ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2017

வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் “தன்னைக் காட்டிலும் வலுவான” மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அடுத்த நிலையை அடைய வேண்டும்

நுகர்ந்த உணர்வின் அறிவு கொண்டுதான் மற்ற உயிரினங்கள் வாழுகின்றது. மனிதர்கள் நாம் பேசுகின்றோம் உயிரினங்கள் ஒலிகளை எழுப்புகின்றது. ஆனந்தக் குரல் சோகக் குரல் எதிரிகளைக் கண்டபின் அது எப்படி வாழ வேண்டும்? என்று, எதிரொலிகளை அனுப்புகின்றது.

உதாரணமாக கோழியை எடுத்துக் கொண்டால் தன் குஞ்சுகளை வளர்க்கும் பொழுது கருடனைக் கண்டால் ஒரு விதமான அச்சுறுத்தும் குரல்களை எழுப்புகின்றது.

உடனே குஞ்சுகள் அனைத்தும் கோழியின் சிறகிற்குள் அடைக்கலம் புகுந்துவிடுகின்றது. இது அதனுடைய பரிபாஷைகள்.

ஆனால் கோழி குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. அதன் உணர்வின் தொடர்பு கொண்டு இயக்கச் சக்தியாக இயங்குகின்றது.

எலிகளை எடுத்துக் கொண்டாலும் பூனையின் மணத்தை நுகர்ந்தால், அடுத்த எலிகளுக்கு எச்சரிக்கை செய்கின்றது. அதனுடைய ஒலிகளை எழுப்பியவுடன் மற்ற அனைத்தும் அமைதியாக இருந்து விடுகின்றது.

பூனையோ தன் இரைக்காகப் பதுங்கி இருக்கின்றது. ஆனால், எலியின் மணத்தை நுகர்ந்து, நுகர்ந்து அதே மூச்சை வெளியிடுகின்றது. அப்பொழுது, இந்தப் பூனையின் மணம் மறைந்துவிடுகின்றது.

இவ்வாறு பூனையின் மணம் மறைந்து எலியின் மணம் வெளிவரத் தொடங்கியவுடன் எலி வெளிவரத் தொடங்கி விடுகின்றது.

பூனை அந்த எலியின் சிரசை அடித்து விடுகின்றது. ஏனென்றால், எலியின் மற்ற உடல் பாகம் பிடித்தால், அது கடித்துவிடும் என்று, பிடித்தவுடனே உதறிவிடுகின்றது. அதன் பலத்தைக் குறைத்து விடுகின்றது. பின்பு அதைக் கொன்று தனக்கு இரையாக்கிக் கொள்கின்றது.

இது ஒவ்வொன்றும், உணர்வுகளுக்கு ஒப்ப வெளிப்படுத்துகின்றது. மனிதனாக இருக்கும் நாம் பல பல எண்ணங்களை நமக்குள் கலந்து கொள்வோம். பல தந்திரங்களையும் கற்றுக் கொள்வோம்.

அவைகளில் ஒரு மாட்டைப் பிரியமாக வளர்க்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த மாட்டிடம் யார் ஒருவர் உணர்வை அதிகமாகச் செலுத்துகின்றாரோ அவருடைய குணமெல்லாம் அந்த மாட்டிற்கு உண்டு. அவர் யாரையாவது வெறுக்கும் தன்மை வந்து, கோபமாகப் பேசுகின்றார் என்றால் அதே போன்று அந்த மாட்டிற்கும் வரும். அது பதிவாகி உடனே தாக்க ஆரம்பிக்கும்.

இந்த மனிதனின் உணர்வுகள் அதனின் உடலில் பதிவாகி அத்தகைய செயல்களைச் செயல்படுத்தும், ஏனென்றால் அதன் உடலில் உள்ள “காந்தப் புலன்” அதைக் கவர்ந்து அந்த உணர்வுக்குக்கொப்ப அந்த மாடு வளர்கின்றது.

சிலர் நாய் வளர்க்கும் பொழுது அந்த நாய் யார் மேல் அதிகமாகப் பற்று வைத்திருக்கின்றதோ அந்தப் பற்றுக்கொப்ப அதனுடைய உணர்வுகளும் அறிவும் இருக்கும். அவர்கள் யாரிடமாவது சீறித் தாக்கித் தன்னிடம் அணுகாது செய்திருந்தால் அதே உணர்வு நாயிற்கும் வரும்.

