ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2018

பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டியது – “மோட்ச தீபம்”


நாம் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து வரும் சமயம் நம் அம்மா அப்பா “என் பிள்ளைக்கு என்ன செய்கிறதோ… ஏது செய்கிறதோ…?” என்று அடிக்கடி வேதனைப்பட்டு இருப்பார்கள்.

பிள்ளை பள்ளிக்கூடம் போகும் பொழுது “ரோட்டில் எங்கேயும் அடிபட்டு விடுமோ… இங்கே அடிபட்டு விடுமோ…! என்பது போன்ற வேதனைகளை எல்லாம் எண்ணி இருப்பார்கள்.

பிறந்த குழந்தையை நாம் பார்க்கிறோம் இல்லையா…! இரவெல்லாம் “நச் நச்சென்று” அழுது கொண்டிருக்கும்.

குழந்தையின் தாயும் “தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமே…” என்று தூங்காமல் முழித்துக் கொண்டு அந்த வேதனையைத் தாங்கி தாய் பிள்ளையைக் காப்பாற்றி இருக்கும்.

நம்மை வளர்ப்பதற்காக வேண்டி இதைப் போன்று சந்தர்ப்பத்தால் எடுத்த வேதனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்குள் வளர்த்து கடைசியில் தாயின் உடல் நலிவடைந்து நோயாகி விடுகின்றது.

நோயாக ஆனபின் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் ஆகி விட்டால்… நாம் என்ன சொல்கிறோம்…?
1.“சனியன் எப்பொழுது தொலையுமோ”ஒரே தொல்லையாக இருக்கிறது
2.“சீக்கிரம் போய்த் தொலைந்தால் பரவாயில்லை…
3.காலா காலத்தில் நாம் நம் வேலையைப் பார்க்கலாம்
4.எங்கே நம் வேலை நின்று விடுமோ தான் நாம் நினைக்கிறோம்.

ஆனால் நம்மைக் காப்பாற்றுவதற்காக நம் தாய் தகப்பனார் எத்தனைப் பாடு பட்டார்கள்… என்று அந்த நேரத்தில் ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்கிறோமா…? இல்லை…!

அந்த நல்ல உணர்வுகள் எல்லாம் சிறு குழந்தையில் நம்மிடம் இருந்தாலும் வளர்ந்த பின் காணாமல் போய் விடுகிறது.

சிறு குழந்தையாக இருக்கும்போது “நாம் கஷ்டப்படுகிறோமே…” என்று நம்மை எண்ணி எண்ணி தாய் தந்தையர் வேதனையுடன் வளர்த்திருக்கின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் தாய் வேதனை உணர்வு கொண்டதால் நம்மை எண்ணும் போது நம்மைப் பார்க்கும் போது வெறுப்பு வந்து விடுகிறது.

பார்…! என் அம்மா ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்திருப்பது போல் தான் என்ன நடத்துகின்றது. என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றது… “இதெல்லாம் ஒரு தாயா…!” என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் நம்மைக் காக்க நல்ல உணர்வுகளை எடுத்தாலும் வேதனைப்படும் பொழுது நஞ்சாகி நம் மேலே வெறுப்பின் உணர்வாக அது மாறி விட்டது.

1.நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வெறுப்பையும் வேதனையையும் எடுத்த
2.அந்தத் தாயைக் காக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நம்மிடம் நல்ல மனதில்லை.

எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறது. “சனியன்…! தொலைந்து போனால் பரவாயில்லை… அது முகத்தில் கூட நான் முழிக்க மாட்டேன் என்று நினைக்கிறோம்.

நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வந்தது தாய். அதை நாம் நினைத்துப் பார்க்கிறோமா..?

என் அம்மாவைப் பாருங்கள்… எப்பொழுது பார்த்தாலும் “நச்…நச்…” என்று பேசிக் கொண்டே இருக்கிறது.. என்று நிறைய பேர் சொல்வார்கள். இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா…?

“இல்லாத கொடுமை எல்லாம் எனக்குச் செய்கிறது”என்று சொல்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அதே போல் “என் அப்பாவும் இப்படித்தான் செய்கிறார்” என்று நினைப்பார்கள்.

தந்தை அவர் ஆர்வத்தோடு அதை இதைக் கஷ்டப்பட்டு செய்து எதையாவது புரட்டிப் போட்டுத் தன் பிள்ளையைப் பசி பட்டினி இல்லாமல் சிரமமில்லாமல் வளர வேண்டும் படிக்க வேண்டும் என்பதற்காக
1.பலரிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்…
2.பல அவஸ்தைப்பட்டு இருப்பார்கள்.
3.இதெல்லாம் அப்பாவிடம் நோயாகி இருக்கும்.

பார்… எங்க அப்பனை…! எப்படி இருந்தார் இப்பொழுது இப்படி ஆகிவிட்டார்… இதெல்லாம் தேவையா…? என்போம்.

நல்ல சட்டையாக (குழந்தைக்குப் பிடித்த) நான் அணிந்து சென்றால் அப்பாவிற்குப் பிடிக்காது.

இந்தச் சட்டையெல்லாம் போடாதே என்று தந்தை சொல்வார்.

