Saturday, July 8, 2017

எல்லோருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று சேவையாக அதைச் செய்தாலும் “அதில் வரும் இடையூறுகளிலிருந்து” காத்திடும் நிலையைக் காட்டினார் குருநாதர்

பொதுவாகவே ஒருவர் நம்மை ஏமாற்ற வேண்டுமானால்… “ஒரு பொருள் இந்த இடத்தில் மலிவாக கிடைக்கின்றது… அங்கிருந்து பொருளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்தோம் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்” என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும், 

அவருக்கு  நாம் அடிபணிந்து விடுவோம். லாபம் கிடைக்கும் என்ற நிலைகளில் அவர் பின்னால் நாம் அலைந்து கொண்டிருப்போம்.

இதைப் போன்றுதான் இந்தக் கோவில்களில் அர்ச்சனை அபிஷேகம் செய்தால் நமக்கு இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று சொன்னால் அடுத்த கணமே நாம் அர்ச்சனை அபிஷேகம் என்று செய்ய ஆரம்பித்து விடுவோம்.

ஆனால் ஞானியர்கள் கூறியது என்ன?

“எண்ணியது எதுவோ…, அது நமக்குள் தெய்வமாகின்றது என்று சொல்லி வைத்தனர். அதுதான் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்பது.

1.நாம் எந்த குணத்தை இச்சை கொள்கின்றோமோ
2.அது நமக்குள் சென்று கிரியை ஆகி
3.நாம் எண்ணிய குணத்தின் ஞானமாக இந்த உடலை இயக்குவதும்
4.அதன் மூலம் நமது வாழ்க்கையின் செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன? என்பதின் நிலையை உணர்த்துவதற்காக
5.இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சொல்லி வைத்தனர்.

நமக்குத் தெய்வம் நல்லது செய்யும் என்று நம்பி யாக வேள்விகளைச் செய்து பல மந்திரங்களை உச்சரித்துச் செயல்படும் பொழுது இதே போன்று பல வேள்விகளைச் செய்து இறந்த மனிதனின் உயிரான்மா நம் உணர்வில் சிக்குகின்றது.

மேலும் தெய்வ பக்தியை அதிகமாக வளர்த்து இந்தத் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் உணர்வை வளர்த்து நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தபின் நமது உயிரான்மா அதே மந்திரத்தை ஜெபிக்கும் இன்னொருவர் கையில் சிக்கி விடுகின்றது.

இதைத் தான் “கைவல்யம் என்பது. இதன் வழி கடைசியில் நாம் கீழான பிறவிகளுக்கே, (பாம்பு போன்ற) செல்ல நேரிடும்.

இன்று “சாதுக்கள்…என்று சொல்லிக் கொள்பவர்களும் நம்மை (மக்களை) தீமைகளில் இருந்து விடுபடச் செய்வதற்குப் பதிலாக
1.மீன்களுக்குத் தூண்டிலில் இரையை வைத்துக் காட்டி மீனைப் பிடித்து சமைத்துச் சாப்பிடுவது போன்று
2.“இந்தத் தெய்வத்தை நான் கைவல்யப்படுத்தியுள்ளேன்
3.நான் ஆணையிட்டால் இவையெல்லாம் நடைபெறும் என்று சொல்லி
4.நம்மை மெய்யுணர்வு பெறும் நிலைகளில் இருந்து தடுத்துச்
5.சாங்கிய சாஸ்திரத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர்,

இந்த நிலை நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ளது.

இதனின் நிலைகளை எமது குருநாதர் எமக்கு சொல்லிக் கொண்டு வரும்பொழுது, “ஆண்டவன் சக்தியை நான் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மை விட நீ கெட்டிக்காரனா? என்ற மனப்பான்மையில் உன்னைப் பார்ப்பார்கள்.
1.நீ எவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாலும்
2.இதிலிருந்து உன்னைக் காக்கும் சக்தி வரவேண்டும்.
3.தர்மத்தின் மேல் உன்னுடைய சிந்தனைகள் இருந்தாலும்
4.தர்மத்தைக் காக்க வேண்டிய சக்தி உன்னிடம் இருக்க வேண்டும்.

தர்மத்தை காத்திடும் உணர்வின் சக்தியை வளர்த்துக் கொண்ட மகரிஷிகளின் அருள் சக்தியைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

 மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்று அதனின் இச்சையை உனக்குள் கூட்டி அதை உனக்குள் கிரியை ஆக்கி அதனின் ஞானத்தின் நிலைகள் கொண்டு வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உபதேசித்தார்.

நீ நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்கின்றாய். ஆனால் உன்னால் நன்மை பெற்றவர் உன் மீது பற்று கொள்கின்றார். நீ நன்மைகள் செய்வது அவர் மனதில் ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

அந்த நிலையில் நோயின் நிமித்தம்  அவருடைய உடலை விட்டுப் பிரியும் ஆன்மா அவர் உன்மீது பற்று கொண்டதின் காரணமாக உன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

பின் அவர் எடுத்துக் கொண்ட வேதனைகள் இங்கே வந்துவிடும்  என்பதையும் காண்பிக்கின்றார்.

அது மட்டுமல்லாமல் மந்திர ஒலிகள் கற்றுக் கொண்டவர்கள் “நான் பெரியவனா…, நீ பெரியவனா…” என்கின்ற ரீதியில் மனதில் அகந்தை கொண்டு உன்னைப் பரீட்சித்து பார்க்கும் நிலை கொண்டு உனக்குத் தீமைகள் செய்ய முயல்வார்கள்.

மக்களுக்கு நன்மைகள் தானே செய்யப் போகிறோம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால்
1.”மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும்” என எண்ணி நாம் செய்யும் சேவையில்
2.எத்தனை இடையூறுகள் இருக்கின்றன என்பதை விளக்கி
3.அதிலிருந்து காத்திடும் நிலையையும் காண்பிக்கின்றார் குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள்ஞான வழியில் மெய்ஞான உணர்வினை வளர்த்து தீமைகளை ஒடுக்கி யாம் உங்களிடத்தில் அருள்ஞான வித்தினைப் பதிக்கின்றோம்.

உங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வித்தினை மகரிஷிகளின் அருள் துணை கொண்டு வளர்த்திட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்தோம் என்றால் நமது உயிர் அந்த உணர்வின் சக்தியைக் அதனை கிரியையாக மாற்றி அதனின் ஞானத்தின் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்வாக நமக்குள் செயல்படும். 

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து அருள் மகரிஷிகளின் உணர்வுகளுடன் ஒன்றச் செய்து அந்த ஞானத்தின் வழியில் பிறவியில்லாப் பெருநிலை அடைந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றோம்.