ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2018

பழனியில் “முருகன் பெயரைச் சொல்லி” ரெக்கால சந்தனத்தையும் திருநீறையும் எடுப்பேன்…! என்று காண்பித்த மந்திரவாதி

பழனியில் சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். நான் (ஞானகுரு) சித்தாகும் பொழுது முதன் முதலில் நடந்த நிகழ்ச்சிகள்.

அபுபக்கர் என்ற ஒரு மந்திரவாதி முஸ்லிம் பாய்… அவர் முருகன் மாதிரியே பஜனை எல்லாம் பாடுவார். பஜனை எல்லாம் பாடியவுடனே முருகன் மாதிரியே காட்சி எல்லாம் கொடுப்பார்.

ஆறு படை வீட்டில் முருகன் எப்படி இருக்கின்றாரோ அது போல காட்சி கொடுப்பார்.

எனக்கு அவரைத் தெரியும். மணிவேலு என்ற மட்டன் கடைக்கு மூளைக் கறி சாப்பிட அவர் வாடிக்கையாக வருவார். அதே மாதிரி இந்த ஆள் கறி சாப்பிட வந்தார்.

அப்போது அந்த நேரத்தில் என்ன நடந்தது?

ஒரு பேய் (பிடித்தவர்) வருகிறது. பயங்கரமாக ஆடிக்கொண்டு அங்கே வருகிறது. குருநாதர் சொன்ன முறைப்படி அப்போது நான் ஒரு பிரம்பை எடுத்து அடித்தேன்.

இந்த அடி விழுந்தது என்றால் அங்கே இருக்கின்றவர்கள் (அத்தனை பேருக்கும்) ஆவி இருக்கிறவர்களுக்கெல்லாம் அடி விழுகின்றது. அபுபக்கருக்கும் அடி விழுந்து விட்டது.

பேய் பிடித்தவரோ அந்த ஆவி “என்னை விட்டுவிடு… விட்டுவிடு…” என்று சொல்லிக் கொண்டு போனது. அப்புறம் அவர் நன்றாகிவிட்டார்.

ஆனால் இந்த அபுபக்கர் என்னிடம் வந்து.. “ஏனய்யா.. முருகனைப் பற்றி உனக்குத் தெரியுமா…?” என்றார். ஒரு தட்டு தட்டினார். உடனே “ரெக்கால சந்தானம்… வருகின்றது…!”

இதைச் செய்து காண்பித்து நான் அவரை அடித்தைச் சொல்லிக் காண்பித்து நீ கடவுளை எல்லாம் அவமதிக்கின்றாய்” என்றார்.

இது என்னடா விவகாரமாக இருக்கிறது…! என்று நான் நினைத்தேன்.

என் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி இராத்திரி 12 மணிக்கு அபுபக்கர் இருக்கும் இடத்திற்கு என்னைக் வரச் சொல்லிச் சொல்கிறார்.

நான் அங்கே போனேன்.

அங்கே ஒரு பேங்க் மேனேஜர்… அவர் மீசைக்காரர் அவரையும் கூப்பிட்டார். கூப்பிட்டு நீ இவருக்கு விபரத்தைச் சொல்லு என்றார் அபுபக்கர்.

சொன்னவுடனே அவர் நான் காளி பூஜை செய்து கொண்டு வந்தேன். அபுபக்கர் என்ன செய்கின்றார் என்று பரீட்சை செய்து பார்த்தேன். இரண்டு மூன்று நாள் கை கால் வராமல் போய்விட்டது. பேசவும் முடியவில்லை. அப்பறம் ஐயா தான் என்னைக் காப்பாற்றினார். இது தான் நடந்த நிகழ்ச்சி என்று என்னிடம் சொல்கிறார்.

அந்த இடத்தில் ஒரு ஜட்ஜ் சப் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரும் இருக்கிறார்கள்,

என்னைக்கூப்பிட்டதும் என்ன செய்து விட்டார் தெரியவில்லை.

அபுபக்கர், நீரில் இருந்து திரு நீறு எடுப்பேன் தெரியுமா என்று செய்து காட்டுகிறார். நான் யார் தெரியுமா…! என்று மிரட்டுகிறார்.

நான் சொன்னேன் எனக்கு எதுவுமே தெரியாது அது பாட்டுக்கு என்னமோ நடக்கிறது என்று சொன்னேன்.

நீ தெரியாது என்று சொல்கிறாய். ஆனால் நீ பிரம்பில அடித்த அடி முதுகிலே எல்லோருக்கும் வார் வாராக ஓடுகிறது. ஒன்றும் தெரியவில்லை என்றா சொல்கிறாய்…! என்கிறார்.

சப் இன்ஸ்பெக்டருக்கும் அடி விழுந்திருக்கின்றது. நீ ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டு இப்படிச் செய்யலாமா…? நீ என்ன நினைத்து கொண்டு இருக்கின்றாய்…? என்று அவரும் மிரட்டுகிறார்.

நான் மறுபடியும் எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னமோ நடக்கிறது என்றேன். நான் செய்யவும் இல்லை. என்னை அடிக்கச் சொல்லி கை வந்தது. அடித்தேன்…! உங்கள் மேலே விழுந்தது. அதற்கு நான் என்ன செய்யட்டும்…? என்றேன்.

இல்லை… நீ பெரிய ஆள்..! ஆனால் உன்னை நான் உள்ளே ஜெயிலில் கொண்டு போய் உட்கார வைத்து விடுவேன் என்கிறார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

அந்த இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி நடக்கின்றது. என்னுடைய நண்பருடைய சம்சாரம்… அது வீட்டு வாசற்படியில் நேராக நுழைய முடியாது. அந்தளவுக்கு நீர் சத்துப் பிடித்துக் கொண்டு குண்டாக இருக்கும்.

மூன்று அடி வாசலில் உள்ளே வர முடியாது. உடலை ஒரு சாய்த்துத்தான் வர முடியும். உடலைக் குறைப்பதற்காக அங்கே கூட்டி வந்திருக்கின்றார்.

பச்சிலையைக் கொண்டு வந்து அபுபக்கர் மருந்து கொடுத்து அதை குணமாக்குகிறேன் என்று செய்து கொண்டிருக்கின்றார்.

அதைப் பார்த்து நான் சொன்னேன். குண்டான இந்த அம்மாவிற்கு மருந்து கொடுத்துக் கொண்டுள்ளீர்கள். நாளைக்குக் காலையில் அது சாகப் போகிறது. இங்கே இருக்கும் நீங்கள் தான் எல்லோரும் நாளைக்கு உள்ளே (ஜெயிலுக்குள்) போகப் போகிறீர்கள்.

நான் என் நண்பரைக் (அந்த அம்மாவின் கணவர்) கூப்பிட்டு அப்பா மருந்து அவர்கள் தான் கொடுக்கின்றார்கள். செத்துப் போனால் நீ போலீஸ் ஸ்டேஷன் போய்ப் புகார் கொடு என்று சொன்னேன்.

உடனே அந்த சப் இன்ஸ்பெக்டர் “என்னையா…! இந்த மாதிரி நம்மளையே மிரட்டுகிறாய்…?” என்கிறார்.

“பெரிய மகான்…!” என்ற நிலையில் சொல்கிறீர்கள் அவர் மருந்து கொடுக்கின்றார். அப்புறம் பாருங்கள்…! என்று நான் சொல்லி விட்டுச் சைக்கிள் கடைக்கு வந்து விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் அந்த அம்மாவிற்கு வயிற்றோட்டமாக போய் கொண்டே இருக்கின்றது. அந்த மாதிரித் தொடர்ந்து போகப்போக போகப்போக கொஞ்ச நேரத்தில் நான் செத்துப் போவேன்… செத்துப் போவேன்…” என்று சொல்ல ஆரம்பித்தது.

அந்தம்மாவின் கணவர் என்னை தேடி வந்தார். ஐயா…! நிஜமாகவே செத்துப் போகும் போல இருக்கிறது. வெறும் தண்ணியாகப் போகிறது என்று சொல்கிறார்.

ஆமாம்ப்பா…! மருந்து அவர்கள் தான் கொடுக்கிறார்கள். அவர்களை வைத்தே காப்பாற்றிக் கொள் என்றேன்.

சம்சாரம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

கனத்த உடல் ஒல்லியாகப் போய்விட்டது. கொஞ்ச நேரத்தில் செத்துப் போகும் போல இருக்கிறது என்றார்.

“கொஞ்ச நேரத்தில் செத்துத்தானய்யா போகும்…!” என்று சொன்னேன்.

என்னங்க… இப்படிச் சொல்கின்றீர்கள்…? என்றார் அவர்.

அது ஒரு ஆவி. “இறந்தது” உன் சம்சாரத்தின் உடலிலே இருக்கிறது. தண்ணீராகப் போகப் போக அந்த ஆவியினுடைய நிலைகள் பலவீனமாக ஆகிப்போகும். உன் சம்சாரம் தெளிவாகிப் போகும்.

ஆனால் நீ இந்த விபரத்தைச் சொன்னால் மறுபடியும் வந்து விடும் என்றேன் நான்.

ஆகா… நான் சொல்லுவேனா…! என் சம்சாரம் நன்றாக ஆகி எழுந்தாலே போதும் என்றார்.

மறுபடியும் அபுபக்கரிடம் அவர் போனவுடனே அவர்கள் விபரம் கேட்கிறார்கள். எப்படிக் கேட்டாலும் என் மனைவி செத்துப் போகும் என்றேன் தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்று இவரும் சொல்கிறார்.

அடப்பாவி என்று சொல்லி விட்டு எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு என்னிடம் வந்தார்கள்.

