மாமகரிஷி அகஸ்தியர் நமது பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்து நிலைகளையும் தமக்குள்
அதிபதியாக்கி தமது வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்று தம்முள் வரும் அனைத்து உணர்வின் தன்மைகளையும் அடக்கித் தம்முள் ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெற்றவர்.
துருவத்தின் ஆற்றலைத் தம்முள் கண்டுணர்ந்த அகஸ்தியர் அதனைத் தம் இன மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்று பேருண்மையின் தத்துவங்களை வெளிப்படுத்தினார்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு உயிரணு தான்
நுகர்ந்த உணர்வுகளை எப்படி அணுக்களாக உருவாக்குகின்றது? அந்த அணுக்களுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது? என்பதை அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.
அகஸ்தியர் இந்தப் பிரபஞ்சத்தையும், பூமியையும் ஒப்பிட்டு அந்த உணர்வின் தன்மையை
தம்முள் வளர்த்தார்.
மெய்யுணர்வை உணர்ந்த அகஸ்தியர் அதைத் தாம் நுகரப்படும் பொழுது அது அவருக்குள் அணுவாக உருவாகின்றது.
அவருக்குள் உருவான அணுக்கள் அறிந்திடும் உணர்வை உணவாக எடுக்கும் சக்தி பெறுகின்றது.
அந்த உணர்வின் தன்மை அவருக்குள் வளர்ச்சி அடைந்த பின் அவர் துருவத்திலிருந்து வரும் ஆற்றலை அறிந்து அதனைத் தமக்குள் வலு பெறச் செய்தார்.
அவர் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவருடைய இரத்தத்தில் கரு முட்டைகளாக வளர்ந்து அவருடைய உடல் முழுவதும் பரவியது. பின் அவைகள் அவருக்குள் உயர்ந்த அணுக்களாக உருவாகியது.
நாம் நுகர்ந்த அணுக்களை நமது உயிர் நமது உடலுக்கு எப்படி அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.அகஸ்தியருக்குள் இருக்கும் அணுக்கள்
2.தனக்குள் வரும் நஞ்சினைப் பிரித்துவிடும் உணர்வினை வலுகூட்டி
3.நுகர்ந்த உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
இன்று நீங்கள் மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கலாம். அது தான் நுகர்ந்த மூச்சலைகள்
மோதியபின் வெளிச்சம் தருகின்றது.
அது எப்பொழுதும் மின்னிக் கொண்டேயிருக்கும்.
இதைப் போன்று அருள் ஒளியின் உணர்வை அணுக்கள் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மின் அணுவாகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் அலையை ஆன்மாவாக மாற்றும் பொழுது தீமை என்ற நிலைகளைப் பிளந்து தள்ளுகின்றது.
இதன் வழிகொண்டு தனக்குள் தீமை இல்லாத நிலைகளை உருவாக்குகின்றது.
உதாரணமாக சீராகத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தங்களிடத்தில் பார்க்கலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்த நீங்கள் இரவிலே திடீரென்று விழித்தீர்கள் என்றால் உங்கள் உடலில் இருந்து “வெளிச்சம்…” வருவதைக் காணமுடியும்.
ஏனென்றால் நீங்கள் தியானித்த உணர்வுகள் உங்களில் மின்னிக் கொண்டேயிருக்கும். திடீரென்று விழித்தவுடன் அந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறிய முடியும்.
அகஸ்தியர் இதைப் போன்றுதான் தமக்குள் ஒவ்வொரு அணுவையும் ஒளியாக மாற்றியவர்.
இதன் வழி கொண்டு அகஸ்தியர் தமக்குள் பெற்ற சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தையும் இந்தப் பிரபஞ்சம் அது தான் எடுத்து விளைந்த உணர்வின் தன்மையை
1.நமது பூமி எடுத்து வாழ்வதையும்
2.இந்த பூமியில் வாழும் தாவர இனங்கள் கல் மண் மற்றும் உயிரணுக்கள் எப்படித் தோன்றியது என்பதையும்
3.தாவர இனத்தின் மணங்கள் எவ்வாறு இருக்கின்றதோ அதற்கேற்ப குணமும் அதற்கேற்ப செயலாக்கங்களும் ஒவ்வொரு உயிரினங்களிலும் எப்படி இருக்கின்றது என்பதையும் அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.
இவ்வாறு அகஸ்தியர் தாம் பேருண்மையின்
தன்மைகளை அறிந்து அதனின் ஆற்றலை வளர்த்து வரும் சமயம் தமது பதினாறாவது வயதில் திருமணமாகி தன் மனைவிக்குத் தான் கண்ட பேருண்மைகள் அனைத்தையும் போதித்தார்.
தன் மனைவி உயர வேண்டும் அந்த அருள் ஒளியால் எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். இரு மனமும் ஒன்றி எங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை
உருவாக்க வேண்டும் என்று அகஸ்தியர் எண்ணினார்.
இப்படி இருவரும் சேர்ந்து தாங்கள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு துருவத்தில் இருந்து கவர்ந்த உணர்வைத் தங்களிடத்தில் ஒளியின் தன்மையாக மாற்றினார்கள்.
“துருவ மகரிஷி”என்ற உருவாக்கும் ஆற்றல் கொண்ட ரிஷி என்ற நிலை அவர்களிடத்தில் உருவானது.
அருள் ஒளியின் உணர்வைத் தான் பெறவேண்டும் என்றும், அது தன் மனைவியும் பெற்று
வளர்ந்து, தன் மனைவி உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்றும், இரு உணர்வும் ஒன்றிய பின் உணர்வின் அணுக்களை, ஒளியின்
சரீரமாக மாற்றிடும் திறன் பெற்றனர்.
இவ்வாறு, எதனைக் கூர்மையாக உற்றுப் பார்த்து வளர்த்துக் கொண்டனரோ அதன் நிலை கொண்டு இந்த உடலை விட்டு அகன்ற பின் “துருவ
நட்சத்திரமாக”ஆனார்கள்.
அகஸ்தியர் அவரது மனைவி இருவரும் தங்களுக்குள் சிருஷ்டித்து, துருவ நட்சத்திரமான நாள்தான்
“விநாயக சதுர்த்தி”. அவர்கள் இந்த மனித வாழ்கையில் வரும் தீய வினைகளை நீக்கி அருள் ஒளியைத் தங்களிடத்தில் வளர்த்துக் கொண்ட நன்னாள்தான், விநாயக சதுர்த்தி.
அதிகாலை 4.00 மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைத்
தாங்கிப் பிரபஞ்சத்தின்
மேல் பரப்புகின்றது.
அவ்வாறு பூமியில் பரவும் நேரங்களில் நாம் துருவ மகரிஷிகளை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அனைவரும்
பெறவேண்டும்” என்று எண்ணித் தியானித்தல் வேண்டும்.
அந்த உணர்வுகளை நம்முள் ஊழ்வினை என்ற
வித்தாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த அருள் சக்திகளை நம் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிற்கும்” உணவாக கொடுத்துப்
பழக வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வந்தால் அகஸ்தியரும் அவருடைய மனைவியும் எப்படி “என்றும் பதினாறு”என்று இன்றும்
மகிழ்ந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்களோ அந்த நிலையை நாமும்
அடைய முடியும்.