ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2017

குரு என்பவர் யார்? குரு அருளைப் பெறுவது எப்படி? குரு பலம் என்றால் என்ன?

உதாரணமாக
1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
2.மாணவன் தான் கூர்மையாக உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கி
3.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள்  பதிவாக்கினால்
4.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி
5.அந்த உணர்வே... “ஆசிரியராக” இருந்து
6.இது இவ்வாறு..., இது இந்த நிலை..., என்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.

இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.

இதைத்தான் குரு எமக்குக் காண்பித்து எம்முள் பதிவாக்கினார்.

1.தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும்
2.குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும்
3.உலகில் மிக மிக உயர்வானது.

இதில் குருவானவர் தன்  சிஷ்யனுக்கு எதை எப்பொழுது எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.

ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெற வேண்டும் என்று உயர்ந்த நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும் பொழுது குரு அருளைப் பெற முடிகின்றது. இதைத்தான் “குரு பலம்” என்று சொல்வது.

உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும் எமக்கு உணர்த்தினார் குரு.

இப்படி இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும் அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிப் பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகின்றது.

நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி வாய்ந்த மனிதனாகின்றீர்கள்.

ஆனால் “ஒருவன் என்னை ஏசுகின்றான்..., எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்...” என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது என்னவாகும்?

மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகி சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.

சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற் பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.

கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது.

இதுவும் ஆசிரியராக வருகின்றது. குருவாக வருகின்றது. ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.

இதை வென்றவர் துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கற்றுணர்ந்தார்.

விண்ணுலக ஆற்றலின் தன்மையை அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை அவருக்குள்ளேயே விளைய வைத்தார். அவ்வாறு அவருக்குள் விளைய வைத்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

குரு உபதேசித்த உணர்வினை அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை யாமும் நுகர்ந்தோம் கண்டறிந்தோம்.

விண்ணுலக ஆற்றலை எவ்வாறு பருக வேண்டும்? எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும் என்று உணர்த்திய அருள் நெறிகளை நீங்களும் பெறவேண்டும்.

அதனை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து இந்த உணர்வை வலுக்கொண்டதாக மாற்றிட முடியும்.

இம்மனித வாழ்க்கையைக் கடந்து செல்வோம் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக இருந்திட முடியும்.

நாம் அனைவரும் அத்தகைய நிலைகளை நிச்சயம் பெறுவோம்.