ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2018

பாவ வினைகளை எப்படி நீக்குவது...?

“பஸ்ஸில் ஒருவன் அடிபட்டுத் துடிக்கின்றான்...” என்று வைத்துக் கொள்வோம். அடிபட்டு அவன் துடி துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள். அவனுக்குள் எத்தனை இம்சைகள் வந்ததோ பார்க்கும் பொழுது அது நமக்குள் வந்துவிடுகிறது.

“ஒருவன் ஆட்டைக் கத்தக் கத்த அறுக்கிறான்...” என்று வைத்து கொள்வோம், பார்த்தவுடன் முகதைச் சுளிக்கின்றோம். ஆட்டின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளி வருகின்றது.

ஆட்டை அறுப்பவன் செய்கின்றான் பாவம், நாம் பார்க்கின்றோம். ஆடு துடி துடிக்கும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்து விடுகிறது.

“மற்றொரு ஜீவனை நாய் கடித்துக் குதறுகிறது...” பரிவு மனம் கொண்ட நாம் துடிக்கும் உணர்வைப் பார்க்கின்றோம். அது நமக்குள் வந்துவிடுகின்றது.

1.கொன்று புசித்த உணர்வின் வேகமும் அலைகளாகப் படர்கின்றது
2.தாக்கப்படும் பொழுது துடி துடிக்கும் உணர்வும் அலைகளாகப் படர்கின்றது
3.இந்த இரண்டு உணர்வும் வித்தாகப் பாவ வினைகளாக இணைந்து நம் நல்ல குணங்களைக் கொன்று விழுங்கி
4,நம்மைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற சாப வினைகளையும் பாவ வினைகளையும் நீக்க வேண்டும் என்றால் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணிலே ஒளியாக இருக்கும் மகரிஷிகளின் ஆற்றலை நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலே வாழும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எளிதில் பருகுவதற்குத் தான் “விநாயகனை நாம் வணங்கும் முறையை” ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.

1.மண்ணுலகில் தான் வாழும் பொழுது
2.தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் நீக்கி
3.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
4.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.ஒவ்வொருவரும் தன் உயிரான ஈசனிடம் வேண்டுவதற்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

தீமையை விளைவிக்கும் உணர்வுகளில் இருந்து தப்புவதற்காக அந்த மகா ஞானியான அகஸ்தியர் அருளாற்றலை இது வரையில் எடுத்துக் கொண்டவர்கள் “எத்தனை பேர்...!” என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஏதோ சாமியிடம் (ஞானகுருவிடம்) சென்றோம். அவர் இரண்டு வாக்கைக் கொடுத்தால்
1.நம் குடும்பம் நன்றாக இருக்கும்...
2.தொழில் கிடைத்தால் நமக்கு நன்றாக இருக்கும்...! என்ற
3.இந்த நிலையில் தான் வருகின்றார்கள்.

யாம் உபதேசிக்கும் பொழுது அதிலுள்ள உள் கருத்தினை எடுத்து உங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் உட்கொண்டால் தான் அந்த ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குள் வரும்.

ஆகவே சாமி உபதேசிக்கும் ஞானிகளின் உணர்வுகளை நாம் ஏற்றுக் கொள்வோம். அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொள்வோம். நம்மை அறியாது வந்த தீமையைப் போக்குவோம் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையின் நிலைகள் எப்படி இயங்குகிறது என்பதை எமக்குக் கூறினார். பல கஷ்டங்களையும் பல இன்னல்களையும் செயற்கையாகவே உண்டாக்கினார். அந்த அனுபவரீதியில் தான் இயற்கையின் உண்மைகளைக் கண்டுணர்ந்தேன்.

1.அறியாது வந்த தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்,
2.தீமை உங்களை அணுகக் கூடாது.
3.உங்களுடைய பார்வையிலேயே தீமைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசிக்கின்றோம்,