ஒரு மரம் வளர்ந்த பின் தன் இனத்தின்
வித்துக்களை உருவாக்குகின்றது. அதிலிருந்து கீழே விழுந்த வித்து மண்ணுக்குள் பதிந்து
விட்டால் அந்த மரத்தின் சத்தை இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து “அதே மரமாக…”
மீண்டும் விளைகின்றது.
இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
தான். புதிது ஒன்றும் இல்லை.
ஆனால் மரத்தின் வித்தைப் போட்டால் அது
முளைக்கின்றது… மரமாக விளைகிறது என்று தான் தெரியும்.
இதற்கு வேண்டிய சத்து எங்கிருந்து கிடைக்கின்றது…?
சூரியன் எடுத்து அந்த உணர்வுகளைப் பரமாத்மாவில்
(நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்தில்) படரச் செய்து வைத்திருக்கின்றது. அது எப்போதும்
அழிவதில்லை.
இங்கே விளைந்த மரத்தின் வித்தை எடுத்து
அமெரிக்காவிற்குக் கொண்டு போய் ஊன்றினால் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப சீதோஷ்ண நிலைக்கொப்ப
இதே காற்றில் இருந்து தாய் மரத்தின் சத்தை அங்கிருந்து எடுத்து அந்த மரம் விளையும்.
உதாரணமாக ஊட்டி கொடைக்கானல் மற்றும்
நீலகிரி போன்ற உயரமான இடங்களில் குளிர்ச்சி அதிகம் இருக்கும்.
இங்கு விளைந்த வித்தினை நாம் சமமான இடத்தில்
கீழே குளிர்ச்சி இல்லாத இடங்களில் ஊன்றினோம் என்றால் இந்த இடத்திற்குத் தக்கவாறு அது
முளைப்பதில்லை.
ஏனென்றால் குளிர்ச்சியில் இருந்தது.
இங்கே வெப்பம் அதிகமாக இருப்பதால் அதன் வளர்ச்சி குன்றுகிறது. சரியான வளர்ச்சி ஆவதில்லை.
காரணம் வெப்ப தட்ப நிலைகளுக்கு ஒப்ப இது மாறுகிறது. அதே சமயத்தில்
1.அந்தக் குளிர்ச்சியான நிலைகளை இங்கேயும்
உண்டாக்கி
2.அந்தக் காற்றைக் கொடுத்தோம் என்றால்
3.ஊட்டியில் விளைந்த மாதிரி இங்கேயும்
விளையும்.
அதற்கு அந்தக் குளிர்ச்சி இங்கே கொடுக்க
வேண்டும். ஏனென்றால் அது எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத் தக்கவாறு விளையும்.
அந்த ஊட்டியில் விளைந்த வித்து ஏதோ ஒன்று
தப்பித் தவறி இங்கே விழுந்து முளைத்து அதிலே கொஞ்சம் வளர்ச்சியில்லாத ஒரு வித்து உருவானால்
அது மீண்டும் இதிலே விழுந்த வித்தைப் போல இது கொஞ்சம் விளைய ஆரம்பிக்கும்.
அப்புறம் இந்தச் சீதோஷ்ணத்திற்கொப்ப
வளர ஆரம்பிக்கும்.
1.கொஞ்சம் கொஞ்சமாக முதலில் வளர்ந்ததன்
உணர்வை எடுத்து
2.அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது
வளரப்படும் பொழுதெல்லாம்
3.கடைசியில் இதிலே விளைந்த வித்துக்கள்
சத்துள்ளதாக விளையும்.
இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து
கொண்டோம் என்றால் இயற்கை எப்படி வளம் பெற்றது? வளர்ச்சி பெற்றது? என்று புரிந்து கொள்ளலாம்.
அந்த அடிப்படையில் யாம் உபதேசிக்கும்
ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஞான வித்துக்களாக ஊன்றப்படும் பொழுது உங்களுக்குள்
அதை வளர்த்துக் கொள்வது மிகவும் ஏதுவாக இருக்கும்.
அதறாக வேண்டித்தான் இதைச் சொல்வது.
1.விண்ணிலே எட்டாத தூரத்தில் இருக்கும்
2.அந்த மகா மெய் ஞானிகளின் உணர்வுகளை
3.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
4.உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக்
கொண்டிருக்கின்றோம்.
உயரமான குளிர்ச்சியான இடத்தில் (ஊட்டியில்)
விளைந்த வித்து கீழே வெப்பமாக இருக்கும் இடத்தில் சந்தர்ப்ப வசத்தால் எப்படி விளைகின்றதோ
அதைப் போன்று தான் உங்களுக்குள் ஞானிகளின் உணர்வை விளைய வைத்து அதை வளர்க்கும் சந்தர்ப்பத்தை
ஏற்படுத்துகின்றோம்.
ஒவ்வொருவரும் இந்த அரிய சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!