நம் எண்ண ஈர்ப்பைச் சித்தன் பால் தந்தோமானால்… மெய் ஞானம் பெறலாம்
சூரியனும் சூரியனில் இருந்து வெளிவரும் சக்தி அலையை நம்
பூமியும் எடுக்காவிட்டால் பூமியின் வளர்ச்சி… நிலையாய்த்
தோன்றி இருக்காது.
வளர்ந்த பின்னும் அதன் ஈர்ப்பில் பூமி எடுத்துக் கொள்ளும் நிலை
தொட்டுத்தான் இன்றளவும் உருண்டோடி பலவான ஒன்றாகி…
ஒன்றில் பலவாகி வாழுகின்ற இப்பூமியின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதனதன் ஈர்க்கும்
செயல் முறைக்கொப்ப வளர்ச்சி நிலையும் எண்ண நிலையும் அததுவே தான் எடுத்துக்
கொள்கிறது.
மனிதனின் ஈர்ப்பு நிலையின் குண நிலை அமைவதுவும் அவன் எடுத்துக்
கொண்ட ஆரம்ப வளர்ச்சி நிலை அமில குணத்தின் தொடரினால் ஒவ்வொருவரின் அறிவு நிலையும்
அதற்குகந்த செயலாற்றும் திறமையும் அதன் வடிவ வட்டத்துக்குகந்த எண்ண ஓட்டத்தின்
ஈர்ப்பை எதில் அவன் அகிகப்பட்டு வளர்த்துக் கொள்கின்றானோ அதன் வளர்ப்பு அமிலத்தின்
கூட்டு நிலையின் எண்ண மோதலுடன் இவன் எண்ண மோதலுக்குகந்த மற்ற ஆவிகளின் எண்ண
மோதலையும் வளர்ச்சியுடன் ஈர்க்க வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை
ஒத்துத்தான் அவனது அறிவாற்றல் குணமும், உடல்
உறுப்பும், உருவமும் இருந்திடும்.
1.எந்த ஆண்டவனும் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை.
2.எல்லாமும் ஒன்றாக ஒன்றிலே எல்லாமும் உள்ள
பொழுது எதன் அடிப்படை சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ
3.அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு அறிவாற்றலும்
வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.
ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல்
நிலையில் வாழும் பொழுது… அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின்
வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் ஒரு மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும்
நிலைக்கொப்ப ஆவிகளின் தொடர்பு நிலையும் ஏற்படுகின்றது.
மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப
பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த
இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி
ஓட்டத்தைத் தான் அவ் இயந்திரம் எடுத்து ஓடுகின்றது.
அதைப் போல்
1.எதன் அடிப்படையில் எதன் விகித நிலைக்கொப்ப
ஒவ்வொரு ஆத்மாவின் எண்ண சுவாசம் உள்ளதோ
2.அதன் சக்தி நிலையைத் தான் அவன் பெற முடியும்.
அதன் செயலில்தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி ஆண்டவனைப் பல
கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வணங்கி வந்து பூஜித்து சக்தி பெறுவதல்ல.
எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண
அமிலத்தினால் பலவாக உள்ள இக்காற்றின் அமிலத்திலிருந்து நமக்குகந்த அமிலத்தை நாமாக
எடுத்துக் கொள்ளலாம்.
1.இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும்
இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில்
2.நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த
சித்தரின் பால் நம் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்
3.உடலுடன் மனித உலக வாழ்க்கையில் பிம்பப்
பொருளைக் கண்டு பொருளாக வாழும் இவ்வாழ்க்கையில் இருந்து பெற முடியாத ஞானத்தை
4.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால்
செலுத்தி
5.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை
நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
6.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும்
வழிமுறைப் பாதை தெரிந்து கொள்ளலாம்.
7.பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய
வழியில் எத்தடங்கலும் இருக்காது.
பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி ஓ…ம் என்ற ஒலியுடன்… சித்தன் பால் நம் எண்ண ஈர்ப்பு
சக்தியை நாம் தந்தோமானால்… “மெய் ஞானம்
பெறும் வழி ஞானம் அறியலாம்…”
ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை
உலகளவுக்கு உணர்த்தலாம்.
1.ஞானிகளும் சப்தரிஷிகளும் தம் வளர்ச்சியை
ஏற்படுத்திக் கொண்டு இருக்காவிட்டால்
2.நம் பூமியில் மனிதன் ஞானம் இன்று, ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது.
3.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி
சக்திகள் இவ்வுலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
மனித ஞானம் எல்லாமே ஞானத்தின்பால் செல்லும் வழி முறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தான் வலுவான விந்தை காணத் துடிக்கின்றது.
மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுத்தான் பூமியின்
சுழற்சியுடன் அதிகப்பட்டு மோதி உயிர்ப்பலிகள் அதிகமாகி… ஆவியின் சூழ்ச்சியில் அல்லலுக்குகந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் என்பதனை
அறியாமல் அல்லவா வாழ்கின்றான் இன்றைய மனிதன்.
தனதாக உள்ளது எது…? என்பதுவும்
இம் மனித ஞானத்திற்கு புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை. காற்றையும்
நீரையும் நிலத்தையும் தன்னுளுள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து வாழும் மனிதன்
தானாக வாழ்கின்றானா…? தனது என்ற பேராசைக்கார மனிதன்?
1.ஒன்றின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்றில்லாமல்
வாழவே முடியாத மனிதன்… நான் என்ற நானாக வாழுகின்றானாம்.
2.ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின்
ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா.