ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2018

“பித்தராக இருந்த ஈஸ்வரபட்டரிடம்...!" யாம் (ஞானகுரு) பெற்ற அனுபவம்


நஞ்சு ஒரு பொருளுடன் இணைந்த பின் மீண்டும் அதில் எப்பொருளை இட்டாலும் அந்த நஞ்சின் செயலாகவே மாற்றிக்கொண்டு இருக்கும் என்ற நிலையை உணர்த்துவதற்காக
1.அரும் பெரும் சக்திகளை எல்லாம் எமக்குக் (ஞானகுரு) கொடுத்து
2.மிகப் பெரிய அனுபவம் கொடுத்தார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

பொருள் தேடவேண்டும் என்ற என்னுடைய ஆசையும் மதிப்பும் கௌரவத்தையும் மனதில் வைத்து நான் இயங்கப்படும் பொழுது அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்.

நான் எங்கு சென்றாலும் சரி…
1.பைத்தியக்காரனுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்றும்
2.பிழைக்கத் தெரியாதவன் என்றும்
3.என்னை இழிவாகப் பேசுகின்றார்கள்

என்னால் பல சௌகரியங்களை அனுபவித்த எனது நன்பனே என் கண்ணுக்கு முன்பே பைத்தியக்காரன் என்று பேசுகிறான்.

அவன் கடையில் போய் உட்கார்ந்தேன் என்றால் நீ பைத்தியம் கூட சுற்றிக் கொண்டு திரிந்தவன். இங்கு வந்து நீ உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும். போ…! என்று நண்பனே விரட்டுகிறான்.

குருநாதர் மிகப் பெரும் சக்திகளைக் கொடுத்தார். அது எவ்வாறு எல்லாம் விளைகின்றது என்று பல அற்புதங்களையும் என்னையே செய்ய சொன்னார்.

அற்புதங்களை நானும் பார்க்கின்றேன். இவ்வளவு கொடுத்தும் ஒன்றை உனக்குச் சொல்கிறேன் என்பார்.

அற்புதம் செய்து அறியும் ஆற்றல் கொண்டு அறிந்தபின் அதனால் உன் உடல் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபம் வரும் என்பார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றால் உடலில் உள்ள இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியான பெரும் செல்வமான பேரானந்த நிலை பெறலாம் என்று அதையும் காட்டுகிறார்.

இவ்வாறு அவர் காட்டினாலும் அவர் கொடுத்த சக்திகளினால்
1.இந்த மனித வாழ்க்கையில் எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
2.என்னைச் செல்வந்தன் என்று மற்றவர்கள் மதிக்க வேண்டும்
3.எனக்குள் பெரும் சக்தி இருக்கவேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் அதிகமாக வளர்ந்தது.

அதே சமயம் “ஜீ..பூ..ம்பா..” என்கிற நிலையில் சில வித்தைகளை உருவாக்கி அதனைக் கொண்டு மக்களை மயக்கி அதிலே பேரும் புகழும் பெற்று அதிலே செல்வங்கள் எப்படித் தேடுகின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.

இவை எல்லாம் எவ்வாறு உருவாகின்றது எப்படிச் செய்கின்றார்கள்…? மந்திரங்கள் செய்து பலர் பல நிலைகளைச் செய்தாலும் அந்த மந்திரங்களின் மூலக்கரு எது..? எவ்வாறு எல்லாம் உருவானது என்ற நிலையையும் காட்டுகிறார்.

அவ்வாறெல்லாம் நீ செய்தால் அதை வைத்து நீ கோடி…கோடி.. கோடிச் செல்வங்களையும் குவிக்கலாம் என்று இந்த ஆசையையும் ஊட்டுவார்.

அவர் ஊட்டிய அந்த ஆசை எனக்குள் வளர்ந்தது. அதைப் பெறவேண்டும் என்ற ஆர்வங்கள் தூண்டியது.

இருப்பினும் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் காப்பாற்றியதால் அவர் மேல் நம்பிக்கை வந்தது. அந்தச் சமயத்தில் என் தந்தையும் மாமனாரும் இறந்து விட்டார். சொத்து எல்லாம் போய்விட்டது.