ஆனால் மனிதர்கள்பால் வளரப்படும் பொழுது எத்தகைய உணர்வு கொண்டு வளருகின்றதோ நம்மை உற்று நோக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் அதனுடைய உடலில் படருகின்றது.
1.மனிதன் வளர்க்கும் உயிரினங்கள்
2.அது இறந்தபின் யார் அதை வளர்க்கின்றனரோ
3.அவர்களின் உடலுக்குள் புகுந்து, அது மனிதனாகப் பிறக்கின்றது.

நம் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்துவிட்டால் அது தீண்டி விடுமே என்ற அச்சத்தின் உணர்வாக நுகர்ந்தால் அந்தப் பாம்பின் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நாம் நுகர்ந்து அந்தப் பாம்பின் நினைவே வரும்.

அந்த நினைவு கொண்டு எண்ணங்களைச் செலுத்தும்போது பாம்பு அவருக்கு நேராகவே வரும். பாம்பு அடிக்கடி அவர் கண்ணுக்குத் தென்படும். இவர் எண்ணத்தின் மணத்தை நுகரப்படும் பொழுது தன் இனமென்ற நிலைகளில் தாராளமாக வரும்.

அது வரும் பொழுது நாம் அஞ்சி ஓடுவோம். அத்தகைய நிலை வரும் பொழுது பாம்பைக் கண்டால் அடிக்க மனம் வராது.

அவர் பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுவார். ஆனால் அடுத்தவர்தான் அதை அடிப்பார். இதுவெல்லாம் நாம் அறியாமலேயே நடக்கும் உயிரின் இயக்கங்கள்.

இதைப் போன்று நாம் பல கோடிச் சரீரங்களில் வலுவான  உணர்வுகளை நுகர்ந்து அதன் அறிவாக அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் உணர்வே வலுவாகின்றது.

இவ்வாறு அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் “கூர்மை அவதாரம்”.

1.எதைக் கூர்மையாக வளர்த்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுகள் அந்த உடலில் பெருகி,
3.அந்த உடலை விட்டு இறந்தபின்,
4.எந்த உணர்வு வலுப் பெற்றதோ அந்த உடலுக்குள் சென்று
5.அதன் ரூபமாக, அந்த உடலாக மாற்றி விடுகின்றது
6.இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் பல வகையிலும் பிறந்துள்ளோம்.

மற்ற உயிரினங்கள் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றன. மற்ற உடல்களை (மாமிசத்தை) உணவாக உட்கொள்பவை புல்லைத் தின்பதில்லை. புல் பூண்டுகளை உணவாக உட்கொள்பவை சைவம், மாமிச உணவை உணவாக உட்கொள்பவை அசைவம்.

1.உணர்வால் இயக்கப்பட்ட
2.உணர்வின் சக்தி பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உடலான பின்
3.அத்தகைய உணர்வை எடுத்துத்தான் அதைக் கொன்று புசிக்கின்றது.    

ஆனால் கொன்று புசிக்கும் பொழுது அந்த உயிர் அதனுடைய உடலுக்குள் சென்று அது தன் குட்டியானபின் (தின்ற உடலின் உயிர் தன் குட்டியாக உருவானபின்) குட்டியைப் பாதுகாக்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பல சரீரங்களுக்கு இரையாகி இரையாகி, நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் இறையாக்கி அதன் வலு கொண்டுதான் வராகன் என்ற வலிமை பெறுகின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களை உற்று நோக்கி அதனின் வலுவைக் கண்டுணர்ந்து அதனின்று மீண்டிடும் உணர்வை நுகர்ந்து அதன் உணர்வை இறையாக்கி இறையின் உணர்வாகத் தன் வாழ்க்கையை நடத்துகின்றது.

வலுவான உடல்கள் கொண்ட உயிரினங்கள் மற்றதைக் கொன்று தனக்கு இரையாக்கி கொள்கின்றது.

1.வலுவானது
2.“வலு இழந்ததின் தசைகளை” இரையாக்கிக் கொள்கின்றது.

1.வலுவிழந்ததோ
2.”வலுவான உணர்வை” இரையாக்கிக் கொள்கின்றது. 

நாம் இன்று மனிதனாக இருப்பினும் நம்மைக் காட்டிலும் வலுவான “மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து” இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் மெய்ஞானியாக ஆக வேண்டும்.