ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) என்ன செய்வேன் தெரியுமா..? வேட்டைக்குப்
போவேன். வேட்டைக்குப் போனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இருப்போம்.
போகும் பொழுது கோழி புறா எல்லாம் கொண்டு போவோம். ஏனென்றால்
வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் கொண்டு சென்ற கோழியை வேக வைத்துச் சாப்பிடுவது.
பச்சைப் புறாவில் சத்து நிறைய இருக்கிறது என்று சொல்லி அங்கேயே
அடித்துச் சாப்பிடுவது. வீட்டிற்குக் கூட கொண்டு வருவது இல்லை.
எல்லோரும் எனக்கு உனக்கு என்று கேட்பார்கள்…! இந்த மாதிரி
நன்றாகச் சாப்பிடுவது தான் என்னுடைய பழக்கமாக இருந்தது.
பின்னாட்களில் குருநாதர் சொன்னார். ஏண்டா..! இத்தனை பறவைகளையும்
கொன்று சாப்பிட்டு இருக்கிறாய். அதெல்லாம் மனிதனாகப் பிறக்கப் போகிறது.
ஆனால் நீ எங்கே போய் அடுத்துப் பிறப்பாய் தெரியுமாடா…? என்று
கேட்டார்.
மானைச் சுட்டுச் சாப்பிட்டாய். அது எத்தனை இம்சைப்பட்டு இது
உனக்குள் வந்திருக்கிறது தெரியுமா…! அது இம்சைப் பட்டதனால் அந்த உயிர் உன்னிடம் வந்தது.
அது அணுக்களாகி நீ செத்த பிற்பாடு உன் சிநேகிதனின் ஈர்ப்புக்குள்
அடுத்து அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப் போகிறது. நீ மானாகவோ புறாவாகவோ கோழியாகவோ
தான் பிறப்பாய் என்றார்.
இப்படிச் சொல்கிறார் குருநாதர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்புறம் நிறையச் சாப்பிடுடா…! என்றார்.
நிறையச் சாப்பிட்டால் அந்த உடலாகப் போவேன் என்று சொன்னீர்களே
என்றேன் நான்.
அப்படியா உனக்குப் பிடிக்க வில்லை என்றால் விட்டு விடு. விட்டுவிட
வேண்டும் என்று நீ நினைத்தாய் என்றாலும் உன் உடலில் விளைந்த அணுக்கள் அதற்கு அந்த ருசி
வேண்டும். அது ஆசையைத் தூண்டும்.
நீ சாப்பிடாமல் இருந்தாலும் கறி சாப்பிட முடியவில்லையே என்ற
அந்த (எண்ணம்) ஏக்கம் வந்தால் போதும்…! ஒரு கிலோ சாப்பிடுவதற்குப் பதில் பத்து கிலோ
சாப்பிட்ட மாதிரி ஆகும். காற்றிலிருந்து அந்த சக்தி உனக்குள் வரும் என்றார் குருநாதர்.
இப்படிக் குருநாதர் சொல்வது எல்லாவற்றையும் பார்த்தவுடனே
“ஏன்டா இவரிடம் சிக்கினோம்…!” என்று எனக்குப் பயம் ஜாஸ்தியாகி விட்டது.
இவ்வளவு விஷயங்கள் சொல்கிறார். கடைசியில் நாம் ஆடாகவோ மாடாகவோ
கோழியாகவோ மீனாகவோ பிறந்தால் என்ன செய்வது?
ஆகவே நீ கறி சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்தாலும்
கூட பார்த்தாலோ அல்லது அந்த வாசனையை நுகர்ந்தாலோ சாப்பிட வேண்டும் என்ற ஆசை உனக்கு
வருகிறதல்லவா…!
1.டேய்…! நீ பத்து கிலோ கறி சாப்பிடுகிறாயடா…! என்பார்.
2.எனக்கு இப்படி அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
3.அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று
வினா எழுப்புகின்றார் குருநாதர்.
நம் உடலில் ஒரு நோய் வந்துவிட்டால் அதைத் தடுக்க அதற்கு மாறான
நிலைகள் கொண்ட ஒரு மருந்தைத் தயார் செய்து அதை உட்கொள்கின்றோம்.
அதற்குச் சக்தி கொடுத்து உடலுக்குள் போனவுடனே உடலில் நோயின்
அணுக்களை மறித்து அதை வளரவிடாது செய்து நல்ல அணுக்களைப் பெருக்குகின்றது. அப்போது அது
“தனி…”
இதைப் போல அனைத்து விஷங்களையும் வென்றவன் அகஸ்தியன். உயிருடன்
ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.
அந்த உணர்வை நீ எடுத்தால் கறியை உட்கொள்ளும் அந்த விஷமான உணர்வுகள்
அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். விஷத்தை வென்ற அகஸ்தியனின் உணர்வு வரும் போது உன் உடலிலுள்ள
விஷத்தை அடக்கி விடும் என்கிறார் குருநாதர்.
அகஸ்தியன் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின்
கறி சாப்பிட வேண்டும் என்று நீ நினைத்தாலும் கூட அது உனக்கு ஒத்துக் கொள்ளாது.
நோய்க்கு மருந்து சாப்பிட்டவுடன் நோயின் அணுக்களின் செயலாக்கங்கள்
ஒடுங்கி நோய் விலகுகின்றதோ அது போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி உனக்குள் அதிகமாகும்
பொழுது மாமிசம் சாப்பிடும் உணர்வின் விஷங்கள் ஒடுங்கிவிடும்.
1.அந்தப் பழக்கம் தன்னாலே அகலும்…
2.அந்த ஆசையே வராது…!
அதற்கப்புறம் அதைப் பார்த்தாலோ மாமிசத்தின் மணத்தை நுகர்ந்தாலோ
“ஒதுக்கித் தள்ளும் உணர்வு தான் (வாந்தி) வரும்…” என்று தெளிவாக்கினார்.