ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2018

“அமாவாசை அன்று.. முன்னோர்களை வணங்குவதன் உண்மை நிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!”

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள். அதாவது சூரியனுடைய ஒளிக்கதிர் கிடைப்பது இல்லை.

முன்னோர்களை வணங்குகின்றோம் என்ற நிலையில் சாமி கும்பிடுவதற்காக மந்திரம் சொல்லி யாகங்கள் செய்வோம். அதிலே புஷ்பங்கள் நெய் சோமபானம் எல்லாம் போடுவார்கள்.

அமாவாசை அன்று இந்த உணர்வுகள் எல்லாம் பூமியில் அதிகமாகச் சுற்றி கொண்டிருக்கும்.

நம் மூதாதையர்கள் என்னென்ன சாப்பிட்டார்களோ அதை எல்லாம் வைத்துக் கும்பிடுவோம். அவர்கள் நினைவு மறக்காமல் இருப்பதற்காக எங்களை இப்படி வளர்த்தீர்கள் அப்படிச் செய்தீர்கள் என்று எண்ணி அவர்களை அழைத்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கும்பிடுவோம்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு நாம் என்ன செய்கிறோம்.

சுட்ட சாம்பலை எடுத்துக் கங்கையிலோ ஆற்றங்கரையிலோ கொண்டு போய்க் கரைக்கின்றோம். கரைத்தால் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த பிற்பாடு சொந்த பந்தம் எல்லாம் ஒன்று கூடி எண்ணையை தேய்த்துக் குளிக்க வைத்து நல்ல புதுத் துணி எல்லாம் கொடுக்கின்றார்கள்.

புதுத் துணியைக் கட்டிக்கொண்டு தலை மகனை மாவிளக்குத் தீபம் ஏற்றச் செய்கின்றார்கள். பின் முக்காடு போட்டுக் கொண்டு அந்தத் தீபம் அணையாதபடி விநாயகர் கோயிலில் போய் அர்ச்சனை செய்து விட்டால் இறந்தவர்கள் மோட்ச லோகம் போவதாகச் சொல்கிறார்கள்

நாம் தீபாவளி அன்று. புத்தாடைகளை அணிகிறோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி விட்டு அருள் உணர்வுகளைப் புத்தாடையாகப் போடுகின்றோம்.

ஆனால் இங்கே ஒருவர் இறந்துவிட்டால் பாவத்தைப் போக்கிவிட்டு சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுச் சொந்த பந்தத்திற்காக வேண்டிப் புத்தாடைகள் அனியச் சொல்கிறார்கள்…!

நெய் தீபம் ஏற்றிக் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்கிறார்கள்,

இந்த மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமா முன்னோர்களுக்காக வணங்குவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள் (குடுகுடுப்புக்காரர்கள்) என்ன செய்வார்கள் தெரியுமா…?

நம் வீட்டு வாசற்படியில் இருக்கும் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் சிநேகிதமாக வந்து தலைமுடியை எடுத்துக் கொள்வார்கள்.

குடுகுடுப்புக்காரன் வந்தால் நம்மிடம் பழைய துணியைத்தான் கேட்பான். கொடுத்துவிடுவோம்

இந்த மூன்றையும் எடுத்துச் சென்று என்னா செய்கிறார்கள்…!

முன்னோர்களின் உணர்வு தான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். அமாவாசை அன்று சாப்பாடு கொடுத்து அவர்களை நாம் கூப்பிடுவோம். அப்பொழுது அந்த உணர்வு எல்லாம் அங்கே குவிந்து வரும்.

நம் பாதம் பட்ட மண் தலை முடி எல்லாவற்றையும் வைத்து எங்கே அந்த உடலைச் சுட்டார்களோ அல்லது எங்கே புதைத்தார்களோ அங்கே சென்று அதற்கென்ற மந்திரத்தைச் சொல்வார்கள். மதுபானம் மாமிசம் எல்லாம் வைத்து ஜெபிப்பார்கள்.

மந்திரத்தை ஜெபித்தவுடன் இங்கே அம்மா அப்பாவைச் சாப்பாடு வைத்துக் கூப்பிடுவோம்… அவன் மந்திர சக்தியால் இழுக்கும் பொழுது அந்த ஆன்மா அங்கே சென்றுவிடும்.

யாகம் என்றால் என்ன? யாக வேள்வி என்றால் அன்றைய காலங்களில் அதிலே மனிதனைப் பொசுக்கினது உண்டு. ஆடு கோழிகளை குதிரைகளைப் பொசுக்கினது உண்டு.

இராமாயணத்தில் சொல்லியிருப்பார்கள். அசுவமேத யாகம் என்பது, நம் உயிரணு தோன்றியதிலிருந்து புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் மனிதனின் மாற்றங்கள் ஏற்பட்டதற்குத் தகுந்த மாதிரி
1.ஒவ்வொரு மாற்றத்திற்குத் தக்க
2.1008 குணங்கள் உருவான நிலையைத்தான் யாகத்தீயில் போட்டு
3.அந்த ரிக்கியர்கள் மந்திரங்களைச் சொல்லி
4.அதற்கு வேண்டிய சாப்பாடு மற்றும் மயக்கமாக்கும் பல உணர்வுகளைக் கொடுத்து,
5.சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து நினைவை மாற்றச்செய்து,
6.மந்திரங்களைச் சொல்லிக் கடைசியில் யாகத் தீயில் போட்டுப் பொசுக்குவார்கள்.

மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உடலில் (பொசுக்கிய உடலில்) மந்திரவாதி பதிவாக்கிய உணர்வெல்லாம் வெளிவரும்.

உதாரணமாக ஒரு மனித உடலில் நோயாகி விட்டதென்றால் பாசத்தால் அந்த நோயின் உணர்வை நாமும் எடுத்தால் அந்த மனிதன் இறந்தவுடன் அந்த உணர்வு நமக்குள் வந்து அதே நோய் நமக்கு வரும்.

இதைப் போன்ற் மந்திரத்தை ஜெபித்த பிற்பாடு இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் அந்த ஆன்மாக்களைக் கைவல்யம் செய்து கொள்வார்கள்.

கைவல்யம் ஆன பின் சில பக்குவங்களைச் செய்து மற்றவர்கள் மீது ஏவல் செய்வார்கள்.
1.நோய் நீங்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
2.நோயை உருவாக்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
3.ஒரு குடும்பத்திற்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்.

இறந்தவர்களின் உயிரான்மாக்களை இதற்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தாலும் இதையெல்லாம் விஞ்ஞானத்தையும் ஏமாற்றிச் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டவர்கள் அன்றைய அரசர்கள் தான்.

சரியான முரடனை உண்டாக்கி நாட்டுப் பற்றை ஏற்றி
1.“நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றாய் என்று சொல்லிக் கொடுத்து
2.அவனுக்குத் தெரியாமலே தீயில் போட்ட பிற்பாடு
3.மந்திரத்தைச் சொல்லி அந்த உயிரான்மாவை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
4.தன் நாட்டைக் காக்கும் காவல் தெய்வம் என்று தன் எல்லையின் முகப்பில் வைத்திருப்பார்கள்.

தான் சுகமாக வாழ்வதற்காக அரசர்கள் உருவக்கியது தான் இந்த நிலைகள். குலதெய்வங்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பகுதியானவர்கள் எங்கள் குலதெய்வம் தீயிலே மாண்டது என்று தான் சொல்வார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானிகள் காட்டிய வழிக்கு மாறாக மனிதன் விண் செல்லும் நிலைகளைத் தடைப்படுத்திவிட்டார்கள். இன்று இந்த உண்மைகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள ஆள் கிடையாது.

இதற்கு முன்னாடிச் செய்ததெல்லாம் தப்பா என்று வாதத்திற்கு வருவார்கள்.

1.உலகில் உடலுடன் வாழும் உயிரான்மாக்களைக் காட்டிலும்
2.பல மடங்கு உயிராத்மாக்கள் காற்று மண்டலத்தில் அதிகமானதால்
3.நல்லதை எண்ணினாலும் அந்த ஆன்மாக்களின் அழுத்தத்தால் நல்லதைச் செய்யும் வலு இல்லாத நிலை உருவாகிவிட்டது.
4.யாரும் விண் செல்லாததால் தான் இந்த நிலை ஆகிவிட்டது.

குருநாதர் காட்டிய வழியில் உடலை விட்டு எந்த உயிரான்மா பிரிந்தாலும் அது அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலமே.

“பௌர்ணமி அன்று முழு நிலவாகப் பிரகாசிப்பது போல்…” மனிதன் அழியா ஒளியின் சரீரம் அடைய வேண்டும்.