
“தீமையை அகற்றிடும் சாரம்” – வியாசகர் கொடுத்தது
ஒருவர் வேதனைப்படும் போது அந்த வேதனையான உணர்வுகள் உள் சென்றபின் நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டிருக்கும். இதற்கு இரண்யன் என்று ஞானிகள் பெயர் வைத்தார்கள்.
நல்ல குணத்துடன் இருக்கும் போது ஒருவர் வேதனைப்படுவதைக் கண் கொண்டு பார்த்தவுடனே
1.நம் கண்ணின் கருவிழி அவரைப் படம் எடுக்கின்றது.
2.அவர் உடலிலிருந்து வரும் வேதனையான உணர்வை நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து
3.நம் புலனறிவுக்கு உணர்த்திய அந்த உணர்வின் இயக்கம் கொண்டு
4.அவர் உடலிலிருந்து வரக்கூடிய வேதனை உணர்வின் சத்தை நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
ஒரு மரம் தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தின் துணை கொண்டு… காற்றிலிருந்து எவ்வாறு தன் இனச் சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றுதான்
1.ஒருவரை நாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது அவர் படும் வேதனையை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.அதனின் துணை கொண்டு அவர் உடலிலிருந்து வெளிப்படும் அந்த உணர்வலையைக் கவர்ந்து
3.நமது ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம்முள் உட்புகுத்திக் கொள்கின்றோம்.
இவ்வாறு நாம் சுவாசித்து உயிருக்குள் போனவுடனே நம் உயிருக்குள் இது இயங்கியபின் உடலுக்குள் சென்று அவர் படும் வேதனையை நமக்கும் உணர்த்துகின்றது.
இருப்பினும் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகின்றது.
நம் ஆன்மாவாக இருக்கும் பொழுது அவர் வேதனைப்பட்ட நிலையும் இது போன்ற பல நிலைகள் கண்ணால் பார்த்த உணர்வுகள் நம் மடி மீது இங்கே சுருண்டு கொண்டுள்ளது.
இவ்வாறு சுருண்டு கொண்டு நல்ல சிந்தனை இல்லாது நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மைகளை உயிர் என்ன செய்கிறது…?
நாம் எண்ணுகின்றவற்றை எல்லாம் அவை உடலுக்குள் செல்லும் பொழுது அணுவின் தன்மையாக இரத்தங்களில்
உருப்பெறச் செய்து இந்திரலோகமாகச் சிருஷ்டிக்கின்றது.
சிருஷ்டிக்கும் நிலையாக இருக்கும் பொழுது
1.அந்தச் சிருஷ்டியைத் தடுத்திடும் நிலையாக இந்த வேதனையான உணர்வுகள் உள் சென்று
2.அது செயல்படாது எவ்வாறு இருக்கிறது..? என்ற நிலையின் விளக்க உரைதான் கீதா உபதேசம் என்றாலும் இதனுடைய சாரம் இதுதான்.
கண்ணால் காட்டிய உணர்வுகளினால் உடலுக்குள் அது உணர்வின் செயலாக அதனின் சாரமாக இயங்குகிறதென்ற நிலையை எமக்கு நமது குருநாதர் தெளிவுற எடுத்துக் காட்டினார்.
கீதையில் உணர்வின் இயக்கங்களை வியாசர் காட்டியுள்ளார். உணர்வின் இயக்கம் எவ்வாறு இயங்குகிறதென்ற நிலையை அந்த ஞானிகள் வகுத்துக் கொடுத்திருந்தாலும் நாம் நுகர முடியாது
அது காலத்தால் மறைந்து விட்டது.
1.அப்படி மறைந்த நிலைகளை நமது குருநாதர் எமக்குத் தெளிவுற எடுத்துரைத்து அதனின் உணர்வின் சாரத்தை வெளிப்படுத்தினார்
2.அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றேன்.
ஏனென்றால் நீங்கள் நல்லது செய்யும் இந்த நிலைகள் ஒருவரைக் காத்திட நீங்கள் எண்ணினாலும் அவர் பட்ட வேதனையின் நிலைகள் உங்களுக்குள் நல்ல குணத்தை மறைத்து நீங்களும் வேதனைப்பட நேருகின்றது.
அதனின்று விடுபட… அந்த அருள் ஞானி வியாசர் காட்டிய அருள் நெறி கொண்டு அந்த உணர்வின் சக்தியை நினைவு கூர்ந்து உங்களுக்குள் கவரச் செய்கின்றோம்.
1.அருள் ஞானியின் உணர்வைச் சக்தி வாய்ந்த வித்தாக உங்களுக்குள் ஊன்றி ஊழ்வினையாக மாற்றி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் எண்ணும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் நுகர்ந்து
3.உங்களையறியாது உட்புகுந்த தீமைகள் விளையாதபடி… உங்களை மீட்டுக் கொள்ளும் நிலைக்குத்தான் இதை உபதேசிப்பது.
ஏனென்றால் இவ்வாறுதான் நமது குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார். எம்மையறியாது எமக்குள் உட்புகுந்த அந்தத் தீமைகளை நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீக்கினேன்.
எம்மைப் போன்று நீங்களும்
உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை
நீக்கிடும் ஆற்றல் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை எடுத்துரைக்கின்றோம்.
உணர்வின் தன்மையின் இயக்கத்தை “கீதை” என்று வியாசர் சொன்னாலும் அந்த உணர்வின் சாரத்தைக் குரு காட்டிய நிலைகள் கொண்டு நீங்கள் உணர்ந்தறிய முடியும்.
நீங்கள் செய்த நன்மைக்குள் உங்களை அறியாது தீமைகள் எவ்வாறு உட்புகுந்ததோ
1.அந்தத் தீமைகளை அகற்றிடும் “சாரத்தை…”
2.அருள் ஞானி வியாசகர் காட்டிய அருள் நெறி கொண்டு நீங்கள் கவர்ந்து
3.தீமையை அகற்றிடும் திறனாக உங்களுக்குள் அது விளைய வேண்டும் என்பதற்கே யாம் இதை உபதேசிப்பது.