மக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள்
இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் சக்தி புராணம் போன்ற புராணங்களையும்
உருவாக்கினார்கள்.
இப்பிரபஞ்ச இயக்கத்தின் உண்மைகளையும் நாம் எண்ணும் என்ணங்கள் நமக்குள் தெய்வமாக
நின்று நம்மைச் செயல்படுத்தும்
விதங்களையும் அப்புராணங்கள் வாயிலாக நமக்கு உணர்த்தினார்கள்.
முக்கியமாக… “உயிரில் சேர்ந்திடும் உணர்வுகளுக்கு
ஒப்ப சரீர அமைப்பு எவ்வாறு உருவாகின்றது?” என்று காட்டினார்கள்.
அதே சமயத்தில் மீண்டும் ஒரு சரீரம் பெறாவண்ணம் நாம் உயர்ந்த கதியினை எவ்வாறு
பெறுவது? என்று மக்கள் ஒவ்வொருவரும் தெளிந்து உணர்வதற்காகக் காவியங்கள் காப்பியங்கள் ஆகியவற்றை மகரிஷிகள் படைத்தனர்.
1.ஒவ்வொரு குணாதிசயங்களையும் செயல்களையும் அதனின் விளைவுகளையும் நாம் அறிந்துணர
2.காப்பியங்களாகவும் கவிதைகளாகவும் தந்தருளிய மகரிஷிகள்
3.நாம் அவைகளை மறக்காதிருக்க அவற்றிற்கு உருவங்களைக் கொடுத்து
4.சிலைகளாக வடித்து அவைகளைக் கோவில்களில் அமைத்து நம்மை வணங்கச் செய்தனர்.
மற்றும் அந்தத் தெய்வ உருவத்தை நாம் வணங்குகின்ற பொழுது “அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று வேண்டும்படி செய்தனர்.
அவ்வாறு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் வணங்குகின்ற பொழுது அந்தத் தெய்வ குணங்களை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்.
நாம் பெறவேண்டிய உயர்ந்த தெய்வீக உணர்வுகளை மீண்டும் உயிரில் பதிய வைக்கின்றோம்.
இவ்வாறு
1.உயர்ந்த தெய்வ குணங்களை நம்மிடம் மீண்டும் மீண்டும் பதியச் செய்வதற்கும்
2.அவைகளுக்கு நம் ஆன்மாவில் உயர்ந்த ஸ்தானத்தை அளித்திட வேண்டியும்
3.தெய்வச் சிலைகளுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நம் மகரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டன.
கல்வியறிவு இல்லாதவர்கள்கூட இவ்வாத்மீகத் தத்துவங்களை அறிந்து அவர்கள் வாழ்வில்
பண்பட வேண்டும் பண்பு உயர வேண்டும் என்று மகரிஷிகளால் படைத்தருளப்பட்டன.
ஆனால் இன்று பெரும்பாலோனோர் “ஏதோ ஒரு தெய்வம்தான்… நமக்கு அனைத்தையும் செய்கின்றது…”என்று கருதுகின்றனர்.
நம் செயல்கள் நிகழ்வதனைத்தும் நம் உயிரான கடவுளால்தான் என்பதை அறிய வேண்டும்.
1.“மகரிஷிகளின் அருளசக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி அல்லது
2.“ஐயோ…! என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா…? எனது கஷ்டங்கள் தீராதா…!” என்று வேதனைப்பட்டாலும் சரி
3.அங்கே சாதனைகளையும் அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது
4.நமது உயிர்தான் என்று அறிய வேண்டும்.
நம் உயிரைக் கடவுளாக எண்ணும் பொழுது பிற உயிர்களையும் நம் உயிர் போன்று கடவுளாக
எண்ணி
உடலை ஆலயமாக
மதித்து அவர்களும் “அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்” என்று எண்ணுதல் வேண்டும்.
வியாசர் அருளிய கீதா தத்துவமான “நீ எதை எண்ணுகின்றாயோ…, அதுவாகின்றாய்”என்பதை மனதிலிருத்த
வேண்டும்.
மற்றவரெல்லாம் வாழ வேண்டும் வளரவேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது நாமும் நம்மை நல்வினைக்கு உயர்த்தும் நல் உணர்வுகளும் வளர்ச்சி பெறுகின்றன.