ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2018

இரண்டு தலைமுறைக்கு முன் அண்ணன் தம்பிகளுக்குள் பகைமையாகி விட்டால் பின் வரும் சந்ததியினரை எப்படிப் பாதிக்கின்றது…?


இன்று நமது வாழ்க்கையில் சீராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இரண்டு தலை முறைக்கு முன்னாடி வாழ்ந்த நம் மூதாதையர்களின் உணர்வுகள் நம்மை இயக்கத்தான் செய்கின்றது.

நம் மூதாதையர்கள் அவர்கள் வாழ்க்கையில் அண்ணன் தம்பிகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வரும் பொழுது வரும் சம்பாத்தியத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

உதாரணமாக நான்கு பேர் சகோதரர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் கொடுக்கல் வாங்கல்களில் ஒருவருக்கு குறைத்துக் கொடுக்கும் போது என்ன ஆகின்றது?

ஏனென்றால் ஒரு சகோதரனால் தொழில் செய்ய முடியவில்லை. அவன் நோயின் காரணமாக எழுந்து வரவில்லை என்றால்
1.நாம் தான் உழைத்தோம்…
2.அவனுக்கென்ன கொடுப்பது…? என்று
3.மூன்று பேர் வலுவின் தன்மை வரப்படும் போது நான்காவது சகோதரன் வலுவற்றதாக மாறுகின்றான்.
4.அப்பொழுது அவன் வெறுப்படைகின்றான்.

மூன்று பேரும் சேர்ந்து எனக்கு இப்படிச் செய்து விட்டார்களே…! என்ற வேதனையின் தன்மை வரப்படும் போது இந்த மூன்று பேர் மீதும் வெறுப்பு வருகின்றது.

இந்த வெறுப்பு வளர… வளர… வளர… வெறுப்பான பேச்சுகளைப் பேசப் பேச… மூன்று பேர் மேலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகின்றது. அதே சமயத்தில் மூன்று பேரும் சேர்த்து இவரைப் பழித்துப் பேசுவதும் அவருக்கு மீண்டும் இன்னல்களை உருவாக்கும் நிலையும் வருகின்றது.

இது தான் "ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்." அதாவது யார் வெறுப்பாக எண்ணுகின்றாரோ அந்த எண்ணத்தை உயிர் "ஓ…" என்று பிரணவமாக்கி "ம்…" என்று உடலாக்குகின்றது.

வெறுப்பின் உணர்வுகள் ஒவ்வொருவர் உடலிலும் ஜீவ அணுக்களாக உருவாகி உடலான சிவமாகின்றது. உடலாக ஆன உணர்வுகள் சொல் வடிவமாகும் போது அவர் மேல் வெறுப்பாகப் பேசச் செய்கின்றது.

இது தான் "ஓ…ம் நமச்சிவாய…!" நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எதுவோ அதை உயிர் "ஓ…" என்று ஜீவனாக்கி "ம்…" என்று உடலாக்கி விடுகின்றது. அப்பொழுது சகோதரர்கள் மூன்று பேருக்கும் வெறுப்பின் தன்மை அடைகின்றது. அது ஒரு வித்தாக உருபெற்று விடுகின்றது.

இப்படிப் பேசுகின்றான் என்று சொல்லும்போது இந்த உணர்வும் இந்த மூன்று பேருக்கும் வளர்கின்றது. நான்காவது சகோதரன் தனித்த நிலைகள் இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்பாக வெறுப்பாக இவர் உடலிலே அது நோயாக மாறுகின்றது. உடல் பலவீனமடைகின்றது.

மூன்று பேரும் வலு கொண்டு இவரைத் தாக்கிப் பேசும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
1.இந்த மூன்று உணர்வுகளும் இவர் உடலுக்குள் வரும் போது
2.அவரிடம் உள்ள நல்ல உணர்வுகள் தணிந்து
3.மூன்று பேரும் சேர்த்து… “எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்…!” என்ற எண்ணம் அதிகமாகின்றது.

ஆனால் கடைசியில் இவர் மரணமடையப்படும் போது என்ன எண்ணுவார்?

அண்ணன் தம்பிகளில் மூத்த வரிசை யாரோ… “இவன் கூட இப்படிச் சேர்ந்து எனக்குத் துரோகம் செய்கின்றானே…! பாவி…!” என்று ஏக்கத்துடன் உடலை விட்டுச் சென்றால் இந்த உயிரான்மா அவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது.

இவர் எப்படி நோயால் வேதனைப் பட்டாரோ அந்த வேதனைகள் அனைத்தும் மூத்தவரின் உடலுக்குள் செயலாக்கி அந்த உணர்வுகள் மற்ற குடும்பங்களிலும் பரவத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலை வருவதற்குள் அந்தக் குடும்பம் நான்கு விதத்திலேயும் அது வேதனைகள் அனுபவிக்கத் தொடங்குகின்றனர். நலிவடைகின்றனர்.

1.அந்தத் தலைமுறைக்கு அதுவானாலும்
2.பின் வரும் தலைமுறைகளில் வேறு வேறு நிலைகளில் திருமணம் செய்து கொண்டு வந்தாலும்
3.இந்த மூதாதையர்கள் சண்டையிட்ட உணர்வுகள் பதிவாகிப் பதிவாகி
4.பெண்கள் கர்ப்பம் ஆகும் போது பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றது.

அதாவது அந்த நான்கு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்ட நிலைகளில் உன் குடும்பம் நசிந்து போகும்; கண் தெரியாது. குருடாகிப் போவாய்; கால் ஊனமாகும் என்று பேசி இருந்தால்
1.பிறக்கும் குழந்தைகளுக்குள் அது வித்தாக ஊன்றி
2.இந்த உணர்வுகள் வழித் தொடர் கொண்டு
3.கருவிலேயே அது ஊனமான குழந்தையாகத்தான் வரும்.

மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட உணர்வுகளைச் சாபமாக இட்டார்களோ
1.வழி வழி வந்த அந்த உணர்வுகள் தான்
2.பலவிதமான பகைமைகளாக உருவெடுத்து
3.மனிதனின் நிலைகள் (இன்று) மறைந்து கொண்டே வந்து விட்டது.

“சாபம்…” என்பது மிகக் கடுமையான விஷமான சக்தி என்று பொருள். இத்தகைய நிலைகள் எல்லாருடைய குடும்பத்திலும் உண்டு.

மூதாதையர்களின் சாப அலைகளை நீக்குவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகவும் அழுத்தமாகவும் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். அதைப் பெறும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றோம்.

தியானத்தின் மூலம் தொடர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறும்போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த “சாபங்கள் அனைத்தையும் அது நீக்கச் செய்யும்…!”