நோய் வரும் பொழுது அது
எந்த நோயாக இருந்தாலும் உடனே அதை நீக்க மருத்துவரிடம் தான் செல்கிறோம். இது எல்லோருக்கும்
தெரிந்த விஷயம் தான்.
ஆனால் வாழ்க்கையில் தீமை
வரும் பொழுதும் துன்பம் வரும் பொழுதும் வேதனை வரும் பொழுதும் கோபம் வரும் பொழுதும்
நாம் எதை நினைக்கின்றோம் யாரை நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
தீமைகளையும் துன்பங்களையும்
வேதனைகளையும் நீக்கிப் பழகிய மகரிஷிகளிடம் நாம் செல்கின்றோமா… …?
ஆகவே இங்கே அருள் ஞான உபதேசங்களைப்
படிப்பவர்கள் அனைவருமே எங்கே சென்றாலும்… எந்த நிமிடம் ஆனாலும்…
1.“எனக்கு இவ்வாறு துன்பம்
செய்தார்…” என்று அடுத்தவர்களை எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து
கொண்டே இருக்கிறது…” என்று எண்ணாதபடி
3.இந்த எண்ணத்தையே மாற்றிப்
பழக வேண்டும்.
அதற்காக வேண்டி ஆத்ம சுத்தி
என்ற ஆயுதத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) அருளிய வழிப்படி உங்களுக்கும்
தைரியத்துடன்.., உங்களுக்கும் தைரியம் பெறவே இதைக் கொடுக்கின்றேன்.
குருநாதர் எம்மைப் பல இன்னல்களுக்கு
ஆளாக்கி காடு மேடெல்லாம் அலையச் செய்து இவன் செம்மையாகச் செய்வானா…? செய்ய மாட்டானா…?
என்று பல நிலைகளில் பரிசீலித்தார்.
பனிரெண்டு வருட காலம் எல்லோரும்
தவம் என்று சொல்வார்கள்.
பனிரெண்டு வருட காலம் ஒவ்வொரு
நொடியிலும் எண்ணங்களால் வேதனைப்படுத்துவதும் எண்ணத்தால் அவஸ்தைப்படுவதும் என்ன செய்வது
என்ற உணர்வே அறிய முடியாத நிலையில் என்னை ஆளாக்கினார்.
ஒவ்வொரு நிலைகளிலும்
1.நான் பிறருக்கு நன்மை
செய்தாலும்
2.அந்த நன்மை பெற்றவர்களும்
3.மீண்டும் எனக்குத் தீமை
செய்வார்கள்.
அப்படித் தீமையே செய்யப்படும்
பொழுது அந்தத் தீமையை அழித்திட எனக்குப் பல ஆற்றல்களையும் சக்திகளையும் காண்பித்துக்
கொடுத்தார்.
கொடூரச் சக்திகள் கொண்டு
நான் எண்ணத்தால் எண்ணினால் போதும். அவர்களுடைய நிலைகள் செயலற்றதாக ஆகிவிடும். ஆனால்
அதை நான் பயன்படுத்தவில்லை.
அதற்கு மாறாக குருநாதர்
காட்டிய அருள் வழியினைத்தான் கடைப்பிடித்தேன்.
பிறர் எனக்கு எவ்வளவு பெரிய
தீங்கு விளைய வைத்தாலும்
1.என்னை எண்ணும் பொழுது…
2.அவருக்குள் தீமையை விளைவிக்கும்
அந்த எண்ணங்கள்தான் அழிய வேண்டுமே தவிர
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய
நல்ல எண்ணங்கள் ஓங்கி வளர வேண்டும்
3.நன்மை பயக்கும் சக்தியாக
அது மலரவேண்டும் என்றுதான்
4.குருநாதர் காட்டிய வழியில்
இன்றும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
5.இந்தச் சக்தியினைத்தான்
குருநாதர் எனக்குப் பாதுகாப்புக் கவசமாகக் கொடுத்தார்.
நாம் எண்ணும் நல்ல குணங்களே
நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…!