பிள்ளைகள் எல்லாம் அப்பொழுது தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிச் செய்து கொண்டிருக்கின்றீர்களே… நமக்கும் வாழ்க்கை வாழ வழியில்லையா…?
1.கணவனை அடைந்தோம்.
2.ஆனால் இந்த நிலையிலே அல்லவா இருக்கின்றோம் என்று என் மனைவி ஏங்கித் தவிக்கின்றது,

அதற்கு தகுந்த மாதிரி என் மாமியார் என் மூத்த பையனிடம் சொல்லும். உன் அப்பனுக்கு அறிவே இல்லை. சொத்தை எல்லாம் தொலைத்து விடுவான் போலிருக்கின்றது. நீயே பார்த்துக் கொள் என்று அவனிடம் சொல்கிறது.

என் மூத்த பையன் சொத்தைத் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு இருக்கிற சொத்தை எல்லாம் காணாமல் செய்து விட்டான்.

அப்பொழுது அந்த நேரத்தில் இப்படிப்பட்ட தரித்திர நிலையை உருவாக்கியதும் குருநாதர் தான். தரித்திர நிலைகள் கொண்டு அவர்கள் (உன் குடும்பம்) எவ்வாறு வாழுகின்றார்கள் என்ற நிலையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

அரும்பெரும் சக்திகளைப் பெற்ற நீ இந்தத் தருணத்தில் சிரமங்களிலிருந்து அவர்களை எப்படி மீட்டப் போகிறாய் என்று இந்த உணர்ச்சிகளையும் எனக்குள் தூண்டச் செய்கிறார்.

ஆசைகளுக்காக வேண்டி சிலவற்றைச் செய்தோம் என்றால் புகழும் பொருளும் எவ்வாறு வந்து குவியும் என்று காட்டுகின்றார். ஆனால்
1.இந்த அருள் ஞான சக்தியை நீ பெறுவதற்கு
2.எந்தெந்த நிலையில் எல்லாம் இன்னல்கள் வருகிறது என்றும் காட்டுகின்றார்.

இதில் நீ அப்படிச் செய்து புகழின் நிலையில் பொருள் தேடலாம். நீ உன் வாழ்க்கையில் மகிழ்ந்திடலாம் என்று அங்கே மகிழ்ச்சியை ஊட்டச் செய்வார்.

பிறருக்கு சில நிலைகளைச் செய்யச் சொல்வார். என்னையே செய்யச் சொல்வார்.
1.அங்கே அற்புதங்கள் நடக்கும்.
2.உடனே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தோன்றும்.

ஆனால் நான் வீட்டுக்கு வந்தாலோ
1.என் சிறிய பையன் நைனா நைனா என்று ஏங்குவான்.
2.காசு பணம் ஒன்றும் இல்லையே…! சாப்பாட்டுக்கு வழி இல்லையே…! மனைவி கேட்கின்றது
3.உடுத்துவதற்குத் துணி வேண்டும் அது வேண்டும் என்று பிள்ளைகள் கேட்பார்கள்.

வெளியிலே அங்கே மகிழ்ச்சியூட்டச் செய்வார். காசு பெருகும் நிலையும் பெறச் செய்வார். வீட்டுக்கு வந்ததும் இந்த நிலையைச் செய்வார்,

ஆக எவ்வளவோ சக்திகளைக் கொடுத்து அற்புதங்களைச் செய்தாலும் நீ புகழைத் தேடினாலும் அதன் வழிகளளில் இருள் சூழ்ந்த நிலையே இந்த உடலுக்கு வந்து விடும்.
1.வந்து விட்டால் பெரும் சக்திகள் அனைத்தும் மறைந்துவிடும்
2.இருளை போக்கும் நிலையை அறுத்துவிடும்.

