ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2018

குலதெய்வங்கள் தீயிலே மாண்டவர்கள்…! அவர்கள் ஆடையை வைத்து வணங்குகிறோம்…! என்று தான் சொல்கிறோம் – அதனின் உண்மை நிலைகள் என்ன…?


ஆரம்பத்தில் என்னைக் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர். பின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று
1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் என்னென்ன உருவங்கள் இருக்கிறது…?
2..அந்தத் தெய்வ குணத்தின் சிறப்பு என்ன…? 
3.அதனை எப்படி மக்கள் வளர்க்கின்றனர்…? என்று உணர்த்தினார்.

ஞானிகள் தாம் கண்டுர்ந்த உண்மையின் உணர்வை (மெய்யை) உணர்த்துவதற்கு உருவச் சிலையை அமைத்தனர்.

ஆனால் அதைத் தவறான வழியில் தான் இன்று பயன்படுத்துகின்றனரே தவிர நல்வழிப் படுத்தும் நிலை அற்று போய் விட்டது.

ஆகவே ஒவ்வொரு மக்களுக்கும் ஞானிகள் கண்ட மெய்யை நீ தெளிவுபடுத்த வேண்டும் என்றார் குருநாதர்.

உதாரணமாக குலதெய்வங்களை வணங்குகின்றோம். அதே சமயத்தில் நாம் குலவழியில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கிச் செயல்பட்டோமோ அதன் வழி தான் இன்று அந்தந்தக் குடும்பங்களில் பல உட்பிரிவுகளும் அதிகமாக வளர்கின்றது.

அந்தக் குலதெய்வம் எப்படி உருவானது என்ற நிலையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அன்று ஆண்ட அரசர்கள் மற்ற எதிரிகளை வீழ்த்துவதற்காக சில மந்திரங்களைச் சொல்லிச் செயல்படுத்துவார்கள். அந்த அரசன் ஒரு கூட்டமைப்பாகப் போருக்குச் செல்லும்போது அதிலே ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வார்கள்.

1.நாட்டைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் சேர்ந்து
2.தன் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற உணர்வை அந்தக் குழந்தைக்கு ஊட்டி
3.அதனைத் தீயிலே போட்டுப் பொசுக்கி விட்டு
4.அதிலிருந்து உணர்வுகளைப் (மந்திர ஒலிகளாக) பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

 அந்த மந்திர ஒலி கொண்டு பிறிதொரு போர் முறையில் வரும் எதிரிகளுக்குள் பாய்ச்சி அடுத்த நாட்டுக்காரர்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதற்காக அக்காலங்களில் இவ்வாறு செய்தனர்.

இதனை நாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்க்கலாம். குலதெய்வம் யார் என்றால் “நெருப்பிலே மாண்டவர்கள்…!” என்று தான் வைத்திருப்பார்கள்.

அதன் வழி கொண்டு “அவர்களின் ஆடைகளையும் ஆபரணங்களையும்…” வைத்துக் குல வழியில் நாங்கள் வணங்கி வருகிறோம் என்று தான் சொல்வார்கள்.

“இல்லை…” என்று யாரும் இதை மறுக்க முடியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்த அரசக் காலங்களில் வளர்த்துக் கொண்ட அந்தப் பரம்பரை வழிகளில் தான் வருகின்றனர்.

இன்று நம் குடும்பத்தில் மூதாதையர் இறந்து விட்டால் அந்தக் குல வழியில் நாம் அவர்கள் என்னென்ன வழி மார்க்கங்கள் செய்தார்களோ  அதே போன்று தான் நாமும் அவர்களை வணங்கி வருகின்றோம்.

வணங்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்தக் குடும்பத்தில் யார் பற்று கொண்டனரோ அந்த உடலுக்குள் மீண்டும் வந்து விடுகின்றது.

வந்த பின் அருளாடத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் குடும்பத்தில் சகோதரர் பத்துப் பேர் இருக்கின்றார்கள் என்றால் (அக்காலங்களில் பத்துப் பேர் உண்டு) அங்கு பங்கு பிரிப்பதில் தவறு நடந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் போர் செய்து பிரிந்து விடுவார்கள்.

பிரிந்து கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

1.என் சொத்தை நீ அபகரித்துக் கொண்டாய்…!
2.உன் குடும்பமெல்லாம் சீரழிந்து விடும்…! என்றும்
3.ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொள்வார்கள்.

ஆக கூட்டாக இருந்து நான் சம்பாதித்தேன். என் பங்கை அவன் எடுத்துக் கொண்டான் என்று பகைமை உணர்வுகள் வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை உணர்வு வந்த பின் அந்தக் குலதெய்வம் என்று வணங்கி வந்தவர்கள் அதை வணங்குவதில்லை.

அந்தக் குலதெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் இந்த இரண்டு பேர் பிரிந்த உணர்வுகளில் உடலை விட்டு உயிராத்மா பிரிந்த பின் இவர் சார்புடைய நிலையில் இந்த ஆன்மா புகுந்து குல வழியாக மாறுகின்றது.

அதைப் போன்று அங்கேயும் சகோதரர் பிரிந்து சென்றார் என்ற நிலையில் இறந்தால் அதே குலதெய்வங்களை வணங்கும் பொழுது
1.உயிருடன் இருக்கும் பொழுதே அவர் தொல்லை கொடுத்தார்…!
2.உடலை விட்டுச் சென்றாலும் புகுந்த உயிரான்மாக்கள் இவர்கள் உடலில் அருளாடும்…!

