ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2018

எக்காரணத்தைக் கொண்டும் பிறர் துன்பப்படுவதைக் கண்டு நாம் ரசிக்கக்கூடாது – அது நம்மையும் பாதிக்கும்…!

யார் துன்பப்பட்டாலும் அவர்கள் துன்பப்படுவதைப் பற்றி நாம் மகிழ்ச்சிப் பட்டுவிடக்கூடாது.
1.நமக்கு வேண்டாதவராக இருந்தாலும்
2.அவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் உடலில் துன்பப்படும் உணர்வுகள் வெளிப்படுவதை அந்தத் துன்பப்படுபவரை உற்று நோக்கி அதை ரசித்தோம் என்றால் அவருக்குள் துன்பத்தை ஊட்டிய உணர்வுகள் நமக்குள்ளும் வந்துவிடும்.

பின் அவர் துன்ப அலையில் சிக்கித் தவிப்பது போல் நம்மை அறியாமலே உயர்ந்த குணங்களை இழந்து துன்பக் கடலில் மூழ்கி விடுகின்றோம். பின் அதிலிருந்து மீளா நிலைகள் அடைந்து விடுகின்றோம்.

பிறர் சிரமப்பட்டாலும் அல்லது குறைகள் செய்து வாழ்ந்தாலும் அவர்கள் செய்ததற்கு (தண்டனையாக) இப்படித் தான் நடந்தது என்று எண்ணாது
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் நிலைகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால்
4.அவருக்குள் இயக்கும் துன்ப உணர்வுகள் நமக்குள் வராது.

யார் துயரப்பட்டாலும் அல்லது அந்தத் துயரமான உணர்வுகளைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும் உடனே…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நம்மைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

பின் மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் துன்பங்கள் நீங்கி நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதைக் கண்டுணர்ந்தாலும் அது பற்றற்றதாக மாற்றி அந்த மகரிஷிகளினுடைய அருள் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் பால்வெளி மண்டலங்களாக (ஆன்மாவாக) மாற்றி வலு கொண்டதாக ஆக்கி
1.இங்கே வாழ்க்கையில் எதைக் கண்டு உணர்ந்தாலும்
2.அதனை நம் எண்ணத்தால் ஊடுருவித் தீமையைப் பிளந்து
3.நல் உணர்வின் அலையாக நாம் சுவாசிக்கும் போது
4.மற்ற உணர்வுகள் நமக்குள் கட்டுப்பட்டதாகவும் தெளிந்திடும் உணர்வாகவும்
5.தெளிந்திடச் செய்யும் அந்த எண்ண அலைகளாக நமக்குள் பரவி
6.உடலுக்குள் விளையும் உணர்வுகள் ஒளியாக மாறி
7.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
8.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து செயல்படுவோம்.

நாம் பார்ப்போர் எல்லோரும் அந்த நிலை பெற வேண்டும் என்று தியானிப்போம்.