இந்தப் பூமியில் மனிதனாகப் பிறந்த நீ எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்…? சென்றபின் நீ எங்கே எப்படி நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.
1.உடலை விட்டு என்னைப் பிரியச் செய்கின்றார்.
2.ஒளியின் சுடராக ஆவதையும் காட்டுகின்றார் (பார்க்கிறேன்)
3.ஒளியின் சுடராக ஆன பின் எந்த நிலையில் இருக்கும் என்பதையும் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். இன்னொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார்.

இதிலிருந்து…! நான் என்ன செய்வது என்றே ஒன்றும் புரியாதபடி ஒரு பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.அதைப் (உலகப் பற்றை) பிடிக்கிறதா…? அல்லது
2.இதைப் (மெய் ஒளியை) பிடிக்கிறதா….? என்ற அந்த நிலை வருகிறது.

எங்கே போனாலும் யாரிடம் நெருங்கிப் போனாலும் “நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போய்யா…!” என்று அவமரியாதையாகப் பேசுகிறார்கள்.

வேஷ்டி கட்டிக் கொண்டு போனாலும் திடீரென அது கிழிந்து போய் விடும். வேறு வேஷ்டி வாங்கப் பணம் இல்லை? வீட்டுக்கு வந்தாலோ “சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நாங்கள் இருக்கிறோம்..!” என்று குடும்பத்தில் நினைப்பார்கள். இப்படி
1.வெளியில் போனால் அப்படி…
2.வீட்டுக்கு வந்தால் இப்படி…
3.குழந்தைகளைப் பார்த்தால் இப்படி… இந்தப் மாதிரி பல உணர்வுகள் வருகின்றது.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் கொடுத்த சக்தியை வைத்துப்
1.பொருள் செல்வத்தையும் தேடவும் செய்யலாம்.
2.அந்த அருள் ஞானியின் உணர்வையும் (அருள் செல்வத்தையும்) நீ வளர்த்துக் கொள்ளலாம்.
3.இதில் உனக்கு எது தேவையோ “அதை வளர்த்துக் கொள்…” என்கிறார்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது இது என்ன வாழ்க்கை…! என்று எனக்குப் பித்து பிடித்து போகும் நிலையில் இருக்கின்றது

குழந்தைகளைப் பார்க்கப்படும் பொழுது நாளை என்னாகும் என்ற வெறுப்பின் தன்மை உருவாகின்றது. அடுத்தவர் என்னைப் பழித்துப் பேசும் பொழுது இனி வாழ்ந்து தான் என்ன என்ற உணர்வு வருகின்றது.

கௌரவமும் புகழும் தடைப்படும் பொழுது இங்கே ஆனந்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது குடும்பத்தில் சங்கடமான நிலைகள் இத்தனையும் உருவாக்கி என்னை முச்சந்தியில் நிறுத்திப் பெரிய உணர்வுகளைத் தூண்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குடும்பப் பற்றுடன் பாசத்துடன் எவ்வளவு வாழ்ந்து வந்தாலும்
1.உடலுக்காக வாழ வேண்டும் என்ற அந்தப் பற்று வரும்போது
2.அதனின் உணர்வுகள் மெய் வழியில் பற்று கொண்டு செல்லும் பாதையை
3.அது எப்படித் திருப்புகிறது…? எப்படித் தடையாகின்றது…?
4.அதிலிருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…?
5.உயிர் பற்றை வளர்த்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எவ்வாறு இணைய வேண்டும் என்று உணர்த்தினார்.

மக்களுக்கு அந்த மெய் வழி செல்லும் பாதையைக் காட்டி அதிலே அவர்களை எப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையை அறிந்து கொள்ளவே குருநாதர் இந்த அனுபவத்தைக் கொடுத்தார்.

குருவிடம் இத்தகைய அனுபவம் பெற்றதால் தான் உங்களுக்கு அந்த மார்க்கத்தை எம்மால் இயம்ப முடிகின்றது…? யாம் வெறும் வார்த்தைகளாக உங்களிடம் சொல்லவில்லை.

“பேரிருளைப் போக்கி… பேரொளியாக மாற்றிடும் மகத்துவத்தைத்தான்…” குருநாதர் காட்டிய வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.