ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2017

தட்டான் பூச்சி எந்தெந்தப் பூவில் தன் முட்டையை இடுகின்றதோ அந்த உயிர் அந்தப் பூவின் உணர்வைக் கவர்ந்து (XEROX) பலவிதமான வண்ணத்துப் பூச்சிகள் உருவாகின்றது – இதைப் போன்று அகஸ்தியமாமகரிஷியின் உணர்வை நாம் கவர்ந்து நாமும் “நிச்சயமாக மகரிஷியாக முடியும்”

ஒரு வகையான புழு இனம் ஒன்று இருக்கின்றது. அது பல சிறு குச்சிகளைச் சேர்த்து  அடுக்கடுக்காக வைத்து கூடு போன்று வைத்து அதனுள் அடைபட்டு  விடுகின்றது. (நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

கூட்டினுள் அடைபட்டபின் வெளியில் வரமுடியாத நிலையில்…, "வெளியில் வரவேண்டும்" என்ற உணர்வுகளால் தூண்டப்படுகின்றது.

இதனால் அந்தப் புழுவின் உணர்வுகள் மாறி மாறி அந்தப் புழுவே "தட்டான் பூச்சியாக" மாறுகின்றது. அதனின் உடல் சிறுத்து இந்த உணர்வின் தன்மை கூட்டை விட்டு  வெளியேறும் அளவிற்கு மாறுகின்றது.

நெற் பயிர்கள் அதிகமாக இருக்கிறதென்றால் அந்தப் பகுதியில் தட்டான் பூச்சிகள் அதிகமாக இருக்கும்.

பயிர்களில்  ஒரு வகையான பேன்கள் இருக்கும். அதை உண்பதற்காக அந்தச்  செடிகளில் தட்டான் பூச்சிகள் அமரும். அதன் உணர்வை நுகரும். அதே சமயத்தில் அந்தச் செடிகளில் தன் முட்டைகளை இட்டுவிடும்.

தட்டான் பூச்சிகள் தாம் பிறந்தபின் ஆண் பெண் என்ற தன்மை கொண்டு, இணை சேர்கின்றன. இதனின் தொடர் கொண்டு பெண் தட்டான் பூச்சி தன் முட்டையை நெல்  செடியில் இட்டதென்றால் அது நெல் பூச்சியாக வரும்.

1.நெல் செடியின் உணர்வினை நுகர்ந்து
2.அந்த இலையின் நிலைகள் நெல்லின் தன்மை எப்படியோ
3.அதைப் போன்று இறக்கைகள் கொண்ட பூச்சியாக மாறுகின்றது.

பூச்சியாக வளர்ந்தபின் நெல் செடியில் தேன் போன்ற சுவை உள்ளதைத் தின்றுவிட்டால் நெல்கள் “கூகைகளாக” ஆகிவிடுகின்றன. 

இதைப் போன்று வேறொரு செடிகளில் முட்டைகளை இட்டு விட்டால், அந்தக் கரு முட்டை அந்த வாசனையை நுகர்ந்து அதில் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு அந்தச் செடியின் தன்மைக்கொப்ப “பட்டாம் பூச்சியாக” வெளிப்படுகின்றது.

அதாவது ஒரு செடியின் பூவில் முட்டையிட்டு விட்டால் அந்தக் கரு முட்டை பூவிற்குண்டான உணர்வினை எடுத்து அந்தப் பூ எந்தக் கலரில் இருந்ததோ அதே கலரில் இந்த பட்டாம் பூச்சிகளினுடைய இறக்கைகளின் கலர்கள்  "பள…பள.."வென இருக்கும்.

நாம் முகத்திற்குப் பூசும் பவுடர் எப்படி இருக்குமோ அதே போன்று பட்டம் பூச்சியின் இறக்கையைத் தொட்டால் மாவு போன்று உதிரும். ஆக பூவிற்கு வரும் உணர்வின் சத்தினைத் தன்னுள் எடுப்பதனால் அதனின் இறக்கையின் கலர்கள் அதே போன்றிருக்கும்.

