ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2018

மதங்களைப் பற்றிய தெளிவான விளக்கம்


மதத்தின் அடிப்படையில் எல்லோரும் வளர்ந்து வந்தாலும் மதங்களுக்குள் “தான்… எனது…!”என்ற நிலைகள் வரும் பொழுது அதற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது.

எந்த ஞானியும் மதத்தை உருவாக்கவும் இல்லை… உருவாக்கச் சொல்லவும் இல்லை…! மதங்கள் அனைத்துமே அன்று ஆண்ட அரசர் காலங்களில் உருவானது தான்.

அரசர்கள் உருவாக்கிய மதமும் இனமும் குறுகிய வட்டத்திற்குள் தான் வளரும்.

ஒரு மதம் மற்றொரு மதத்தை நேர்முகமாகப் பார்க்கப்படும் போது ஒன்றுக்கொன்று போர் செய்து அதனால்
1.இரு மதங்களும் மன நிம்மதி இழக்கின்றது.
2.இரு மதத்தவர்களும் மகிழ்ச்சி பெறுவது இல்லை.

ஏனென்றால் மதத்தை உருவாக்கியது மனிதன் தான். கடவுள் அல்ல.

மதத்தை உருவாக்கியது மனிதன் என்றாலும் நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை அனைத்தையும்
1.நமது உயிர் “ஓ…” என்று இயக்கி
2.”ம்…” என்று உடலுக்குள் உருவாக்கப்படும் போது
3.உள் நின்று அது கடவுளாக உருபெறச் செய்கின்றது.

மாற்று மதத்தை நாம் குறை கூறிப் பேசுவோம் என்றால் அந்த உணர்வுகளை உயிர் நமக்குள் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

நம் உடலுடன் அதைச் சேர்க்கப்படும் போது
1.உள் நின்று கடவுளாக அவனை “எதிரி” என்றே தாக்கச் செய்கின்றது.
2.அவனை வீழ்த்தினால்… தன்னைக் காக்க முடியும்…! என்று
3.இப்படித்தான் எண்ணச் செய்கின்றது.

மனிதர்களான நாம் நமது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து “பிற மதங்கள் தீமையானவை…!” என்று நமது எண்ணங்களை நினைவலைகளை இந்தக் காற்று மண்டலத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதை நிறுத்திப் பழக வேண்டும்.

1.உலக மக்கள் அனைவரும் ஓரினம்
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
3.நாம் உயிரான ஈசனின் இயக்கத்தால் இயங்குகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் மதத்தின் பெயராலோ குலத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லோரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலுக் கொண்டதாக இணைக்க வேண்டும்.
1.அது நமக்குள் உருவான அனைத்துப் பேதங்களையும் அகற்றச் செய்யும்.
2.மற்றவர் மேல் உள்ள பகைமைகளை மறக்கச் செய்யும்.
3.மகிழ்ந்து வாழச் செய்யும்.