ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2017

நமக்கு மூலாதாரம் எது? காலமறிந்து கருத்தறிந்து செயல்படுவது என்றால் என்ன?

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று அரச சபையில் அன்று கவி பாடினார்கள்.

நாம் என்ன செய்கின்றோம்?

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை,” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடுகின்றோம். அதனின் உட் கருத்தை அறிந்தோமா!

மூலாதாரம் என்றால் நம் உயிர். நாம் எண்ணும் எண்ணங்கள் அது நமக்குள் மோதும் பொழுது அதாவது நம் உயிரிலே மோதுகின்றது.

அப்பொழுது

1.உயிரிலே மூண்டெழும் கனலை

2.எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ

3.அந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றது.

உயிரிலே பட்டதனால் தான் அது இயக்குகின்றது. படவில்லை என்றால் அது இயக்காது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி உயிரிலே பட்டால் தான் “ஓ, ம்,” பிரணவமாகும்.., ஜீவன் பெறும்.

அப்பொழுது “ஓம்…” அந்த வெப்பமாகி கனல் எழும்புகின்றது. நாம் நுகர்ந்த சுவாசத்தை உயிர் உணர்ச்சிகளாக எழுப்புகின்றது.

ஒரு மத்தாப்பூவை நாம் கொளுத்தினால் அது எப்படிப் பல பொறிகளைக் கிளப்புகின்றதோ அதைப் போல நம் உயிர் நுகர்ந்ததை உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

1.அந்த உணர்ச்சிகள் எதுவோ

2.அது நிச்சயம் நம்மை “இயக்கும்

3.நமக்குள் “உண்மையை உணர்த்தும் என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலத்தால் அறிந்து கருத்தறியும் நிலைக்கு வரவேண்டும் என்று ஞானிகள் உணர்த்துகின்றனர்.

அதை நாம் விட்டுவிட்டோம்.

பாடலைப் பாடுகின்றோம். கருத்தை விட்டுவிட்டோம். மூலத்தையே விட்டுவிட்டோம்.

ஆக விநாயகர் அகவலைப் பாடிவிட்டுப் போகின்றோமே தவிர கருத்தினை மனதில் எண்ணிப் பார்க்கின்றோமா!

நாம் அதை உணர்வதில்லை.

நாம் எந்த நிலைக்குக் காலத்தால் அறிகின்றோமோ அது நம் “மூலமான உயிரில் இதை ஆதாரமாக இணைக்கப்பட்டு அந்த உணர்வின் தன்மை கனலாக எழும்புகின்றது.

1.அதைக் காலத்தால் ஆறாவது அறிவால் அறிந்து

2.பிறிதொரு உணர்வு இயக்கும் நிலைகளை ஞானத்தால் உணர்ந்து (கருத்தை)

3.தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக “மகரிஷிகளின் உணர்வை இணைத்து

4.அதை நாம் எவ்வாறு “நன்மை செய்யும் சக்தியாகச் செயல்படவேண்டும்? என்பதை நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தப்பில்லை.

இன்று சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாத துயர்களிலேயே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

ஆக “யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் நமக்குள் எண்ணுகின்றோமே தவிர நாம் சுவாசித்ததை உயிர் இயக்கி, அதை உணர்த்தி, இந்த உடலைச் செயல்பட வைக்கின்றது என்று ஞானிகள் கொடுத்த நிலைகளை எண்ணவில்லை.

உயிர் “மூலம். நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசம்) “ஆதாரம். உயிரிலே அது மோதும்போது “வெப்பம். மோதும் “சந்தர்ப்பத்தை அந்தக் காலத்தை அறிந்து அதனின் “ஞானமாக நீ செயல்பட வேண்டிய நிலை எது? என்பதைத்தான் அங்கே ஞானிகள் காட்டினார்கள்.