ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2021

விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது… ஆதியிலே மெய் ஞானம் எப்படி வந்தது…?

 

ஒரு எருக்கண் செடி இருக்கிறது என்றால் இரவில் அல்லது இருட்டிலே பார்த்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தோடுகள் பளீர்.. பளீர்… என்று மின்னும்.

அப்படி மின்னுவதைப் பார்க்கும் போது நான் பேயைப் பார்த்தேன்…! என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிலே அதைப் பதிவு செய்கின்றான்… அடுத்தவனுக்கும் இதைச் சொல்கிறான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தெரிந்தது என்றால் அங்கே போன பின் இவன் காண்பித்த அந்தக் கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கண் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.இங்கே பேய் இருக்கிறது பார்… ஆடுகிறது பார்…! என்று இவனுக்கு அவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகள் இவன் பார்க்கப்படும் பொழுது அவன் பார்த்தது எருக்கண் செடி… ஆனால் இவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அதைப் பார்க்கப்படும் போது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். இயக்கினாலும் வேறு பக்கம் சென்று விடுகின்றான். ஆனால் அஞ்சிய உணர்வு இவனுக்குள் வளர்த்ததைத் தன் நண்பனுக்கும் சொல்கின்றான்.

அந்த நண்பனும் அந்தப் பக்கம் செல்லும் பொழுது “அவன் சொன்னது உண்மை…” என்று அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்தது… இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்றுதான்…
1.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது
2.அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால் நாம் எண்ணும் எண்ணங்கள் அந்தப் பயத்தின் உணர்வுகள் எண்ணும் பொழுது அதே பயத்தை உருவாக்குகிறது.
1.அதுவாக அவன் மாறுகின்றான்
2.பயத்தின் நிலைகளையே அடைகின்றான்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கினாலும் துருவப் பகுதியிலிருந்து புவிக்குள் வரும் உண்மையின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாயின் கருவிலே இருக்கப்படும் பொழுது உண்மை எது…? என்று அறியப்படும் பொழுது அதை அறிய வேண்டுமென்ற நிலையில் பிறந்த பின் விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

ஆனால் நாம் சாதாரணமாக இந்தப் பயத்தின் நிலைகள் வரும் போது இப்படி எண்ணுகின்றோம்.

விஞ்ஞானிகள் அவர்கள் கணக்கின் பிரகாரம் ஆரம்பத்தில் பூமி தட்டை என்று தான் சொன்னார்கள். இதுதான் உண்மை என்று அக்காலத்தில் உள்ளோர் ஏற்றுக் கொண்டார்கள் மறுப்பு கொடுக்கும் பொழுது பின்னாடி வந்தவர்களைப் பைத்தியம் என்றார்கள்

அடுத்து உருண்டை வடிவம் என்று சொன்னார்கள் அதற்குப் பின் வந்தவர்கள் முட்டை வடிவம் என்று சொன்னார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் இவன் பதிவு செய்து இவன் கணக்கிற்குள் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் போது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அந்த உணர்வின் தன்மையை அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது
1.பூமியின் இயற்கையின் உண்மைகளை இவன் அறியும் தன்மை வருகின்றது
2.அந்த நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவே வளர்கிறது.
3.இப்படித் தான் விஞ்ஞான அறிவு வளர்ந்தது.

மெய் ஞானியான அகஸ்தியனின் நிலைகளோ இளமைப் பருவத்திலே வளர்ந்து அந்த மெய் உணர்வினைக் காணும் நிலைகள் வருகிறது.

ஆனால் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்குள் எப்படி இயக்க வேண்டும்…? என்ற விஞ்ஞான அறிவைக் காணுகின்றான். மெய் ஞானியோ அவன் மெய் ஞான அறிவினைக் கொண்டு செல்கிறான்.

ஆகவே மெய்யின் உணர்வின் நிலைகள்
1.எப்படி அணுவாக உருவானது…
2.கோளாக எப்படி ஆனது…? நட்சத்திரமாக எப்படி ஆனது…? சூரியனாக ஏப்படி ஆனது…? என்று
3.மெய் உணர்வின் ஆற்றலைக் கண்டான் அகஸ்தியன்.

சூரியன் ஆன பின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மை மற்ற பாறைகளிலும் கற்களிலும் தாவர இனங்களையும் உருவாக்க உதவியது.

ஆனால் இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையை அன்று அகஸ்தியன் காண்கின்றான்.

அவன் உணர்வை நாம் பெற்றால் படைக்கும் சக்தி கொண்ட மெய் ஞானியாக நாம் உருவாக முடியும்.