குலதெய்வங்கள் வணங்கும் குடும்பங்களில் அருளாடும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம். அருளாடுபவர்களில் குடும்பங்களில் நிம்மதி இருக்குமா என்றால் இருக்காது. இதேபோலத்தான்
1.குல வழியில் வரக்கூடிய அனைத்தும்
2.நாம் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
3.பழி தீர்க்கும் உணர்வும் பகைமையை வளர்த்துக் கொள்ளும் நிலையும் தான்
4.(அருளாடும் இடங்களில்) குலதெய்வங்களை வணங்கும் பொழுது இம்முறைப்படிதான் வருகின்றது.

குலதெய்வங்களை வணங்குபவர்கள் எல்லாம் இன்றும் ஒவ்வொரு உடலிலும் அந்த உணர்வுகள் கலந்தே தான் வருகின்றது.

ஏனென்றால் சகோதர்களுக்குள் சாபமிட்டு என் சொத்தை அபகரித்து கொண்டார் என்ற உணர்வினைத் தொடரப்படும் பொழுது
1.நம் செவிகளிலும் படுகின்றது.
2.அந்த உணர்வுகள் இரத்தநாளங்களில் கலக்கிறது
3.திருமணமாகி வரப்படும் பொழுது கருவிலே வளரும் குழந்தைக்கும்
4.இதே போல அந்த உணர்வுகள் வழி வழி வந்து பழி தீர்க்கும் உணர்வுகள் வளரப்பட்டு
5.உண்மையின் உணர்வை அங்கே மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்,

மக்கள் அன்பு கொண்டு வாழ்ந்து வரப்படும் பொழுது அங்கே தெய்வீக பண்பையும் உயர்ந்த குணங்களையும் அது வளர்ப்பதற்கு மாறாக பகைமை உணர்வை மாற்றிப்
1.பகைவனை அழிக்க வேண்டும்..
2.அவனைக் கொல்ல வேண்டும்...
3.அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வுகளே குல வழிகளில் வளர்கின்றது.

அன்பு கொண்டு வளரும் பொழுது நல்லாத வளர்க்கவேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் சிறிது குறைகள் வந்து விட்டால் பகைமையான உணர்வாக மாற்றி அவனுக்குத் தீங்கு செய்யும் உணர்ச்சிகளே தான் நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மக்களை விடுபடச் செய்து
1.அவரவர்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்…!
2.அந்த உடல்களை உயிர் உருவாக்கிய ஆலயம் என்று மதிக்கச் செய்…!
3.அந்த ஆலயத்தில் தீமைகள் புகாது தடுத்திடும் நிலையை நீ உருவாக்கு…!
4.ஒவ்வொரு மனிதனும் துயரத்திலிருந்து மீளச் செய்…!
5.துயரத்திலிருந்து அவர்கள் மீண்டிடும் உணர்வைக் கண்டு “நீ சந்தோசப்படு…!”

சாதாரணமாக ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அவனுக்குத் தொல்லைகள் வருவதைப் பார்த்து அவனுக்கு இப்படித் தான் ஆகவேண்டும் என்று நாம் ரசித்தோம் என்றால் அவனுக்குள் வந்த தொல்லைகளும் அந்த துயர உணர்வுகளும் நமக்குள் வந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டி நமக்கும் அந்த நிலை வந்து விடும்.

துயரப்படுபவன் யாராக இருந்தாலும்… அல்லது நமக்கு ஆகாதவனே துயரப்பட்டாலும்…
1.அவர்கள் அறியாத நிலையிலிருந்து விடுபட்டு
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற்று
3.மெய் பொருள் காணும் நிலை பெற்று
4.பற்றும் பாசத்துடன் வளரும் நிலையும் நன்மை செய்யும் உணர்வுகள் அவருக்குள் வளரவேண்டும் என்று
5.இதனை நாம் நுகர்ந்தால் இந்த உணர்வுகள் நம் உயிரான ஈசனிடம் பட்டு
6.அந்த உணர்ச்சிகள் நம் இரத்தநாளங்களில் கலந்து
7.பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

இதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் சொல்…! என்று தான் எனக்குக் குருநாதர் கட்டளை இட்டார்.

அதன் வழி உங்கள் உயிரைத்தான் நான் கடவுளாக மதிக்கின்றேன்.  அவனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற நிலைகளில் மதித்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் பரம்பரை என்ற நிலையில் அரச காலங்களில் ஏற்படுத்திய அந்த நிலைகளை மாற்றி
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் புகுத்தி
2.நல் உணர்வை உங்கள் உடலுக்குள் பெருக்கி
3.நீங்கள் விடும் மூச்சின் அலைகள் ஊருக்குள் பரவும் பொழுது
4.உங்கள் உங்கள் வீடும் ஊரும் அது தெளிந்த நிலை பெரும்.

மகிழ்ந்து வாழும் உணர்வுகளை ஊட்டும் இந்த உணர்ச்சிகளை “நீ அனைவருக்கும் பரப்பு…!” என்றார் குருநாதர்.

உங்களுக்குள் அந்தத் தெளிவான நிலைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அவர் இட்ட கட்டளைப்படித்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அனைத்து மாமகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்…!