ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தன் உடலுக்குள் வளர்ந்த மெய்
உணர்வுகளை தான் பெற்ற இனிமையின் நிலைகளை
1.தன் இன மக்கள் பெற வேண்டும் என்று ஒரே நோக்குடன்
2.எல்லாரும் மகிழ்ந்திட வேண்டும் என்று
3.தனக்குள் விளைவித்த உணர்வின் சொல்லை நமக்குள் ஞான வித்தாகப்
பதிவு செய்தார்கள்.
ஆனால் காலத்தால் அருள் ஞான வித்துகளை அது முளைக்காது தடைப்படுத்தி விரையமாக்கி விட்டோம். காலத்தால் அருள் ஞான வித்துகள்
அனைத்தும் முளைக்காது சென்றதால் அருள் ஞானியின் உணர்வுகள் தேங்கிவிட்டது.
அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது தவித்துக் கொண்டு இருக்கும்
இந்த நேரத்தில் மகரிஷிகளின் உணர்வைப் பெறும் பாக்கியத்தை எமக்கு (ஞானகுரு) மாமகரிஷி
ஈஸ்வரபட்டாய குருதேவர் ஏற்படுத்தினார்.
குருநாதர் அவர் பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். வாழ்க்கையில்
இன்னல் எதுவென்றே அறியாத நிலைகளில் இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை
அவர் தனக்குள் விளைய வைத்து ஒளியின் சுடராகப் பெற்றார்.
அவருக்குள் ஒளியின் சுடராக விளைய வைத்த அந்த ஒளியின் சுடராகப்
பெறும் நிலையைப் பித்தனாக இருந்து எமக்குள் அது ஆழப் பதியச் செய்து அருள் வித்தை வளர்க்கும்
முறையையும் வகுத்துக் கொடுத்தார்.
விண்ணின் ஆற்றல் மிக்க நிலையும் மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட
அருள் ஞான வித்துக்களைச் சாமானிய மனிதரும்
1.அதை எவ்வாறு எடுத்திடல் வேண்டும்… பதிந்திடல் வேண்டும்…
2.அதை எவ்வாறு பருகிட வேண்டும்… வளர்த்திடல் வேண்டும்…? என்ற
நிலையை
3.உருபடுத்தி உணர்த்தினார் குருநாதர்.
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் பதித்த அருள் ஞான
வித்தை அதை வளர்ப்பதற்கு இந்தப் பூமியில் எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ
அங்கெல்லாம் கால்நடையாக நடக்கச் செய்தார்.
உலகம் முழுவதும் எம்மை அழைத்துச் சென்று அந்த ஞானிகளின் உணர்வின்
ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டி ஆங்காங்கு படர்ந்துள்ள அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த
மெய் உணர்வின் அலைகள் படர்ந்திருப்பதை நீ நுகரு அதனின் அந்த ஆனந்த சக்தியான வித்தை
உனக்குள் வளர்த்துக் கொள் என்று காட்டினார்.
இந்தப் புவி முழுவதும் சுழன்று வந்து அவர் காட்டிய அருள் ஞான
வித்துக்கள் அனைத்தும் வளர்த்து அந்த வித்தின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதியச்
செய்வதற்குத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்தது…!”
அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைகளுக்காகத்தான் குரு காட்டிய
வழிகளில் உங்களுக்குள் அது பதியச் செய்து கொண்டே வந்தது.
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டும்
அழியாப் பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மகரிஷியின் ஆற்றலில் விளைய வைத்த
அந்த அருள் ஞான வித்தை
1.நமக்குள் பருக வேண்டும்… அது பெருக வேண்டும்
2.நமக்குள் பெருக்கிடல் வேண்டும்
3.எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிடல் வேண்டும்.
அந்த மாமகரிஷியின் நினைவு கொண்டு அவருடைய துணை கொண்டு விண்ணின்
ஆற்றல் மிக்க நிலைகளை அருள் ஞான சக்தியின் தொடர் கொண்டு
1.எண்ணத்தால் அதை நாம் வளர்த்திடுவோம்.
2.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக நமக்குள் வளர்த்திடுவோம்.
3.அருள் ஞானப் பசியைப் போக்கிடுவோம்
4.அருள் ஞானிகளுடன் ஒன்றிடுவோம்.
ஒரு வித்தை ஊன்றி விட்டால் அதற்கு நீர் ஊற்றி அதற்கு உண்டான
உரத்தை செலுத்தினால் அது செழிப்புடன் வளரும்.
அது போல் யாம் பதிவாக்கிய ஞான வித்திற்கு நீர் ஊற்றும் விதமாக
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை
எடுத்து அதைக் கவனத்துடன் வளர்த்து வந்தால் நிச்சயம் நம் பசி தீர்கின்றது.
1.அந்தத் திருவருள் நீங்கள் பெற வேண்டும்.
2.அருள் ஞான சக்தி நீங்கள் பெற வேண்டும் .
3.அருள் ஞானப் பசி உங்களில் நீக்கிட வேண்டும்.
4.பேரானந்தப் பெரு நிலைகள் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட வேண்டும்
என்பது தான் எம்முடைய பேராசை.