1.இப்படி அடக்கும் தன்மை வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
2.சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல் சீராக அமைய இது
உதவும்.
நாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெருவாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல்
வேண்டும்.