சிவன் ராத்திரி அன்று “விழித்திருக்க வேண்டும்…!” என்று இரவு
முழுவதும் நாம் கண் விழித்திருக்கின்றோம்.
1.தீமைகள் புகாது நீ விழித்திருக்க வேண்டும் என்று தான்
2.ஞானிகள் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.
ஆனாலும் அந்த இரவில் ‘’அவர் அப்படி இருக்கின்றார்… இவர் இப்படி
இருக்கின்றார்…!’’ என்று பிறரிடம் உள்ள குறைகளைக் கண்டு அதைப் பற்றித்தான் நாம் அதிகமாகப்
பேசிக் கொண்டிருக்கின்றோம்.
நல்லவைகளைப் பற்றி நாம் யாரும் பேசுகின்றோமா… என்று சிந்தித்துப்
பாருங்கள். இதைப் போன்ற குறைகளைக் காணும் நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
புழுவிலிருந்து மனிதராக வந்த நாம் ஒவ்வொரு பிறவியிலேயும் தம்
சரீரத்தைக் காத்திடும் உணர்வைப் பெற்றுத்தான் மனிதராக இன்று உடல் பெற்றிருக்கின்றோம்.
இந்த மனித சரீரத்தில் உள்ள உயர்ந்த தன்மைகளைக் காத்திடும்
வளர்த்திடும் உணர்வாக நாம் செயல்படும் பொழுது நம்மிடம் உள்ள குறைகளும் தீமைகளும் நம்மைவிட்டு
அகன்று ஓடுகின்றன.
இந்தச் சரீரத்தை அழியா ஒளிச் சரீரமாக ஆக்க வேண்டுமென்றால்
அதையும் இந்த சரீரத்தில் தான் செய்ய முடியும்.
சிவன் ராத்திரியாக மெய் ஞானிகளால் நமக்கு காட்டப் பெற்று நம்மைக்
காத்திடும் வளர்த்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்…
சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும்
இருள்கள் அகல்கின்றது.
பொருளறிந்து செயல்படும் உணர்வாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள்
நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.
1.நம் உடலான சிவத்திற்குள் இருளுக்குள் தான் நாம் இருக்கின்றோம்.
2.நமது உடலில் இருக்கும் எண்ணம் தான் நம்மிடத்தில் ஞானத்தின்
நிலையாக
3.நாம் தெளிவு பெறும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அறிந்து தெளிந்த நிலை பெற்ற மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள்
செலுத்தும் பொழுது அந்த மகரிஷிகள் உயிருடன் ஒளிச் சரீரம் பெற்றது போல நமது உணர்வும்
ஒளி பெறும் தகுதியைப் பெறுகின்றது.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய் உணர்வைக்
கண்டறிந்தார். மனிதனாக வாழும் பொழுது தம் உடலில் விளைந்த தீமைகளைப் போக்கி மெய் உணர்வை
வளர்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சென்ற அந்த மகா ஞானிகளின் நினைவின் அலைகளை
எமக்குள் (ஞானகுரு) ஆழமாகப் பதியச் செய்தார்.
இந்த மனித வாழ்க்கையில் வரும் இருளை வெல்லச் செய்து மெய்யுணர்வின்
தன்மையை எம்மிடத்தில் வளர்த்து எம்மையும்… “மெய் ஞானியாக…” உருவாக்கினார்.
அந்த நிலையை நீங்களும் பெறவேண்டும் என்று உங்கள் அனைவரையும்
கூட்டமைப்பாக உருவாக்கி அந்த மகா மகரிஷிகளின் அருளுணர்வை உங்களிடத்திலும் பெறச் செய்கின்றோம்.
1.மெய் உணர்வைப் பெறும் வகையாக
2.மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியைப் பின்பற்றிச் செல்லும்
அன்பர்களுக்கு
3.எல்லாம் வல்ல ஆற்றலாக அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல் கிடைக்கப்
பெற்று
4.‘’என்றும் பதினாறு’’ என்ற ஒளிச் சரீரத்தை இந்தச் சரீரத்திலேயே
நீங்கள் பெற வேண்டுமென்று
5.எமது பரிபூரண அருளாசியை வழங்குகின்றோம்.