நாம் ஜெராக்ஸ் எடுக்கிறோம். அது எந்த நிலையில் இருக்கின்றதோ அதை அந்த நிலையில் அப்படியே பதிவாக்குகின்றது. இதைப் போன்று
1.நமது உயிரின்  தன்மை எலெக்ட்ரிக்
2.”நுகர்ந்த உணர்வு” எதுவோ அந்த உணர்வின் பதிவாக மாற்றி விடுகின்றது.

முட்டை பொரிந்து பூச்சியாக வெளி வந்தபின் அதன் இறக்கைகளில் பூவின் கலர்கள் எதுவோ அதன் கலர்கள் “ஜெராக்ஸ்” போன்று பதிவாகி இருக்கும்.

பூச்சியின் உயிர்  எலெக்ட்ரிக். அதனில் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை பெற்றபின் இந்தச் செடியின் சத்தை கவரும் தன்மை பெறுகின்றது. அப்பொழுது,  அதனின்று வரக்கூடிய நிலையை எலெக்ட்ரானிக்காக மாற்றி அதன் நிலையில் அது உருப்பெறுகின்றது.

1.பூவில் வந்திணையும் அமுதின் உணர்வுகள்
2.இதனின் கரு முட்டையில் வந்திணைந்து
3.இதனின் இறக்கைகளில் ஜெராக்ஸ் செய்துவிடும்.
4.இதனால் பலவித வண்ணத்துப் பூச்சிகளை நாம் காணலாம்.

இவையெல்லாம் ஒரு தட்டான் பூச்சி எந்தெந்தச் செடிகளில் முட்டையிடுகின்றதோ அதனதன் நிலை கொண்டு அதன் நிலை பெறுகின்றது. 

ஏனென்றால் இயற்கையில் உயிரின் இயக்கம் புற நிலை கொண்டு அகத்திற்குள் இயக்குகின்றது.  புற நிலையிலிருந்து  வருவதையெல்லாம் "ஓம்  நமசிவாய" என்று தன் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

1.உயிர் இயக்கச் சக்தியாக இருந்து
2.தனது  ஈர்க்கும் தன்மை கொண்டு
3.சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இயக்கமாகவும்
4.அதனின் எண்ணங்களாகவும் அதன்வழி  உணர்ச்சிகளாகவும்
5.உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகவும் இயங்குகின்றது.

இவையெல்லாம் இயற்கையில் எவ்வாறு விளைகின்றது என்பதன் உணமைகளை அறிந்தவர் அகஸ்தியர். அவர் தம்முடைய வாழ்நாளில் “விஷத்தின் இயக்கத்தையும்… அணுக்களின் தன்மையும் எத்தகையது…?” என்பதை அறிந்து உணர்ந்தவர். 

ஒரே தட்டான் பூச்சிதான் முட்டைகளை இட்டது. ஆனால், செடிகளுக்கொப்ப அந்தக் கருக்கள் அதன் உணர்வின் தன்மையை நுகர்ந்து பல வண்ணங்களில் பலவிதமான பூச்சிகளாக உருவாகின்றது.

இவையெல்லாம் இயற்கையின் விளைவுகள்.

இதைப் போன்றுதான் அகஸ்தியர் தாம் தாயின் கருவில் சிசுவாக  இருந்த பொழுது விளைந்த உணர்வுகள் பல பல.

இதனின் துணை கொண்டு அகஸ்தியர் தாம் வாழும் காலத்தில் இயற்கையின் இயக்கத்தின் உணர்வினையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையினையும் அறிந்துணர்ந்தார்.

1.அகஸ்தியர் நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை
2.தம் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்தினார்.
3.இதனை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளன.

அவைகளை நாம் அனைவரும் நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் கவர்ந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்து விடுபட்டு
1.“நாமும் அந்த அகஸ்தியனைப் போன்று மகரிஷியாகலாம்”.  
2.அழியா ஒளிச்சரீரம் பெறலாம்.
3.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து மகிழ்ந்து வாழலாம்.

அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் அனைவரும் “நிச்சயம் பெற முடியும்”.