ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2018

மற்ற எந்த உயிரினமும் விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது – மனிதனால் மட்டும் தான் விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றுமே அழியாது வாழ முடியும்...!


சிந்தனை அற்ற செயலை ஒருவன் செய்து கொண்டேயிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்ததும் நமக்கு அவன் மேல் வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் வருகின்றது.

நம்மை அறியாமல் ஒரு தரம் அதைக் கேட்டு விட்டு வந்தபின் என்ன நடக்கின்றது..? ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றால் “அது கிடக்கிறது போ…!” என்று சொல்கிறோம். கணக்கைப் பார்க்கும் உணர்வு சரியாக வராது.

அந்த வேலையின் மீது வெறுக்கும் நிலை வந்துவிடுகின்றது. அதே சமயத்தில் வேலையைச் செய்யாமல் இருந்தால் நம் மேலதிகாரி வந்தவுடனே 
1.ஏனப்பா இப்படி இருக்கின்றாய்…?
2.இந்த வேலையை ஏன் செய்யவில்லை…? என்று அவர் கேட்கும் போது
3.நமக்கு வேதனை வருகின்றது. இது சந்தர்ப்பம்.

அப்பொழுது அதை நாம் உடனுக்குடனே தூய்மைப்படுத்தினால் தான் நாம் சிந்தித்துச் செயல்பட முடியும். எந்த தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அக்கணமே “ஈஸ்வரா…” என்று இங்கே உயிரிடம் நாம் வேண்டி நினைவை விண்ணிலே செலுத்த வேண்டும்.
1.மனிதனால் மட்டும் தான் விண்ணை நோக்கி எண்ணி
2.அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுக்க முடியும்.

மற்ற உயிர் இனங்கள் மற்றதைப் பார்த்து அதனிடம் இருந்து தப்பிக் கொள்ளத்தான் எண்ணுகின்றது. விண்ணை நோக்கி எண்ணும் நிலை அதற்கு இல்லை.

நீர் வாழும் மீன்கள் தான் ஓடும் நிலைகளில் நீருக்குள் இருக்கும் காந்தப் புலனை உராய்ந்து தனக்குள் அது வெப்பத்தையும் காந்தப் புலன் அறிவையும் கூட்டிக்கொள்கின்றது.

இருப்பினும் சூரியன் கதிரியக்கங்கள் நீருக்குள் பரவினாலும் மீன் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் அது சரியான மத்தியான வெயில் நேரத்தில் வெளியில் வரும்.

அவ்வாறு வெளியில் வந்து ஒரு நிமிடம் காந்தப் புலனை எடுத்துத் தன் உடலில் சேமிக்கின்றது.

ஆமையோ தனது கால நிலைகளுக்கொப்ப. எதிரிகளுக்குச் சிக்காதபடி மண்ணைப் பறிக்கின்றது. முட்டைகளை இடுகின்றது. மூடி வைத்துவிட்டுப் போய் விடுகின்றது.

தன் இனைத்தை விருத்தி செய்வதற்கு அதனதன் பாதுகாப்பிற்கு அதனதன் வேலைகளைச் செய்கின்றது இவ்வாறு
1.உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி
2.அதிலே விளைந்த உணர்வுகள்தான்
3.ஒட்டு மொத்தமாக மனிதனாக உருவாக்கி இருக்கின்றது நமது உயிர்.

மனிதனாக ஆனபின் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றிடல் வேண்டும். இது தான் கார்த்திகேயா என்பது.

உதாரணமாக - சகஜ வாழ்க்கையில் நாம் கடுமையாக வேலை செய்கிறோம். முடித்த பின்…
1.கையிலே பட்ட அழுக்கைக் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.
2.நாம் குளிக்காமல் அப்படியே படுக்கப் போவதில்லை.
3.துணியில் படிந்த அழுக்கைத் துவைக்காமல் மீண்டும் நாம் உடுத்தப் போவதில்லை.

இதைப் போல தான் நம் வாழ்க்கையில் நல்லதை நாடிச் சென்றாலும் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்க வேண்டும் அல்லவா...!

கடவுளா வந்து தூய்மைப்படுத்துவார்...? இல்லை.

உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் நாம் சோப்பைப் (SOAP) போட்டுத் தூய்மைப்படுத்துவது போல் மகரிஷிகள் அருள் சக்தியின் துணை கொண்டு ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்குதல் வேண்டும்.

கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா…” என்று நினைவை மேல் நோக்கி விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

பின் கவர்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை உள்முகமாகக் கொண்டு வந்து உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்த வேண்டும்.

அடுத்து நாம் நல்லதைச் சிந்திக்க இது இடம் கொடுக்கும். செய்து பாருங்கள்…!