யாம் (ஞானகுரு) நமது குருநாதர் காண்பித்த அருள்வழி கொண்டு பல ஊர்களுக்கும் சுற்றுப்
பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் எமது தாய் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து
கொண்டிருந்த பொழுது குருநாதர் அதை எமக்கு உணர்த்தினார்.
1.உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே,
2.அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்,
3.அதன் பிறகுதான் நீ விண்ணுக்குப் போக முடியும் என்று நினைவுபடுத்தினார்.
ஆகையால் எமது தாயைச் சந்திக்கச் சென்றோம்.
அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களால் சாப்பிட முடியவில்லை, கண் பார்வை
முழுவதும் மங்கிவிட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.
யாம் அது சமயம் எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால் எமது
தாய் “வீரம்மா” என்று பெயர் சொல்லி அழைத்து “ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து இரண்டு
மிளகு சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வை…, வீரம்மா” என்றார்கள்.
ஏனென்றால் எமது தாய் முட்டை கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
யாமும் முன்பு முட்டை கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.
எமது தாயால் அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால், “வேக வைத்த
கோழி முட்டையில், இரண்டு மிளகும், சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா” என்றால்
1.எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது?
2.கோழியின் மேல்தான் இருக்கின்றது.
இதைத்தான் குருநாதர் உனது அம்மா முட்டையும் கோழிக் கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள்.
அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது என்று கூறினார்.
எமது தாய்க்கு உதவியாக என் மனைவியை இருக்கச் செய்துவிட்டு யாம் தாரமங்கலம் வந்துவிட்டோம்.
ஏனென்றால் யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து ஊர் முழுவதும் விளம்பரமும் செய்துவிட்டார்கள்.
இதனால் தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வரவேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள
அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத்
தாரமங்கலம் வந்துவிட்டோம்.
சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம் “ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை
மிகவும் குன்றியிருக்கிறது, ஆகவே ஏதேனும் தகவல் வந்தால் ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி
வையுங்கள்”என்று கூறியிருந்தார்கள்.
தாரமங்கலத்தில் யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து தியானத்தில் இருந்து
கொண்டிருந்தோம். அப்போது, எமது தாயின் ஆன்மா வெளி வருகின்றது.
அது சமயம் எமது குருநாதர் சொன்னது போன்று எமது தாயை மனதில் நினைத்துத் தியானம்
செய்தோம். அப்பொழுது அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள்
“யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள்…” என்றார்கள்.
இது தாரமங்கலத்தில் நடந்த சம்பவம். அம்மாவின் உருவம் அதனின் உடைகள், அதனின் உணர்வுகள்
அங்கே தெரிந்தது. அப்பொழுது எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச்
செய்தோம்.
எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக்
கரைத்தபின்தான்
1.அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியினை யாம் பெற முடிந்தது.
3.அது வரையிலும் எம்மால் பெற முடியவில்லை.
4.அதுவரையிலும் எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை.
அன்னை தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால், அவர்களின் உயிரான்மாக்களை
முதலில் விண்ணிற்கு ஏற்றவேண்டும் என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.
1.நான் உனக்குக் குருவாக இருக்கலாம்,
2.அருள் ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம்.
3.அதனால் உன் அன்னை தந்தையை விண்ணிற்குச் செலுத்த முடியும்.
4.அதன் உணர்வின் தன்மை கொண்டுதான் என்னையும் அங்கே அழைத்துச் செல்லமுடியும் என்று
குருநாதர் உபதேசித்தார்.
குரு வாக்கு தப்புவதில்லை.
நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். அது சமயம்தான் எமது
தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம்.
எமது தந்தையின் இறப்பின் பொழுதுகூட யாம் அவர் அருகில் இல்லை. அது சமயம் கரூரில்
கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து கரூருக்குக் கால் நடையாக
வந்திருந்தோம்.
அது சமயம்தான் எமது தந்தையின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது
அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே, ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.
அங்கே ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி
தெரிந்தது. “ஐயோ, உங்கள் அப்பா போகிறாரே…” என்றார், அருகிலிருந்த
இன்னொருவர் “யாரோ ஒரு பெரியவர் போகிறார்” என்று சொன்னார்.
யாம் அங்கேயே அமர்ந்து எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.
1.எம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைதான் எமக்குக் கடவுள்.
2.எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான்
3.அதன் துணை கொண்டுதான் குருநாதர் காண்பித்த அருள்வழியில் அவர்களை விண் செலுத்தினோம்.
முதலில் எமது தந்தை விண் சென்றார். இருந்தாலும் எமது தாயையும் விண்ணிலே சேர்த்துச்
“சிவசக்தியின் உணர்வுகளாக” அங்கே வளர்க்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் ஒளியின் சரீரமாக
வளர்க்க முடியும் என்று குருநாதர் உணர்த்தினார்.
அதன் பிறகு இதன் உணர்வின் ஒளி கொண்டு உன்னுடைய உணர்வுடனே வருகின்றேன். உணர்வின்
ஒளியை உணர்த்துகின்றேன். என்னை விண்ணில் செலுத்திவிடு, உணர்வின் ஒளியாக இயக்கிவிடு
என்றார்.
குரு சொன்ன வாக்கின்படி எம் அன்னை தந்தை விண் சென்றபின் குருவின் உணர்வின் ஒலிகளை
அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தும் நிலையாகச் சில
நிலைகளைச் செய்தோம்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்துவதற்காக விண்ணின் ஆற்றலின் உணர்வின்
தன்மையைப் பெறுவதற்கு எம்மை கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்குப் போகுமாறு செய்தார்
குருநாதர்.
1.அங்கே கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்து
2.தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி? என்பதை
3.எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின் தான்
4.யாம் பேருண்மையின் உணர்வுகளை அறிய முடிந்தது.
ஆகவே இன்றைய நிலைகளில் யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும் பேருண்மையின் உணர்வுகள்.
அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னோரின்
உயிரான்மாக்கள் இன்னோரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை. அவர்களையும் விண்ணுக்கு
ஏற்ற முடியும்.
நீங்களும் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக துருவ தியானத்திலும்
பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து எங்களுடன் வாழ்ந்து, வளர்ந்து உடலைவிட்டுப்
பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
3.அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும்
4.பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே அவர்களை விண் செலுத்தினால்
“அவர்களுடைய உணர்வின் தொடர்” உங்களுக்குள்ளும் வரும்.
அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால்
சப்தரிஷிகளின் அருள் சக்தியை ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையை அடைந்தவர்களின்
அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறமுடியும்.
1.உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் நிலைக்கின்றது.
2.இதனின் உனர்வின் தன்மை கொண்டு உங்களுக்குள் உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
3.இதன் உணர்வின் தன்மையை நீங்கள் எளிதில் பெறமுடியும்.
4.உங்களை நம்புங்கள்.
இதன் வழி செயல்படும் அனைவருக்கும் எமது அருள் ஆசிகள்.