ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2018

துப்பாக்கியால் சுடப்பட்ட பின் காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…?


யாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…?

ஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று தான் அவர் கூறினார்.

அப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்…! தண்டனை கொடுப்பார்கள்…! என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்…,
1.அறியாமல் செய்துவிட்டார்கள்…
2.அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…!
3.(இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று
4.எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

அவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது
1.அதே உணர்வுகள் நமக்குள் வந்து
2.நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.

இத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது  என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.

கோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…!” என்று அவர் சொல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.

இதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.

1.அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்
2.அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி  
3.ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.
4.அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
5.நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார்.
6.அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.

நாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்
1.மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும்
2.நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக
3.உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்

அமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.

ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

காந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,

எதற்காக…?

பிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.

அனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்…! என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.
1.அவர் எப்படி அந்தத் தவத்தின் வலிமை கொண்டு இருந்தாரோ
2.அதைப் போல அவரின் ஆற்றலை நாமும் எடுப்போம்
3.ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமையே வராது நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.

தவறு செய்வோரின் உணர்வை நாம் நுகராது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுவோம். மகரிஷிகளின் உணர்வை அவர்களுக்கும் பெறச் செய்வோம்.

மகரிஷிகளின் துணை கொண்டு தவறற்றவர்களாக நாம் எல்லோரையும் உருவாக்குவோம்.