ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2018

கலங்கும் மனதைக் காத்திடுவாய் ஈஸ்வரா...!


தெளிந்த நீராக இருக்கும் பொழுது நீரின் அடியில் கீழே இருக்கும் பொருளை நாம் அப்படியே காண முடிகின்றது. ஆனால்
1.நீர் தெளிவாக இருந்தாலும்
2.அதே நீரின் தன்மைகள் அலைபாயும் பொழுது
3.கீழே இருக்கும் பொருள் தெளிவாகத் தெரிவதில்லை.

அதைப் போன்று தான் தெளிந்த மனதுடன் நாம் இருக்கப்படும் பொழுது எதையும் சீராகக் காண முடிகின்றது. மனக் கலக்கமாகிவிட்டால் எதையும் சீராகச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அவ்வாறு மனதில் வரும் கலக்கமான நிலைகளையும் தெளிவாக்க முடியாத நிலையில் சிந்தனையைக் குலைக்கும்  நிலைகளையும்
1.பல உணர்வின் அலைகள் அலைந்து கொண்டிருப்பதைச்
2.சமப்படுத்தி நிறுத்தும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி.

ஓ...ம் ஈஸ்வரா...! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய் ஞானியின் அருள் சக்தி உடலுக்குள் ஊடுருவி
1.நம்மை ஆட்டிப்படைக்கும் மனக் குழப்பத்தையும் மனக் குடைச்சலையும் நிவர்த்தி செய்து
2.நம் எண்ணத்தையும் செயலையும் தெளிவாக்குகின்றது.
3.வியாபாரத்தையும் சீராக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் அனைவரையும் ஒற்றுமையாக்குகின்றது.

அந்த அருள் ஒளி நமக்குள் பெருகும் பொழுது உயிரிலே பேரொளியாக வீசிக் கொண்டே இருக்கும். அது வளர்ச்சியாகும்.

அவ்வாறு அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்த்து இந்த உடலைவிட்டுச் சென்றபின் உயிராத்மா ஒளியாக மாறி எந்த மகரிஷிகள் இதைக் காட்டி அந்த மெய்யை உணர்த்தினார்களோ அவர்களின் அருள் வட்டத்தில் இணையலாம்.

நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…”
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே
2.அவருடைய உயிரான்மா ஒளியாகி
3.விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக இணைந்தவர்.

அவர் தனக்குள் விளைய வைத்த ஒளியான உணர்வின் வித்துக்கள் நமது பூமியிலே பட்டுப் பலவாறு பரவி மற்ற உடல்களிளும் அது விளைந்தது.

அத்தகைய ஒளியான அணுக்களை சந்தர்ப்பத்தால் யார் யாரெல்லாம் சுவாசித்துத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்களோ
1.அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி
2.பெரும் மண்டலங்களாக எத்தனையோ மகரிஷிகள் சென்றுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதே எம்முடைய (ஞானகுரு) பேராசை…!