ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2018

திருப்பதிக்குச் சென்றால் திருப்பம் உண்டாகுமா…? எப்படி உண்டாகும்…? – தவசிகள் செய்த தவமும் அவர்களின் தவ வலிமையும் எத்தகையது…?


உயிர் போய்விட்டால் உடலுக்கு மதிப்பில்லை. உயிர் இல்லை என்றால் “நான்” என்ற ஒன்று இல்லாது போய்விடுகிறது.

நாம் உயிரை மதிக்கின்றோமா…? உடலைத்தான் மதிக்கின்றோம். உடலுக்குத்தான் மதிப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

ஞானிகள் உயிர் இருக்கும் அந்த மதிப்பு மிக்க இடத்தைக் காட்டுவதற்காகத்தான் திருப்பதி என்ற காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திரு + பதி = திருப்பதி “மதிப்பிற்குரிய இடம்…” என்று பொருள். ஒரு மனிதனுக்குள் உயிர் இருக்கும் இடமே மிகவும் மதிப்பிற்குரிய இடம் ஆகும்.

விஞ்ஞானிகள் தான் கண்டுபிடித்த பொருள்களுக்கு அதன் பயனுக்குகந்த பெயர்களை வைப்பது போல் தான் அன்று மெய் ஞானிகளும் பேர் வைத்தார்கள்.

ஆனால் அரசர்கள் காலத்தில் அதுவெல்லாம் மறைந்து விட்டது. மறைந்ததைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உணர்த்திக் கொண்டுள்ளோம்.

திருப்பதிக்குச் சென்றால் திருப்பம் வரும் என்பார்கள், எப்படி..?

1.சாதாரணமாக நாம் கண்களால் பார்த்தோ காதால் கேட்டோ
2.அதன் பின் உணர்வுகள் இயக்கப்பட்டு
3.மூக்கின் வழியாக உந்திச் சுவாசிப்போம்.
4.இது தான் நம்முடைய சுவாச நிலை.

இப்படிச் சுவாசிக்காமல்…,
1.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.உயிர் இருக்கும் இடமான அந்தத் திரு + பதிக்குச் சென்று
3.அங்கிருந்து நினைவினை விண்ணிலே செலுத்தி
4.மகரிஷிகளின் உணர்வை உயிர் வழியாகச் சுவாசித்தால்
5.எத்தகைய தீமையாக இருந்தாலும் அது மாறி நல்லதாக அமைந்துவிடும்.

அதாவது புருவ மத்திக்கு எப்பொழுதெல்லாம் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்கின்றோமோ அப்பொழுதெல்லாம் நல்ல திருப்பம் உண்டாகும்.
1.நல்லது நடந்து கொண்டேயிருக்கும்.
2.கெட்டது அனைத்தும் நல்லதாகத் திருப்பமாகும்.

இதற்குப் பெயர் தான் உயிர் வழி சுவாசம் என்பது. இதையே தான் இமயமலையில் தவசிகள் தவமிருந்தார்கள் என்று சொல்வார்கள்.

அதாவது புருவ மத்தியில் எப்பொழுதுமே நம் நினைவை வைத்து உயிர் வழியாக விண்ணின் ஆற்றலைச் சுவாசிப்பதைத்தான் “தவம்…!” என்று சொன்னார்கள்.

நம்முடைய தவம் (வேண்டுதல்) எப்பொழுதுமே புருவ மத்தியில் தான் இருக்க வேண்டும்.

ஈஸ்வரா என்று அவனிடம் வேண்டி இந்தப் பேருண்மைகளை எல்லாம் உணர்த்திய மகா மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிலும் படரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு செய்யச் செய்ய ஒவ்வொருவரின் வாழ்க்கையில் என்றுமே நல்லதே (திருப்பமாக அமைந்து) திரும்பத் திரும்ப நடக்கும்.

இதைத் தான் “தவ வலிமை” என்று சொல்வது…!