உடனே… பதிலுக்கு நாம் என்ன நினைப்போம்..? நீ சும்மா இரு…! எப்பொழுது பாத்தாலும் இப்படியே தான் சொல்லிக் கொண்டு இருப்பாய்… என்று என்று எதிர்த்துப் பேசத்தான் நாம் பழகி வைத்துள்ளோம்.

அவர்கள் அக்கறை கொண்டு நமக்காகச் சிரமப்பட்டார்கள்… நமக்கு நல்ல வழி காட்டுவதற்காக அவ்வாறு செய்தார்கள் என்று அதை நாம் நினைக்கின்றோமா…?

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவோ சிரமப்படுகிறார்கள் செலவழிக்கவும் செய்கிறர்கள். படிக்கச் சென்றால் ஐயாயிரம் பத்தாயிரம் இலட்சம் என்று கேட்கிறார்கள். அதற்காக வேண்டி எத்தனை அலைச்சல் அலைகிறார்கள்,

அப்பா அம்மா நமக்காக இலட்சக் கணக்கில் செலவு செய்து டாக்டருக்கோ இன்ஜினியருக்கோம் மற்ற படிப்பிற்கும் படிக்க வைத்தால் நாம் என்ன செய்கிறோம்..?

அங்கு படிக்கப் போகும் இடத்தில் “ஷோக்” பண்ணிக் கொண்டு “மைனர்” போல் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

“அப்பா பேச்சைக் கேட்டு நட..” என்று கூறினால் அதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. படிக்கும் இடத்தில் நான்கு சிநேகிதர்கள் சேர்ந்து விட்டால் உடனே புரட்சி.

இந்த விஷத்தின் தன்மை கொண்டு தான் நாம் இருக்கின்றோமே தவிர தாய் தந்தையை நினைத்தோ அவர்கள் நம்மை எந்த நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார்களோ அதைப் பற்றியெல்லாம் நாம் சிறிதறவும் எண்ணுவதில்லை.

ஏண்டா நீ இப்படியெல்லம் செய்கிறாய் ஏதாவது கேட்டு விட்டால் உடனே புரட்சி.

பார்…! என்னுடைய கௌரவத்தையே நீ குறைத்து விட்டாய். வரும் போதும் போகும் போதும் நீ இதைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறாய்.
1.நீ தொலைந்தால் பரவாயில்லை
2.இல்லை என்றால் நான் வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்கிறோம்.

பல இலட்சம் படிப்புக்காகச் செலவழித்தாலும் இப்படிப் பையன் பேசியவுடன் அடடே நீ வீட்டை விட்டுப் போகாதே என்று
1.தன் பையனுக்கு வேதனை வரக் கூடாது என்று
2.அவர்கள் தான் வேதனையைத் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்க்கின்றார்கள்.

ஒவ்வொரு நிலைகளிலும் இப்படி நமக்காகப் பாடுபட்ட அந்த அன்னை தந்தையை நாம் எப்படி மதிக்க வேண்டும். விநாயகரைக் கும்பிடும் போது நாம் எப்படி வணங்க வேண்டும்..?

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று நம் அழுக்கைத் துடைத்து விட்டு
1.நம் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அம்மா அப்பாவின் உணர்வுகள் எல்லாம் என் உடலில் உள்ளது
3.என்னைக் காப்பதற்காகப் பட்ட விஷமான நஞ்சுகள் அவர்கள் உடலில் இருக்கின்றது
4.என்னைப் பாசமாக வளர்த்த உணர்வுகள் அங்கே இருக்கிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து எனக்காகக் கஷ்டப் பட்ட அந்த நஞ்சின் வேதனைகள் மறைய வேண்டும்.

என் தாய் தந்தையர் அந்த மெய் ஒளியின் சுடருடன் சுழன்று என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை சப்தரிஷி மண்டலத்திற்குள் உந்தித் தள்ள வேண்டும்.
1.அவர்களின் நினைவு கொண்டு
2.இந்த நினைவின் தன்மையை உந்தித் தள்ள வேண்டும்.

சூரியன் தனக்குள் வந்து மோதும் அல்ட்ரா வயலட் விஷத்தைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளி மயமாக மாற்றுகின்றது

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் இணைத்தால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக பேரொளியாக அங்கே வாழத் தொடங்குவார்கள்.

அதாவது சூரியன் எப்படி நஞ்சைப் பிரிக்கின்றதோ அதைப் போல மனித வாழ்க்கையில் நம்மைக் காத்திட்ட
1.தாய் தந்தையரின் உடலுடன் கலந்த நஞ்சினை
2.சரீரமற்ற நிலைகளில் அந்த நஞ்சைப் பிரித்து விட்டு
3.சூரியன் ஒளிச் சுடராக இருப்பது போல்
4.அன்னை தந்தையருடைய உயிராத்மாக்கள் ஒளிச் சுடராக அங்கே மாறும்.

நம்மை உருவாக்கி வளர்த்த தாய் தந்தை முன்னோருக்குச் செய்ய வேண்டிய தலையாயக் கடமையாகும். இப்படிச் செய்தால் தான் நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தமாகும்.

அகஸ்தியன் கொடுத்த விநாயகர் தத்துவப் பிரகாரம் “மோட்ச தீபம்…!” என்பதும் இதுவே ஆகும்.