ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2017

எந்தத் தீமையாக இருந்தாலும் கடலில் (கங்கையில்) கரைக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கின்றது – “கடலில் கரைக்கச் சொன்னதன்” உண்மையான விளக்கம்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

விண்ணிலே உருவாகி மண்ணிலே வந்து மண்ணில் விளைந்த உணர்வை எடுத்து விண்ணை நோக்கி என்றும் விண்ணின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான்.

“அவன் வழியில்…” நாம் செல்வோம் என்றால் பத்தாவது நிலை கல்கியை அடைய முடியும். அது தான் விஜய தசமி என்று ஒன்பது நாள் கொலு வைத்துப் பத்தாவது நிலையை நாம் அடையும் மார்க்கமாகக் காட்டப்பட்டது.

இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் தொழில்கள் வளம் பெறவேண்டும் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று அனைவரும் எண்ணக்கூடிய நாள் விஜய தசமி.

இந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தால் அனைவரும் அந்த நல்ல நிலை பெறவேண்டும் என்று எண்ணினால் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் குரோதம் பகைமை என்ற இந்த உணர்வுகள் நமக்குள் நிலைத்திருக்காது.

அதை நாம் நீக்கினால் தான் பத்தாவது நிலை கல்கியை அடைய முடியும்.

ஏகோபித்த நிலைகளில் நாம் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை தீமைகளை அகற்றும். அப்பொழுது
1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையை நுகரும் நிலை இழக்கப்படுகின்றது.
2.தீமையன அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை அதிகாலையில் நாம் அனைவரும் நுகர்ந்து எடுத்து வலிமை பெற்றுவிட்டால் நம்மிடமுள்ள தீமை செய்யும் உணர்வுகள் “அனாதையாகிவிடுகின்றது”.

நம் உடல் ஈர்க்காது உணர்வுகள் வெளிப்பட்டபின் காலையில் அந்தச் சூரியனின் ஒளிக் கதிர்கள் வரப்படும் பொழுது
1.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
2.சூட்சமமான நிலைகளுக்கு “சூனியப் பிரதேசத்திற்கு” அழைத்துச் செல்கின்றது.
3.பூமிக்கு வெளியிலேயும் போகாது. பூமிக்குள் கீழேயும் வராது.
4.அதாவது சூனியமான நிலைகளை அடைந்து விடுகின்றது.

சூனியப் பிரதேசத்தில் அடைக்கப்படும் பொழுது மழை நீரோ மற்றவைகளுடன் கலந்து மின்னல்கள் ரூபமாகக் கீழே வந்துவிடும்.
1.பின் கடலலைகளால் ஈர்க்கப்பட்டு
2.தீமை செய்யும் அந்த உணர்வுகள் அதற்குள் அமிழ்த்தப்படுகின்றது.

இதைப் போன்று தான் 12 மாதங்களிலும் மனிதன் தனக்குள் வரும் தீமைகளை அகற்றுவதற்காக ஞானிகள் உருவாக்கியது தான் நாம் கொண்டாடும் பண்டிகை நாட்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் எண்ணும் பொழுது அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் ஈர்க்கும் சக்தி இழந்த பின் சூரியன் காலை ஆறு மணிக்கு வரும் பொழுது ஈர்த்து மேலே அழைத்துச் சென்றுவிடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்ந்து குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். குழந்தைகளுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் குழந்தைகளைத் திட்டியிருப்போம். சாபமிட்டிருப்போம். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள்ளிருந்து வெளி வந்த அத்தகைய தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இந்தக் காற்று மண்டலத்தில் (பரமாத்மாவில்) பரவியுள்ளது.

இந்தப் பூமியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் விஜய தசமி அன்று அனைவரும் ஏகோபித்த நிலையில் நாம் எண்ணுதல் வேண்டும்.
1.நாங்கள் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் நலம் பெறவேண்டும்
2.நாங்கள் பார்த்தோர் குடும்பங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்  
3.அவர்கள் மலரைப் போன்ற நறுமணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம்மிடமிருந்து வரும் பகைமை உணர்வுகள் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்திருப்பதை
1.அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இங்கே தடைப்படுத்திவிட்டால்
2.ஈர்க்கும் சக்தி குறைகின்றது (யாரும் ஈர்ப்பதில்லை)

சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்து மேலே கொண்டு சென்றுவிடுகின்றது. கடல் அலைகள் ஈர்த்துத் தனக்குள் அமிழ்த்திவிடுகின்றது.
1.இந்தப் பரமாத்மா சுத்தமடைகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.நமக்குள் ஜீவான்மா தெளிவடைகின்றது.
4.பின் உயிரான்மா ஒளியின் சரீரம் கொண்டு அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.