ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2017

“போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோயை எவ்வாறு போக்கினார் என்று அனுபவபூர்வமாக உணர்த்தினார் குருநாதர் – எம்மையும் அதைச் செயல்படுத்தும்படி சொன்னார்

தாவர இனங்களுக்குண்டான ஆற்றல்களை அறிவதற்காக எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார் குருநாதர்.

போகர் பல தாவர இனங்களை எப்படி நுகர்ந்தார் என்று எனக்கு உணர்த்துவதற்காக ஒரு கட்டுப் பீடியைக் கொடுத்து அதை அப்படியே குடிடா… என்கிறார்.

அதே போல பத்து சிகரெட்டையும் பற்ற வைத்து “மொத்தமாக ஊது…” என்கிறார். எனக்கு வாயெல்லாம் எரிகின்றது.

இதை எப்படி உறிஞ்சுகின்றாயோ இதனுடைய தன்மை போல அந்தத் தாவர இனத்தின் தன்மையை நீ எப்படி நுகர வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

கணேஷ் பீடியைத்தான் அவர் குடிக்கச் சொல்வார். கணேசன் என்றால் என்ன?

1.கணங்களுக்கெல்லாம் ஈசனாக அவன் படைப்பது போல
2.நீ எடுக்கும் இந்த உணர்வின் தன்மை
3.உன் உடலிலுள்ள கணங்களுக்கு அந்த ஈசனாக இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு எப்படி இருக்கிறது என்று காட்டுகின்றார்.

வெறும் கணேஷ் பீடி என்று தான் நினைத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமலே இத்தனை விஷயத்தையும் குருநாதர் காட்டுகின்றார்.

பீடியைக் குடிக்கச் சொல்லும் பொழுது “மாட்டேன்…” என்று சொன்னாலும் உதை விழுகும்.

ஆக அதன் மூலம் தாவர இனங்களை என்னை நுகரச் செய்தார். அதனின் உணர்வின் தன்மை கொண்டு நோய்களை எப்படி நீக்க வேண்டும்? என்று காட்டினார்.

அதே சமயம் சாதாரண மக்களுடன் நீ பழகப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அவர்களுக்குள் பதிவு செய்த பின் அவர்களின் நோயை நீக்க நீ எப்படி எண்ண வேண்டும் என்று உணர்த்தினார்.

அன்று போகன் ஒவ்வொரு தாவர இனத்தையும் மோகித்தான். தன் உணர்வுக்குள் அந்தச் சத்தின் தன்மையை அடைக்கலமாக ஆக்கினான். ஆகவே அவனுக்குப் போகன் என்று பெயர் வந்தது.

ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் அவன் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும் சக்தியாகக் கொண்டு வந்தான்.

எத்தகைய நஞ்சின் தன்மை கொண்ட தாவர இனமாக இருந்தாலும் இவனுக்குள் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மை தாவர இன சத்திற்குள் இருக்கக்கூடிய நஞ்சினை எப்படி அடக்கினான்.

அவன் வளர்த்துக் கொண்ட நிலைகள் இரு நிலையாகும் பொழுது தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாக மாறுகின்றதோ இதைப் போல போகன் தனக்குள் தாவர இன சத்தை மோகித்தான்.

தன் உடலுக்குள் அதைப் பாய்ச்சச் செய்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் விளையும் எண்ணங்களாக “சீதாராமா…” என்று அன்று வான்மீகி சொன்னது போல சுவை மிக்க நிலையை அவன் எடுத்து வளர்த்துக் கொண்டான்.

இந்தச் சுவையான உணர்வுகள் அது எண்ணங்களாக மாறி அவன் வாக்கினைப் பிறருக்குக் கொடுக்கப்படும் பொழுது அது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அம்பாகப் பாய்கின்றது.

போகன் பாய்ச்சும் அந்தத் தாவர இனச் சத்தின் உணர்வுகள் அவர் உடலில் இந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அடக்கி ஆற்றல்மிக்கதாகச் செயல்படுத்தச் செய்கின்றது.

1.இவ்வாறு மற்றவர்கள் உடல்களில் வரும் நோய்களை
2.தன் “வாக்கின் வன்மை கொண்டு” போகன் எப்படி நீக்கினான் என்ற நிலையைக் குருநாதர் எமக்குக் காட்டிற்குள் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

குருநாதர் எமக்குக் காட்டியதை போகர் நோய்களை நீக்கியது போல் உங்களுக்கும் அத்தகைய ஆற்றல்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.அந்த “ஒளி பெறும் உணர்வின் ஆற்றல்” உங்களுக்குள் அது பெருக வேண்டும்.
2.நீங்கள் செய்து கொண்ட நன்மையின் தன்மைக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தின் தன்மைகளை அகற்ற வேண்டும்.
3.நீங்கள் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நஞ்சினை அகற்ற வேண்டும்.
4.இதைக் கேட்டுணர்ந்தோர் உள்ளங்களிலும் இது ஊடுருவி அவர் அறியாது இருள் சூழச் செய்யும் இருள்கள் விலக வேண்டும்.
5.அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்.

எல்லோரும் அந்த மெய்வழி காணும் நிலைக்கு நீ எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு இட்ட கட்டளைப்படித்தான் அதை உங்களுக்குள்ளும் பதியச் செய்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதையெல்லாம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அந்த ஆற்றல்களை நீங்களும் பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.