ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2018

காந்திஜி சொன்ன சகோதரத்துவம் – விளக்கம்


காந்திஜி இராமயாணத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

இந்தியா முழுவதற்கும் பலருடைய எண்ணங்கள் பலவிதமாக இருக்கின்றது. காந்திஜியை வெறுப்போரும் பலர் உண்டு.

ஒருவன் நம்மைத் தாக்குகின்றான். எத்தனை நாளைக்கு நாம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்...?

இனக் கலவரம் மதக் கலவரம் என்ற நிலையில் செயல்படும் போது பதிலுக்கு அவனை எதிர்த்துத் தாக்கினால் தான் அதை அடக்க முடியும் என்ற இந்த உணர்வின் வேகங்கள் பரவுகின்றது.

அப்படி பரவும் காலத்தில் காந்திஜி எல்லோருடைய மனதையும் ஈர்க்கும் வண்ணம்
1.நீங்கள் செய்யும் தவறை நிறுத்தும் வரையிலும்
2.நான் உணவு உட்கொள்ள மாட்டேன்...! என்று உண்ணாவிரதம் இருந்து சத்தியாக்கிரகத்தைக் கடைப்பிடிக்கின்றார்.
3.அப்பொழுது எல்லோருடைய நினைவும் அவர் பால் திரும்புகின்றது.

அவர் மேல் பற்று கொண்டோரும் பற்றற்றவரும் அவரை எண்ணும் பொழுது (காந்திஜியின் உணர்வுகள் அவர்களுக்குள் செல்லப்படும் போது) அவர்களுடைய வீரியங்கள் தணிகின்றது.
1.நாம் எப்படியும் காந்திஜியைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு கொண்டு
2.யாரையும் தாக்காத நிலையில் செயல்பட்டார்கள்.

அதன் வழியில் உண்ணாவிரதத்தை நிறுத்திய காந்திஜி நல்ல உணர்வுகள் அனைத்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

இந்தியத் தாய் நாட்டில் அந்தத் தாயின் கருவில் உருவான நாம் அனைவரும் சகோதரர்களே...! என்றார்.

இன பேதத்தால் மொழி பேதத்தால் மத பேதத்தால் பகைமை உணர்வை ஊட்டி அசுரத்தனங்களையும் அரக்கத்தனங்களையும் செய்கின்றார்கள் என்று அவர் “யாரையுமே சொல்லவில்லை...!’

"நாம் எல்லோரும் சகோதரர்கள்...!" என்ற உணர்வை அவர் உணர்ந்தார். மற்றவர்களுக்கும் அதை ஊட்டினாலும் அதற்காக வேண்டி அவர்களைக் குற்றமாகச் சாடவில்லை.

நமக்குள் இன பேதமும் மத பேதமும் வேண்டியதில்லை. பேதங்கள் வரப்படும் போது நாம் எப்படி அதை மாற்ற வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் உருவாக்கினார்.

உதாரணமாக வல்லபாய் படேல் நாட்டின் சுதந்திரத்திற்காக ரொம்பத் தீவிரமாகச் செயல்பட்டவர்.

சுபாஷ் சந்திர போஸோ நாம் இந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தால் அந்நியன் நம்மை என்றுமே அடிமையாகத்தான் வைத்திருப்பான் என்பது அவருடைய வேகத் துடிப்பு.

இதே போல் நேருஜி கூட மிகவும் கடுமையாகப் பேசியவர் தான். ரொம்ப கோபக்காரர்தான். ஆனாலும் காந்திஜியின் சாந்த குணங்களை அவர் பின்பற்றத் தொடங்கினார்.

சுதந்திரம் என்றால்... "நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது..." அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை... “அந்நியர்கள்...” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3."சகோதரத்துவத்தைத் தான்...” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்... அவருடைய எண்ண வலுவால்... சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது.

காந்திஜி வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க அந்த உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

1.”மகிழ்ச்சி...” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள்
2.சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா...!)
3.வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு.

காந்திஜி தன் வாழ்க்கையில் செய்து காட்டியபடி நாம் யாரையும் “அந்நியர்…!” என்று எண்ண வேண்டியதில்லை.

எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் தவமிருக்க வேண்டும்.
1.அவ்வாறு தவமிருந்தால் “மகிழ்ச்சி” என்றுமே நம்மிடம் குடி கொண்டிருக்கும்.
2.“மகரிஷிகள்...” என்பதன் உட் பொருளே பிற உயிர்களை “மகிழ்ச்சிப்படுத்துவோர்...!” என்பது ஆகும்.