அப்பொழுது தான் நான் கேட்டேன். நீங்கள் பெரிய மகான்…! எனக்கு ஒன்றும் தெரியாது என்றீர்கள். பிறகு என்னிடம் எதற்காகக் கேட்கின்றீர்கள்..? அவர் செத்துப் போவார். கோர்ட்டில் போய்ச் சொல்லி கொள்ளுங்கள்.

நீரில் இருந்து திருநீறு கொண்டு வருகிறேன் என்று சொல்கின்றீர்கள். ஆவிகளை வைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்கின்றீர்கள்.

பச்சிலையை ஆள்கள் மூலமாகக் கொண்டு வந்து அரைக்கின்றீர்கள். அந்தப் பச்சிலையைத் திருநீறு கொண்டு வருகிற மாதிரிக் கொண்டு வரலாம் அல்லவா…!

நீங்கள் ஆவியின் தொடர் வைத்துத்தான் சந்தனம் கொண்டு வருவது திருநீறு கொண்டு வருவது எல்லாம் செய்கிறீர்கள் என்று விபரத்தை அபுபக்கரிடம் சொன்னேன்.

அதே மாதிரி இந்த அம்மாவின் உடலில் இருப்பதும் ஒரு ஆவி தான். அந்த ஆவிதான் இப்பொழுது பலவீனம் அடைகிறது.

அது வாழ்ந்த காலத்தில் ஊது காமாலை என்று நோயாகி அது உடலில் எப்படி நீர் பிடிப்பு அதிகமாகிச் செத்தது. அதே உணர்வின் இயக்கமாக இந்த உடலிலும் செயல்பட்டது.

அந்த அம்மா உடல் நல்லாகிப் போகும் என்று நான் சொன்னேன்.

அப்புறம் மறுநாள் அந்த அபுபக்கர் வந்தார். நீங்கள் இப்படி எல்லாம் செய்வது சரியில்லை. நான் சொல்கின்ற மாதிரி செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பெண்கள் பிள்ளைகள் எல்லாம் ரொம்ப அவஸ்தைப்படுகின்றார்கள்.

இந்தம்மாவைக் குணப்படுத்தியதற்கு குறைந்தது ஐந்து இலட்சம் வாங்கலாம். நீங்கள் விட்டுவிட்டீர்கள். ஆவி பிடித்தது மற்ற இந்த மாதிரிக் கேசுகள் உங்களுக்குப் பிடித்துத் தருகிறேன். ஆளுக்குப் பங்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் அபுபக்கர்.

ஐந்து இலட்சம் எதற்கு ஐயா…! நான் செய்யவில்லையே… என் குருநாதர் தான் செய்தார் என்றேன் நான்

அட நீங்கள் ஒரு பக்கத்தில்…! நீங்கள் தான் இதைச் செய்தீர்கள். அந்த ஆள் வசதியானவன். பணத்தை வாங்கி நீங்கள் ஏழைகளுக்கு செய்யலாம் அல்லவா என்றார். எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இந்த மாதிரி எண்ணத்தில் இனிமேல் என்னிடம் வராதே. நான் செய்யவில்லை. குருநாதர் ஏதோ செய்து இருக்கிறார். காசு வாங்கும் நிலைகளுக்கு இல்லை என்று சொன்னேன்.

அப்புறம் சைக்கிள் கடைசியில் பார்த்தோம் என்றால் கூட்டம் ஏராளமாக வர ஆரம்பித்து விட்டது. அப்புறம் நீ ஊரை விட்டுக் கிளம்புடா என்றார் குருநாதர்.

உடலுடன் இப்பொழுது இருக்கிறார்கள்.
1.இறந்தபின் இன்னொரு உடலுக்குள் இந்த ஆவி எப்படிப் போகிறது?
2.அதே சமயத்தில் உடலில் இயக்கிய இந்த அணுக்கள் எப்படி உருவாக்கி ஊது காமாலை என்ற நோயாக ஆனது?
3.பின் அது எப்படி பலவீனமாக ஆனது?
4.அது எப்படி நல்லதானது?
5.அவர்கள் அதை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?

ஒவ்வொன்றையும் இப்படி அனுபவத்தில் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார். அறியும்படி உணரும்படிச் செய்தார்.

சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சொன்னால் நண்பர்களாகப் பழகுகின்றோம். அவ்வாறு பழகும் போது ஒரு பிரியமாக இருந்து அது இறந்து விட்டால் அவன் என்ன நோயோட இறந்தானோ “அவன் போய்விட்டானே…!” என்று எண்ணினால் அந்த உணர்வு இந்த உடலில் வரும்.

அதே மாதிரித் தான் அந்தப் அம்மாளிடம் பழகிய பெண் ஊது காமாலையால் இறந்தது. அதே உணர்வை இந்த அம்மாள் எடுத்தவுடனே ஆவியாக இந்த உடலில் உருவாக்குகின்றது.

இந்த விபரங்களைக் குருநாதர் உணர்த்தி எனக்குத் தெளிவாக்கினார்.