ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2018

துன்பத்தைப் போக்கும் முறை


ஒரு தேள் கொட்டினால் நாம் என்ன செய்வோம்…! நினைவை இழந்து விடுவோம். அப்பொழுது யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறோம்.

அதைப் போல ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது
2.மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும்
3.அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
2.இனி நமக்குக் கஷ்டமில்லை.
3.என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால்
யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

இது பழக்கத்திற்கு வர வேண்டும். பெரும் பகுதியானவர்கள் அவர்கள் கஷ்ட நஷ்டங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
1.இதையெல்லாம் செய்தேன் இந்த மாதிரி நஷ்டமாகிவிட்டது
2.நான் எதைச் செய்தாலும் எனக்கு நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
3.எங்கே பார்த்தாலும் தொல்லை தீரவே மாட்டேன் என்கிறது என்று
4.இந்த முடிவிலேயே நின்று கொண்டு
5.அதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த மாதிரிச் சொல்லாதபடி கஷ்ட நஷ்டங்கள் எது வந்தாலும் அதை நீங்கள் அனுபவித்து வந்தாலும் கூட இங்கே வந்தவுடன்…
1.இந்த மாதிரி ஆகிவிட்டது…!
2.இனிமேல் இதிலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாலே மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் செயல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய பிணி நீங்க வேண்டும்.
5.நாங்கள் வியாபாரம் செய்யும் போது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
6.அவர்கள் அனைவரும் வளமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் உங்கள் துன்பங்கள் அகலும் என்று உறுதியாகச் சொல்கிறோம்…!